Saturday, 28 September 2019

நிலுவையில் 1.66 இலட்சம் பாலியல் வழக்குகள் - இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவு!


சமீபத்தில் வெளிவந்த ஆய்வறிக்கையொன்று இந்திய தேசத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில், இன்னும் 1.66 இலட்சத்திற்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், நாட்டில் உள்ள 389 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 - க்கும் மேலான பாலியல் வழக்குகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும், வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. மேலும், இந்த வழக்குகள் அனைத்தும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழுள்ள வழக்குகள் எனவும் தெரிவித்துள்ளது.

போக்ஸோ சட்டம் (POCSO)


கடந்த 2012 ஆம் ஆண்டு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக (The Protection of Children from Sexual Offenses) உருவாக்கப்பட்ட சட்டமாகும். இந்த சட்டத்தின் சிறப்பம்சங்களை இங்கு காண்போம்:

> பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான குழந்தைகள் (ஆண்/பெண்) பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானால், இந்த சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்படும்.

> இந்த சட்டத்தின் 3 மற்றும் 4 ஆம் விதிப்படி, குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவருக்கு, குறைந்தபட்ச தண்டனையாக 7 வருட சிறையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 5 மற்றும் 6 ஆம் விதிப்படி, குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர், குழந்தையின் பெற்றோர், பாதுகாவலர், காவல்துறையை சார்ந்தவர் அல்லது ஆசிரியராக இருப்பின், குறைந்தபட்ச தண்டனையாக 10 வருட சிறையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 7 மற்றும் 8 ஆம் விதிப்படி, குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை (private parts) தொடுவது அல்லது மற்றவர்களின் அந்தரங்க உறுப்புகளை தொட வற்புறுத்துவது போன்ற குற்றங்களுக்கு, குறைந்தபட்ச தண்டனையாக 3 வருட சிறையும், அதிகபட்சமாக 8 வருட சிறை தண்டனையும் அளிக்கப்படும். அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 9 மற்றும் 10 ஆம் விதிப்படி, குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை (private parts) தொடுவது அல்லது மற்றவர்களின் அந்தரங்க உறுப்புகளை தொட வற்புறுத்துவது போன்ற குற்றங்களை செய்தவர் பெற்றோர், பாதுகாவலர், காவல்துறையை சார்ந்தவர் அல்லது ஆசிரியராக இருப்பின், குறைந்தபட்ச தண்டனையாக 5 வருட சிறையும், அதிகபட்சமாக 7 வருட சிறை தண்டனையும் அளிக்கப்படும். அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.அத்துடன், அபராதமும் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 11 மற்றும் 12 ஆம் விதிப்படி, குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, போன்களில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியலுக்கு அழைப்பது போன்ற குற்றங்களுக்கு, அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 13 மற்றும் 14 ஆம் விதிப்படி, குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது போன்ற குற்றங்களுக்கு, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்படும்.

> இந்த சட்டத்தின் 18 ஆம் விதிப்படி, குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

> பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பவருக்கு, குற்றத்தினை செய்தவருக்கு என்ன தண்டனையோ அதே தண்டனை வழங்கப்படும்.

> இந்த சட்டத்தின் கீழ், ஒருவர் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டால், பாதிப்புக்குள்ளானவர் குற்றத்தை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்தான் தவறு நடக்கவில்லை என நிரூபிக்கவேண்டும். அத்துடன், வழக்குத் தொடரப்பட்ட சிறுவர்/சிறுமியரை விசாரிக்கும்போது, காவல்துறையினர் சீருடையில் இருக்கக்கூடாது மற்றும் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக்கூடாது.

> பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுவர்/சிறுமியர் பெயரையும், அடையாளத்தையும், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. காவல்துறையும் வெளியிடக் கூடாது‌. அத்துடன், இந்த வழக்குகள் ஒரு வருடத்திற்குள் விரைந்து முடிக்கவேண்டும்.

சிறப்பு நீதிமன்றங்கள்:


இதுவரை நிலுவையில் உள்ள ஒரு இலட்சத்து அறுபத்து ஆறாயிரம் (1.66 இலட்சம்) வழக்குகளை விரைந்து முடிக்க நாடு முழுவதும் சுமார் 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் புதியதாக அமைக்கப்படுகின்றன. நீதி மன்றத்தின் எண்ணிக்கையானது, அந்தந்த மாநிலத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைப்ப் பொறுத்து அமையும். இதன்மூலம், ஆண்டொன்றுக்கு ஒரு நீதிமன்றத்தில் 165 வழக்குகள் தீர்த்து வைக்கப்படும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதலிடம்:



அண்மையில், தாமஸ் ரியூட்டர்ஸ் பவுண்டேசன் (Thomas Reuters Foundation) என்னும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், 2018 ஆம் ஆண்டுக்கான பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் முறையே ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் சோமாலியா நாடுகள் உள்ளன.

உலகிற்கே நாகரீகத்தை கற்றுக்கொடுத்த நாடு, பெண்களை தெய்வமாக கருதும் நாடு, பாயும் நதிகளுக்கு பெண்களின் பெயரைச்சூட்டி வணங்கிடும் நாடு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் முதலிடத்தில் உள்ளதென்பது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தலைகுனிவாகத்தான் எண்ணவேண்டும்.

கடுமையான சட்டங்கள்:


சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது, "பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கவேண்டும்" என்ற கருத்திற்கு ஆதரவுகள் மேலோங்கி நிற்கும். ஆனால், உண்மையில் தூக்கு தண்டனை ஒரு தீர்வா என ஆராய்ந்தால் நிச்சயம் தீர்வாகாது. ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும் என்ற சட்டத்தினால், அனைவரும் ஹெல்மெட் அணிந்துவிட்டார்களா என்ன? ஆக, கடுமையான சட்டங்கள் பொதுவெளியில் மட்டுமே தவறுகளை குறைக்குமே தவிர ஒருபோதும் குற்றம் நடவாமல் இருக்காது. 

பாலியல் குற்றங்கள் முற்றிலும் இல்லாமல்போக என்ன செய்யவேண்டும்?

> பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் பாலியல் கல்வியை பள்ளிக்கல்வியிலிருந்தே இருபாலருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

> பெண், காம இச்சை போக்கும் இயந்திரமல்ல தம்மைப் போன்றதொரு மனித உயிரே என ஆண்கள் உணர்ந்திட வேண்டும்.

> ஆண் பெண் பாகுபாடற்ற சமூகத்தை அமைத்திடல் வேண்டும். 


நன்றி,
ஊமை இளைஞன் 

No comments:

Post a Comment