Sunday, 15 September 2019

நாம் வாங்கும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் இத்தனை விஷயங்கள் இருக்கா?

 

கடைக்கு சென்று கடைக்காரரிடம் 1/2 லிட்டர் பால் கொடுங்கள் என்று கேட்போம். அப்பொழுது அவர் எண்ண கலர் பால் வேண்டுமென்று கேட்பார். நாமும் "ஏதோ ஒன்னு கொடுங்க" என்று வாங்கிட்டு வருவோம். சில நேரங்களில் ஒவ்வொன்றின் விலையை கேட்டுவிட்டு     தேவைக்கு ஏற்றாற்போல் வாங்கிகொண்டு வருவோம். எல்லாமே 1/2 லிட்டர்தானே ஏன் விதவிதமான வண்ணங்கள், ஒவ்வொரு வண்ணங்களுக்கும் தனித்தனியான விலை நிர்ணயம் என என்றாவது யோசித்திருப்போமா? இல்லையெனில் வாருங்கள் அதைப்பற்றி இங்கு காணலாம்....

ஆவின் நிறுவனம்: 

தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமானது ஆவின் என்னும் வணிகப்பெயரில் அழைக்கப்படுகிறது. பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை இதன் பணிகளாகும்.

ஆவின் நிறுவனமானது நான்கு விதமான வண்ணங்களில் பால் பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கு வழங்குகிறது.

1. மெஜந்தா
2. நீலம் 
3. பச்சை 
4. ஆரஞ்சு 

இந்த வண்ணங்களானது அதில் அடங்கியுள்ள பாலின் அடர்த்தி மற்றும் கொழுப்புச்சத்தின் அளவைப் பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk): 

பால் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் பாலின் தேவையை சரி செய்வதற்காக, கொழுப்புசத்து அதிகமுள்ள பாலில் தண்ணீர் சேர்த்து அதில் அடங்கியுள்ள கொழுப்புச் சத்துக்களை குறைத்தும் பால் திடப்பொருட்களின் அளவை ஏற்றியும்  பாலின் கொள்ளளவை அதிகரிக்கின்றனர். எந்தெந்த பால் பாக்கெட்டுகள் எப்பொழுது யாருக்கு வாங்கவேண்டும் என்பதை இங்குக் காண்போம். 

மெஜந்தா (Double Toned Milk):  


மெஜந்தா நிற பாக்கெட்டுகளில் உள்ள இந்த பாலானது இருநிலை சமன்படுத்தப்படுகிறது. இதில், 1.5 சதவீத கொழுப்புச்சத்து மட்டுமே உள்ளது. ஆதலால் இந்தப்பாலை கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்கள் பருகலாம். இந்த பாலானது, வீடற்ற இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக UNICEF தயாரிக்கிறது. 
இந்தப்பாலின் ஒருலிட்டர் விலை ரூ. 40.

நீலம் (Toned Milk):  


ஒருமுறைசமன்படுத்தப்பட்டுகிறது. நீலநிற பாக்கெட்டுகளில் உள்ள இந்த பாலில் 3 சதவீத கொழுப்புச்சத்து  உள்ளது. இந்தபாலை டீ மற்றும் காஃபி பயன்பாட்டுக்கு நீர் கலக்காமல் பயன்படுத்தலாம். இந்தப்பாலின் ஒருலிட்டர் விலை ரூ. 43.

பச்சை (Standardised Milk):  
பச்சைநிற பாக்கெட்டுகளில் உள்ள பால் தரப்படுத்தப்பட்ட அல்லது நிலைப்படுத்தப்பட்ட பாலாகும் . இதில் 4.5 சதவீத கொழுப்புச்சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அத்துடன், தயிர், வெண்ணெய் மற்றும் நெய் உற்பத்திக்காகவும் பயன்படுத்தலாம். இந்தப்பாலின் ஒருலிட்டர் விலை ரூ. 47.

ஆரஞ்சு (Full Cream Milk or Fresh Milk): 


விலங்குகளிடமிருந்து (பசு, எருமை, முதலியன)  கிடைக்கும் பாலை அப்படியே நுகர்வோருக்கு கொடுப்பது. இந்த பாலில் 6 சதவீத கொழுப்புச்சத்து அடங்கியுள்ளது. பால்பொருட்கள் மற்றும் இனிப்புகள் செய்வதற்கு இந்தப் பாலை உபயோகிக்கலாம். இந்தப்பாலின் ஒருலிட்டர் விலை ரூ. 51.

பால்விலை உயர்வுக்கு மக்களிடம் வரவேற்பு: 

மக்கள்தொகை நாளுக்குநாள்  அதிகரித்துக்கொண்டிருப்பதால் பாலின் தேவையும் அதிகரிக்கிறது. பாலின் கொள்முதல் பெரும்பாலும் கிராமப்புறங்களிருந்தே கிடைப்பதாலும்,  பசுந்தீவனம், கலப்புத் தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதாலும் ஆவின் நிறுவனம் பாலின் விலையை உயர்த்தியது. ஆனால், கிராமப்புற மற்றும் விவசாய பெருங்குடி மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, பால்விலை உயர்த்தப்பட்டதற்கு மக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது வரவேற்கத்தக்க செய்தியாக இருந்தது.


நன்றி ,
ஊமை இளைஞன் 

No comments:

Post a Comment