Wednesday 25 September 2019

டோல்கேட்டில் கொடுக்கப்படும் இரசீதில் (Receipt) உள்ள பயன்கள்


நாம் நமது காரிலோ அல்லது வேனிலோ நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது இடையே அமைந்துள்ள சுங்கச்சாவடியில் (டோல்கேட்) கட்டணம் செலுத்தவேண்டும். இந்த சுங்க கட்டண வசூலுக்கு அனைத்து மக்களிடமும் எதிர்ப்பு உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த சுங்க கட்டணங்கள் எதற்காக வசூலிக்கிறார்கள் என்பது இங்கு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வாருங்கள் அதைப்பற்றி இங்கு காண்போம்.

சுங்கச்சாவடிகள்:

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டு, சுங்கசாவடிகள் அமைத்து அதன்வழியே கடந்துசெல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சாலைகளை எந்த கட்டுமான நிறுவனம் கட்டுகிறதோ அந்த கட்டுமான நிறுவனங்களுக்கே அரசு லீசுக்கு விடுகிறது. சுங்கச்சாவடிகளை லீசுக்கு எடுக்கும் தனியார் நிறுவனங்கள், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தேவைப்பட்டால் சுங்கக் கட்டணங்களை 10 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்தியா முழுவதும் 490 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 46 சுங்கச்சாவடிகள் உள்ளன.

வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் மாறுபடும். இந்த கட்டணமானது, சாலையின் அமைப்பு, சாலையின் அகலம், அமைக்கப்பட்டுள்ள மேம்பாலங்கள், கழிப்பிட வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் அவசர தொலைபேசி முதலியவற்றை கணக்கில்கொண்டு வசூலிக்கப்படுகிறது.

சுங்கச்சாவடிகளின் விதிமுறைகள்: [நன்றி: தினகரன் நாளிதழ்]

1) கடந்த, 2008ல் திருத்தி அமைக்கப்பட்ட, சுங்க கட்டண சட்ட விதிகளின்படியே, கட்டணம் வசூலிக்க வேண்டும். அதன்படி, ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் இடையே குறைந்த பட்சம், 60 கி.மீ., இடைவெளி இருக்க வேண்டும்.

2) ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை உயர்த்தலாம். 2008ம் ஆண்டுக்கு முன் அமைத்த சாலைகளுக்கு, ஒரு ரூபாய்; அதன்பின் அமைக்கப்பட்ட சாலைகளுக்கு, ஐந்து ரூபாய் என, கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்.

3) சாலையில், 75 சதவீதம் விரிவாக்கப் பணியைமுடித்தபிறகே, சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும். திட்ட மதிப்பீட்டு கட்டணம் முழுவதையும் வசூலித்த பின், கட்டணத்தை, 40 சதவீதமாக குறைக்க வேண்டும்.

4) விதிமுறையை மீறி, அதிக எடை ஏற்றிச்செல்லும் வாகனங்களிடம், 10 மடங்கு அபராதம் வசூலிக்க வேண்டும். அதிக எடை ஏற்றிச்செல்ல, எந்த வாகனத்தையும்அனுமதிக்க கூடாது.

5) வாகன ஓட்டுனர்கள், பயணிகளுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

6) உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்.

சுங்கச்சாவடி ரசீது:

சுங்கச்சாவடியில், வாகனத்திற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணமானது சாலைகளை பராமரிப்பதற்கு மட்டுமல்ல. வசூலிக்கப்பட்ட கட்டணத்திற்கு வழங்கப்பட்ட இரசீதைக்கொண்டு பின்வரும் உதவிகளை பெறலாம்:

1) நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டாலோ அல்லது அவசர மருத்துவ உதவி ஏதேனும் தேவைப்பட்டாலோ, இரசீதின் பின்பக்கம் உள்ள எண்ணுக்கு தொடர்புகொண்டு மருத்துவ அல்லது ஆம்புலன்ஸ் வசதியினைப் பெறலாம்.

2) நெடுஞ்சாலையில் சென்ற வாகனம் பழுதாகியோ அல்லது பஞ்சராகி நின்றாலோ, அதிலுள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டால், வாகனத்தை பழுதுபார்க்க விரைந்து ஆட்கள் வந்துவிடுவார்கள். அத்துடன், அது அவர்களின் கடமையாகும்.

3) நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கையில் பெட்ரோல் அல்லது டீசல் இல்லாமல் வாகனம் நின்றுவிட்டால், அதிலுள்ள எண்ணுக்கு தொடர்புகொண்டால் 5 முதல் 10 லிட்டர் வரை பெட்ரோல் அல்லது டீசலைக் கொண்டுவந்து தருவார்கள். இதற்கு நாம் தனியாக கட்டணம் செலுத்தவேண்டும்.
ஆனால், இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரிவதில்லை.அதனாலேயே, பலர் இதனை எதிர்க்கிறார்கள். அதற்காக, இதனை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. மக்கள் ஒரு திட்டத்தை எதிர்க்கும்போது அல்லது அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது, அதன் நன்மை மற்றும் தீமைகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

அனுமதி இலவசம்:


சுங்கச்சாவடியில், ஆம்புலன்ஸ், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்தவர்கள் செல்லும் வாகனங்கள் (குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத்தலைவர், முதலமைச்சர், ஆளுனர், காவல்துறை, நீதிபதிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் அடங்குவர்) இலவசமாக அனுமதிக்கப்படுகிறது.

சில நேரங்களில் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தங்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டி சுங்கச்சாவடிகளில் உள்ள அலுவலர்களிடம் தகராறு செய்வதை ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் கண்டிருப்போம். ஆனால், அவர்களின் செயலுக்கு எந்தவொரு அரசியல் தலைவரிடமிருந்தும் கண்டிப்போ அல்லது அறிவிப்போ வந்ததில்லை. கடைசிவரைக்கும் போராடி கட்டணத்தை சரியாக செலுத்துவது சாமானியர்கள் மட்டுமே.

நன்றி,
ஊமை இளைஞன்

No comments:

Post a Comment