கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம்:
கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம் நம் நாட்டிற்கு புதிதல்ல. ஏற்கெனவே 1980களில் கழிவுநீரை குடிநீராக்கி சிபிசிஎல், எம்எஃப்எல் போன்ற நிறுவனங்களுக்கு குடிநீர் வாரியம் வழங்கியது. அதன் நீட்சியாக, குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்திருக்கும் இந்த வேளையில், மக்களுக்கும் அதுபோன்ற திட்டத்தை பயன்படுத்தி குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் முதலில் சென்னையில் அமலுக்கு வருகிறது.
சென்னை மக்களுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக சுமார் 1200 மில்லியன் லிட்டர் தண்ணீரும், குறைந்த பட்சமாக 830 மில்லியன் லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. இதில் 50 சதவீத நீர் எரிகளிலிருந்தும், 25 சதவீத நீர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமாகவும், மீதமுள்ள 25 சதவீத நீர் நிலத்தடி நீரிலிருந்தும் கிடைக்கிறது. ஆனால், அனைத்து மக்களுக்கும் நீர் ஆதாரம் சரியாக கிடைக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்பதே உண்மை.
சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 550 மில்லியன் லிட்டர் கழிவுநீராக வெளியேறுகிறது. இதில் 1 சதவீதம் மட்டுமே திடக்கழிவு நீர். ஆகவே, இந்த நீரை சுத்திகரித்து பயன்பாட்டுக்கு கொடுத்தால், சென்னை மக்களின் தண்ணீர் பற்றாக்குறைக்கு தேவைக்கு தீர்வு கிடைத்துவிடும்.
கழிவுநீர் சுத்திகரிப்பு முறை:
1) கழிவுநீர் சுத்திகரிப்பில், முதலில் கழிவுநீரிலுள்ள திடப்பொருட்கள் நீக்கப்படும்.
2) சிறுதுகள்கள் மற்றும் நுண்கிருமிகள் நீக்கப்படும்.
3) மூன்றாவதாக, அல்ட்ரா பில்ட்ரேஷன் (Ultra Filtration) முறைமூலம் அனைத்து துகள்களும் நீக்கப்பட்டு குளோரின் மற்றும் ஓசோன் சேர்க்கப்படுகிறது, இந்த நீரானது இந்தியாவின் IS 10500 தரத்தைக் கொண்டதாக உள்ளது. இருப்பினும், இந்த நீரானது குடிநீர் பயன்பாட்டிற்கு கொடுக்காமல், ஏரிகள் மற்றும் குளங்களில் விடப்பட்டு, மீண்டும் சுத்திகரிக்கப்படுகிறது.
சென்னையில், கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கோயம்பேடு - 60 மில்லியன் லிட்டர் குடிநீர்
நெசப்பாக்கம் - 60 மில்லியன் லிட்டர் குடிநீர்
பெருங்குடி - 60 மில்லியன் லிட்டர் குடிநீர்
கொடுங்கையூர் - 80 மில்லியன் லிட்டர் குடிநீர்
மேற்கண்ட கணக்கின்படி, சுமார் 260 மில்லியன் லிட்டர் சுத்தமான நீரை பெறலாம். இந்த திட்டங்கள் அனைத்தும் 2021 ஆம் ஆண்டுக்கும் முடிக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
திட்டத்தின் மதிப்பு:
கழிவுநீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு சுமார் 1400 கோடி ரூபாய் ஆகும் என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆகும் செலவானது, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தைவிட குறைவானதாகவே உள்ளது. உதாரணத்திற்கு, ஆயிரம் லிட்டர் கடல்நீரை குடிநீராக்குவதற்கு ரூ. 60 செலவாகிறது ஆனால் இதேஅளவு கழிவுநீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.6 லிருந்து ரூ.23 வரை மட்டுமே செலவாகிறது. மேலும், இத்திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மழைநீர் சேமிப்பு:
கடல் நீரை குடிநீராக்குவது, கழிவு நீரை குடிநீராக்குவது முதலிய திட்டங்கள் மூலம் அரசுக்கு பெருமாளவு செலவு ஏற்படுகிறது. மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வேளையில் தண்ணீரின் தேவையும் தட்டுப்பாடும் அதற்குமேல் அதிகரித்து வருகிறது. இந்த திட்டங்கள் நன்மை பயக்குமெனினும், கடல் மற்றும் கழிவுநீரை குடிநீராக்குவதற்கு பதிலாக, மழை பெய்யும் காலங்களில் கழிவுநீரிலும், கடலிலும் வீணாகக் கலக்கும் மழைநீரை ஆங்காங்கே மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைத்து அந்தநீரை சேமித்து மக்கள் குடிப்பதற்கு ஏற்ற நன்னீராக்கினால் இன்னும் செலவு குறைவாகும்.
தூர்வாரப்படாமல் இருக்கும் ஏறி, குளங்களை சரியாக பராமரித்து மழைக்காலங்களில் உபரிநீர் வெளியேறாமல் தேக்கிவைத்தல் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவை உயர்த்துவதோடு வருங்கால சந்ததிகளின் தண்ணீர்ப் பற்றாக்குறையை குறைக்கும் முன்னோடித் திட்டமாக அமையும்.
நன்றி,
ஊமை இளைஞன்
No comments:
Post a Comment