Thursday 12 September 2019

மரங்களில் ஆணி அடித்தால் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ. 25000 அபராதம்


சமீபத்தில் சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட "மரங்களின் மீது விளம்பரப் பதாகைகள் இருந்தால் ரூ. 25000 அபராதம்" என்ற அறிக்கை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சாலையோர மரங்கள்:
சென்னை மட்டுமல்லாது நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் அமைந்துள்ள சாலைகளின் இருபுறமும் பல்வேறு மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த மரங்கள் அனைத்தும் நகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்க அந்தந்த ஊர்களின் மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள், பஞ்சாயத்துக்கள் மூலம் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது (சில இடங்களில் மட்டும்). ஒரு மரம் நன்றக வளர நல்ல நில அமைப்பு, சூரிய ஒளி மற்றும் காற்று அவசியம். முக்கியமாக, இயற்கைக்கு மாறாக எந்தவொரு தொந்தரவும் இருக்கக்கூடாது.

விளம்பரப் பதாகைகள்:
சில தனியார் நிறுவனங்கள் தங்களது இலாபத்திற்காக பல நேரங்களில் சாலையோர மரங்களில் ஆணி அடித்தும் கயிறுகளைக் கட்டியும் தங்களது விளம்பர பதாகைகளை வைக்கின்றனர். அத்துடன் மின் விளக்குகளால் அலங்கரித்து வாடிக்கையாளர்களை வரவேற்கின்றன. இதன் காரணமாக, மரத்தின் வாழ்நாள் குறைந்து முன்னதாகவே வலுவிழந்துவிடுகிறது. வலுவிழந்த மரங்கள் சில நேரங்களில் காற்று பலமாக வீசும்போது முறிந்து விழுகின்றன. இதுபற்றி, சென்னை மாநகராட்சியிடம் புகார் அளிக்கப்பட்டடு அதன்பேரில் இந்த நடவடிக்கையை மாநகராட்சி எடுத்துள்ளது.

மாநகராட்சி அறிவிப்பு:

சாலையோரங்களில் இருக்கும் மரங்களில் ஒட்டப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் விளம்பரப் பதாகைகள், மரத்தின் மீது சுற்றியுள்ள மின்கம்பிகள் மற்றும் கேபிள்கள் முதலியவற்றை அடுத்த 10 நாட்களுக்குள் நீக்காவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை அல்லது ரூ.25000 வரை அபராதம் அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சியின் ஆணையர் திரு. பிரகாஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.

அத்துடன், இதுபோன்ற விளம்பர பதாகைகளை பொதுமக்கள் பார்க்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது, 1913 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு இலவசமாக புகார் அளிக்கலாம். பொதுமக்கள் இந்த நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து மரங்களை பாதுகாக்க உதவவேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுள்ளது.

நன்றி,
ஊமை இளைஞன்

No comments:

Post a Comment