Saturday, 21 September 2019

மனிதனின் சிறுநீரிலிருந்து பயிர்களுக்கு உரம்


மனிதனின் உணவுத்தேவை அதிகரித்து வரும் நிலையில் அதன் உற்பத்தி மிகவும் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான விவசாயக் குடிமக்கள் விவசாயத்தை தவிர்த்து மாற்று வேலைகளுக்கு சென்றுவிட்டது ஒரு காரணமாக இருந்தாலும், அவர்கள் விவசாயத்தை தவிர்த்ததற்கு முக்கிய காரணம் சரியான விளைச்சலின்மை. பண்டைய காலங்களில் மண்ணின் உரமாக இருந்தது செடி கொடிகள், இலைகள், தழைகள் மற்றும் கால்நடைக் கழிவுகள் மட்டுமே. இன்றோ, விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் கொடுக்கப்படும் யூரியா போன்ற பூச்சிக்கொல்லி உரங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்தி மண்ணானது மலடாகும் தன்மைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையே, இயற்கை ஆசான் நம்மாழ்வார் அவர்கள், "மண்ணின் வளம் மனித மற்றும் மாட்டுக் கழிவுகளால் மேம்படும்" என்றார். அதற்கு ஆதரவாக, சமீபத்தில் இறக்குமதி செய்யப்படும் யூரியா உரத்திற்குப் பதிலாக, மனிதனின் சிறுநீரிலிருந்தே இயற்கை உரத்தை தயாரித்து பயிர்களுக்கு அளிக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

சிறுநீரில் உரம்:

சமீபத்தில், ஐரோப்பிய கடல் கண்காணிப்பு அமைப்பு (இ.ஓ.ஓ.எஸ்.,) குளியலறை கலன்களை தயாரிக்கும் லாபென் மற்றும் சுவிட்சர்லாந்து நீர் ஆராய்ச்சி நிலையம் (இ.ஏ.டபிள்யூ.ஏ.ஜி.) ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து மனிதக் கழிவுகளிலிருந்து இயற்கை உரத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உரம் தயாரிப்பதற்கு தேவைப்படும் நைட்ரஜன் வாயுவை பிரித்தெடுக்க அதிக ஆற்றல் தேவைப்படும். இதற்கு மாற்றாக வீணாக வெளியேறும் சிறுநீரிலிருந்து நைட்ரஜனை பிரித்தெடுக்கும் பணியை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றனர்.  மனித சிறுநீரில் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதிலிருந்து பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை பிரித்தெடுத்து அதிலிருந்து உரம் தயாரிக்கப்படுகிறது.

1) முதலில் இ.ஓ.ஓ.எஸ் மற்றும் லாபென் அமைப்புகள் இணைந்து, கழிப்பிடங்களில் உள்ள மனிதக் கழிவுகளிலிருந்து சிறுநீரை மட்டும் பிரித்தெடுக்க "கலன்" ஒன்றை தயாரித்தனர். இந்த கலனில் ஒருவர் சிறுநீர் கழித்ததும், அதனை சுத்திகரிக்க 1.5 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

2) இ.ஏ.டபிள்யூ.ஏ.ஜி. அமைப்பு கார்பன் வடிகட்டிகளை பயன்படுத்தி, கலனிலிருந்து பிரித்தெடுத்த சிறுநீரில் உள்ள கிருமிகளை நீக்கினர். கிருமிகள் நீக்கிய சிறுநீரிலிருந்து பயிர்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் மீண்டும் வடிகட்டப்பட்டு திரவ வடிவிலான உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் உரத்திற்கு 'ஆரின்' என பெயரிட்டனர்.

இந்த முறையைப் பயன்படுத்தி, 1000 லிட்டர் சிறுநீரைக் கொண்டு சுமார் 100 லிட்டர் வரையிலான ஆரின் உரத்தை உற்பத்தி செய்யலாம்.

நிதின் கட்கரி:
"சிறுநீரில் அதிகளவு நைட்ரஜன் உள்ளதால் அதனை வீணாக்காமல், நாட்டின் ஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர் வங்கிகள் அமைத்து அதன்மூலம் விவசாயப் பயிர்களுக்குத் தேவையான உரங்களை அளிக்கலாம். இதனால், நாட்டின் யூரியா இறக்குமதி பாதியாகக் குறையும்" என்று முன்னாள் பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், "தனக்கு சொந்தமான நிலத்தில், சிறுநீரில் தேவைக்கேற்ப தண்ணீர் கலந்து அதனை பயிர்களுக்கு அளிக்கும்போது, அது மற்ற பயிர்களைக் காட்டிலும் நன்றாக வளர்ந்து மகசூல் தந்ததாக" தெரிவித்தார்.

சிறுநீர் வங்கிகள்:
இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 50 இலட்சம் மெட்ரிக் டன் வரை உரம் இறக்குமதி செய்யப்படுகிறது. அத்துடன் உள்நாட்டிலும் உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்குமாற்றாக, பேருந்து, தொடர்வண்டி மற்றும் விமான   நிலையங்களில் சிறுநீர் வங்கிகளை தொடங்கி அதன்மூலம் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களுக்கு உரமாக வழங்கலாம். இதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பதுடன் பயிர்களுக்கும் இயற்கையான உரங்கள் கிடைக்கும்.

நன்றி,
ஊமை இளைஞன் 

No comments:

Post a Comment