Wednesday, 11 September 2019

ராஜீவ்காந்தி கொலை வழக்கு - எழுவர் விடுதலை சாத்தியமா?


முன்னாள் பிரதமர் திரு. ராஜிவ்காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஓராண்டு முடிவுற்ற நிலையில், இதுவரை தமிழக ஆளுநர் திரு. பன்லாரிலால் புரோகித் அவர்களிடமிருந்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. 28 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் 7 பேரையும் ஆளுநர் விடுதலை செய்ய ஏதாவது வழி இருக்கிறதா? அப்படி விடுதலை செய்தால் என்னவாகும்? வாருங்கள் களைவோம்.

பிரதமர் ராஜீவ்காந்தி கொலை:

1991, மே 20 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னையின் அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு வருகைபுரிந்த பிரதமர் ராஜிவ்காந்தி அவர்கள், தற்கொலைப் படையை சார்ந்த பெண்ணொருவர், தான் வைத்திருந்த வெடிபொருளை வெடிக்கச்செய்ததால் கொலை செய்யப்பட்டார். இதில் ராஜிவ் காந்தி அவர்களுடன் சேர்த்து பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரென மொத்தம் 18 பேர் கொல்லப்பட்டனர்.

வழக்கும் தண்டனையும்:

இந்த கொலை வழக்கானது, பூந்தமல்லியில் உள்ள தடா நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, 1998 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் உட்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். 

1998 ஆம் ஆண்டு மே 11 அன்று, உச்சநீதிமன்றத்தால் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 7 பேரில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது

தூக்கு தண்டணை அளிக்கப்பட்ட நால்வரும் தங்களுக்கு அளித்த தண்டனையை இரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுத்தனர். ஆனால் குடியரசுத்தலைவர் அதனை நிராகரித்துவிட்டார். பின்னர், 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழக அரசின் சார்பில், நளினிக்கு மட்டும் தூக்கு தண்டணையை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தது. அதனையடுத்து, நளினிக்கு அளிக்கப்பட்ட  தூக்கு தண்டணையானது ஆயுள்தண்டணையாக குறைக்கப்பட்டது. 

2011-செப்டம்பர் 9-ஆம் தேதி சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட தேதி குறிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க குடியரசுத்தலைவருக்கு  கோரிக்கை விடுத்த காரணத்தினால் உயர் நீதிமன்றம் அவர்களின் தண்டனையை நிறுத்தி வைத்தது. அத்துடன், உச்ச நீதிமன்றமும்  மூவரின் கருணை மனுக்களை மீண்டும் விசாரிக்க ஒப்புக்கொண்டது. 2014, பிப்ரவரி14 - ஆம் தேதி மூவரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்ததுடன், அவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது.

மத்திய அரசு எதிர்ப்பு:

உச்ச நீதிமன்றம், "ஏழுபேரையும் விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசே எடுக்கலாம்" என்ற உத்தரவின் அடிப்படையில் 2014, பிப்ரவரி 19 - ஆம் தேதி அதிமுக அரசு ஏழுபேரையும் விடுதலை செய்ய தீர்மானித்து அமைச்சரவையில் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால், மத்திய அரசு, "இந்த வழக்கை சிபிஐ மேற்கொண்டதால் மாநில அரசுக்கு அவர்களை விடுதலை செய்யும் அதிகாரமில்லை" எனக்கூறி உச்சநீதிமன்றத்தை நாடியதுதுடன் தமிழக அரசின் 'ஏழுபேரை விடுதலை செய்யவேண்டும்' என்ற கோரிக்கையையும் நிராகரித்தது.

கடந்த வருடம் 2018, செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி மீண்டும் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 7 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்துகொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது. அத்துடன், இந்த வழக்கும் முடிவுக்கு வந்தது.

சட்டசபை தீர்மானமும் ஆளுநரின் அதிகாரமும்:


அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவின்கீழ், எந்த ஒரு வழக்கிலும் ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவோ, இரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ ஆளுனருக்கு விரிவான அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால், 2018, செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி, அதிமுக அரசு மீண்டும் அமைச்சரவையைக் கூட்டி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநர் திரு. பன்லாரிலால் புரோகித் அவர்களிடம் அனுப்பியது.

தமிழக அமைச்சரவை ஆளுநரிடம் பரிந்துரை செய்து ஓராண்டு முடிந்தும் இன்றுவரை எந்தவொரு பதிலும் வரவில்லை. அதற்கு காரணம், அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்க எந்தவொரு கால நிர்ணயமும் அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. அதனால் திரு. பன்வாரிலால் 7 பேர் விடுதலை பரிந்துரையை மேலும் கால தாமதமும் செய்யலாம்.

ராகுல் காந்தி  கருத்து:

ராஜிவ் காந்தி அவர்களின் மகன் ராகுல் காந்தி அவர்கள் சிங்கப்போரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில், "என் தந்தையை கொலை செய்தவர்கள் மீது நானும் சகோதரி பிரியங்கா காந்தியும் அளவில்லா கோபம் கொண்டிருந்தோம். அதிலிருந்து மீள்வதற்கு வெகுகாலம் எடுத்துக்கொண்டோம். ஆனால் தற்போது அவர்களை முழுமையாக மன்னித்துவிட்டோம்" எனக்கூறினார். "சம்பந்தப்பட்டவர்களே கொலையாளிகளை மன்னித்துவிட்டேன் எனக்கூறிவிட்டார்கள். ஆதலால் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என சிலர் கூறுகிறார்கள். அவர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்கிறேன், "கொலை செய்யப்பட்டவர் ஒரு நாட்டின் பிரதமர்".

ஆளுநர் முடிவு எப்படி இருக்கும்?

இந்த வழக்கானது மத்திய மாநில அரசுகளை சார்ந்துள்ளதால், மத்திய அரசு என்ன முடிவெடுக்கிறதோ அந்த முடிவையே ஆளுநரும் எடுக்க வாய்ப்பிருக்கிறது. தற்போதைய மாநில அரசான அதிமுக அரசும் மத்திய அரசான பாஜக அரசும் ஒரேஅணியில் உள்ளதால் மத்திய அரசிடம் மாநில அரசு எழுவரின் விடுதலை குறித்து அழுத்தம் தெரிவித்தால் மட்டுமே எழுவரின் விடுதலையை எண்ணிப்பார்க்க முடியும்.

சிறையிலிருக்கும் ஏழுபேரும் ஒரு நாட்டின் பிரதமரை கொன்ற வழக்கில் கைதானவர்கள். அவ்வளவு எளிதாக எந்தவொரு அரசாங்கமும் அவர்களை விடுதலை செய்யாது. இவர்களை விடுதலை செய்தால் மீண்டுமொரு இதுபோன்ற குற்றச்செயலை செய்ய வாய்ப்பிருக்கிறது. ஒரு நாட்டின் பிரதமரை கொன்றவர்களையே விடுதலை செய்துள்ளார்கள் என்ற பழியும் வரக்கூடும். இது உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவாகவே பார்க்கப்படும். 

ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டவர்கள் தங்களது ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கவேண்டும் என்பது சட்டம். ஆனால், ஏழுபேரும் தங்களது வாழ்வின் பாதி வயதை (28 ஆண்டுகளுக்கும் மேல்) சிறைகளில் கழித்துவிட்டார்கள். ஆதலால், மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யலாம் என்ற கோரிக்கையை ஆளுநர் ஏற்பரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சட்டங்கள் குற்றம் செய்தவரை தண்டிக்கவும், சிறைகள் தவறிழைத்தவர்கள் தங்களது தவறுகளை திருத்திக்கொள்ளவும் அமைக்கப்பட்டது. அதனால்தான், ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலங்களில் கைதிகளின் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு தண்டனையைக் குறைத்து விடுதலை செய்கிறார்கள். அப்படிப் பார்த்தால், 28 ஆண்டுகளில் எழுவரின் நன்னடத்தைகளை கருத்தில்கொண்டு அவர்களை விடுதலை செய்யலாம்.

சமூக வலைத்தளங்களில் ஆதரவு:

28 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தும், அமைச்சரவை தீர்மானித்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யாமல், எந்தவொரு பதிலும் ஆளுநரிடமிருந்து வரவில்லையே எனக்கூறி சமூக வலைத்தளங்களில் ஆளுநருக்கு எதிராக பின்வரும் ஹாஷ்டாக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

#28YearsEnoughGovernor
#அநீதியே28ஆண்டுகள்போதாதா  

நல்லதொரு தீர்வை ஆளுநர் விரைவில் அளிக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை. காத்திருப்போம் நல்லதொரு தீர்வுக்காக.

நன்றி,
ஊமை இளைஞன் 

No comments:

Post a Comment