Tuesday, 17 September 2019

இந்திய விடுதலையை எதிர்த்த பெரியார் - ஏன்? எதற்காக?



1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள் ஆங்கிலயே அரசு இந்தியாவிற்கு சுதந்திரத்தை வழங்கியது. நாடே சுதந்திரத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது இந்தியாவின் மூன்று முக்கிய தலைவர்கள் இந்திய விடுதலையில் அதிருப்தி கொண்டிருந்தனர். அவர்களுள் முதலாமானவர் சுதந்திர தினத்தன்று கொல்கத்தாவில் ஒரு சிறுகுடிசையில் யாருடனும் பேசாமல் மனச்சோர்வில் இருந்த தேசத் தந்தை காந்தியடிகள், இரண்டாவது "இந்த சுதந்திரம் இந்துக்களுக்கானது அல்ல" என்ற முழக்கத்தை வைத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் கோல்வாக்கர், மூன்றாவது "இந்தநாள் துக்க நாள்" என அறிவித்த தமிழகத்தின் பகுத்தறிவுப் பகலவன் என போற்றப்படும் தந்தை பெரியார்.

காங்கிரசில் பெரியார்:

காந்திய சிந்தனையில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த பெரியார், தான் செய்துகொண்டிருந்த வணிகத்தொழிலை விட்டுவிட்டு 1919 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். மகாத்மா காந்தி அவர்களின் அந்நியத் துணிகள் புறக்கணிப்பு கொள்கையில் கதர் ஆடை அணிதலை வலியுறுத்தி பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் செய்தார்.

1920 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கப் போராட்டம்,  கள்ளுக்கடை மறியல் போராட்டங்களில்  கலந்துகொண்டு சிறைசென்றார். 

1922 ஆம் ஆண்டில் மதராஸ் மாகாண காங்கிரஸ் கூட்டத்தில் மதராஸ் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1925 ஆம் ஆண்டில் தீண்டாமைக்கு எதிராக நடந்த வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் நிலவிவந்த உயர்சாதி பிரிவினரின் ஆதிக்கம் மற்றும்  பாகுபாடு அவரை கொதிப்படையச் செய்தது.

சுய மரியாதை இயக்கம்: 

சேரன்மதேவியில் வ.வே.சு என்பவரால் நடத்தப்பட்டு வந்த குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு தனியாகவும் மற்ற பிறசாதி மாணவர்களுக்கு தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. அந்த ஆசிரமத்தில் பணியாற்றிவந்த ஜீவானந்தம் அவர்கள், காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இதைப்பற்றி பேசினார். அவருக்கு பெரியாரும் ஆதரவளித்தார். ஆனால், காங்கிரசில் ஆதிக்க சாதியினர் அதிகம் இருந்ததால் அவர்களின் பேச்சுக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை. தொடர்ந்து வகுப்புவாரி தீர்மானத்தை  வலியுறுத்திய பெரியார், காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களால் தாமதப்படுத்தப்பட்டது. அதுவரை  காங்கிரசு கட்சியிலிருந்த பெரியார், காஞ்சிபுரம் மாநாட்டிற்குப்பிறகு காங்கிரசிலிருந்து முழுவதுமாக வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். 

குடியரசு என்னும் நாளிதழைத் தொடங்கி தீண்டாமை , சாதிய பாகுபாடு மற்றும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை கடுமையாக விமர்சித்தார். விதவை மறுமணம், கலப்புத்திருமணம், பெண்ணுக்கு சமஉரிமை பற்றி விரிவாக எழுதி ஆதரித்தார். அத்துடன் நீதிக்கட்சி கொண்டுவந்த அறநிலையத்துறை மூலம் கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்படும் என்ற கருத்து காங்கிரசு கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

திராவிடநாடு கோரிக்கை:

1930 களில் திராவிடநாடு கோரிக்கையை வலுவாக வலியுறுத்தினார் பெரியார். இந்தியா, இந்திய தேசியம் மற்றும் இந்தியர் என்ற கோட்பாட்டிலிருந்து விடுவித்து திராவிட நாடு தனிநாடாக அறிவிக்கவேண்டும் என போராடினார். அதற்காக திரவிடநாடு பிரிவினை மாநாட்டை நடத்தி ஆங்கிலயே அரசை வலியுறுத்தினார்.

1944 ல் சேலத்தில் நீதிக்கட்சி சார்பில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் நீதிக்கட்சியின் பெயரானது திராவிட இயக்கம் என மாற்றப்பட்டது. இந்த காலக்கட்டத்தில்தான் பெரியாருக்கு அண்ணாவின் நட்பு கிடைத்தது. சிறந்த உத்வேகமும், படிப்பும் கொண்ட அண்ணாவை தனது தளபதியாகவே மாற்றிக்கொண்டார்.

சுதந்திரத்தில் அதிருப்தி:

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. பெரியார் இதனை துக்க தினமாக அறிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், 

''சுதந்திர நாடு'' என்றால் அங்கு தாழ்ந்த நாலாஞ்ஜாதி, சூத்திரன், பஞ்சமன், பறையன், பள்ளன், சக்கிலி, தோட்டி, உயர்ந்த ஜாதி 'பார்ப்பான்' என்ற பேதமில்லா நாடாக, ''மனிதன்''மட்டுமே உள்ள நாடாக, பிறவி இழிவு இல்லா நாடாக இருப்பதுதானே ஒரு சுதந்திர நாட்டின் இலட்சணம்." 

அதற்கு காரணம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டுவந்த கல்வி ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னரே கிடைத்தது என்பதே உண்மை. அத்துடன் பெண்களுக்கு கல்வி, சமஉரிமை, தீண்டாமை முதலியன குறைந்ததும் அவர்களின் வருகைக்குப் பின்னர்தான். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் முடிந்தும் இன்றளவும் அது முழுமையாக ஒழியவில்லை என்பது வேதனைக்குள்ளான உண்மை. அத்துடன். இந்தியாவிற்கு சுதந்திரம் காங்கிரசால் மட்டுமே கிடைத்தது என்ற மாயத்தோற்றத்தை உடைப்பதற்காகவும் விமர்சித்தார். 

நன்றி,
ஊமை இளைஞன் 

No comments:

Post a Comment