Wednesday 9 October 2019

ஆபத்தில் முடிந்த அறிவுரை - சிறுகதை


நம் வாழ்வில் சந்திக்கும் சில பிரச்சனைகளில் முக்கியமானது "அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறி, அதில் தாமே மாட்டிக்கொள்வது". அதைப்பற்றிய ஒரு சிறுகதையை இங்கு காண்போம். இந்தக் கதையை சிறுவயதில் நீங்கள் கேட்டிருக்கலாம். அக்கதையுடன் எனது சிறிய கற்பனையை சேர்த்துள்ளேன். பிடித்திருந்தால் பகிருங்கள்:

அடர்ந்த ஒரு காட்டிலே நெடிய மரங்கள். மரத்திலே பல கிளைகள். கிளைகளின் இடையிலே பல கூடுகள். கூட்டுக்குள்ளே பல வண்ணப் பறவைகள். பறவைகளிலே, தூக்குனங்குருவி ஒன்று கூட்டுக்கு வெளியே தன்
சிறகுகளை சிற்றலைகளாய் சிறகடித்துக்கொண்டிருக்கிறது ஒருபுறம்.

அதே அடர்ந்த வனத்திலே, வகைவகையான விலங்குகள் விதவிதமான ஒலிகளுடன். ஊரும் பாம்புகள், மேயும் மான்கள். மான்களை வேட்டையாடிடும் சிங்கங்கள், புலிகள் மற்றும் சிறுத்தைகள். அவைகள் வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சிகளை ருசிக்க காத்திருக்கும் ஓநாய்கள், கழுகுகள் மறுபுறம்.

இவ்விரண்டு பகுதிகளுக்கிடையே மரங்களிலும் , நிலங்களிலும் தாவிக் குதித்துக்கொண்டிருக்கிறது குரங்கொன்று. குரங்கிற்கு குடிலில்லை. குடில் இருக்கவும் அதற்கு அவசியமில்லை.

வெண்மேகம் கருக்கிறது. மஞ்சள் வெயிலும் மறைகிறது. சூறைக்காற்று திக்குமுக்காடி சுதந்திரமாய் திரியுது. அரைமணித்துளி கடந்தபின்னே ஆர்ப்பரித்து ஆனந்தமாய் அடர்ந்த காட்டை அடைகிறது மழைத்துளி.

சிறுதுளியொன்று தூக்குனங்குருவிமீது விழுகையில் பதறிப்போய் பனைமரத்தின் மேலுள்ள தன் கூட்டுக்குள் சென்றது. சிங்கங்களும், சிறுத்தைகளும் அதனதன் குகைக்குள் சென்றன. ஊரும் பாம்பும் தாவும் மான்களும் தத்தம் இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டன. அதுவரை  துள்ளிக்குதித்துக் கொண்டிருந்த குரங்குகள் மட்டும் மழையில் நனைந்து கொண்டிருந்தது.

கூட்டிற்கு வெளியே முதலில் தன் அலகையும் பின்னர் தலையையும் நீட்டிய அந்த குருவி, மழையில் நனைந்து குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த குரங்கொன்றை கண்களால் கண்டது. கண்டதும் அதன்மேல் கரிசனம் கொண்டது.

குரங்கை நோக்கி, "குதூகலித்த நாட்களில் கொஞ்சம் செலவிட்டு குடில் அமைத்திருந்தால், மழையில் நனைந்து குளிரிலிலே நடுங்கி வேதனையுறுவதை தவிர்த்திருக்கலாமல்லவா? இம்மழை பொய்த்து பின்வரும் கோடை காலத்தில், தங்களின் குதூகலத்தை கொஞ்சம் ஒதுக்கி குடில் அமையுங்கள். எதிர்வரும் காலத்தில் இன்பமாய் வாழுங்கள்" எனக்  கூறிக்கொண்டிருக்கும்போதே பேரிடி வந்து பிரளயத்தை உண்டாக்கியது. குருவியும் கூட்டிற்குள் சென்றது. குரங்கு சிந்தனையில் மூழ்கியது.

மழை நின்றது
மதி வந்தது - உடன்
உயிர்களுக்கு உறக்கமும் வந்தது.

விடியும் நேரம் ....

கதிரொளி கிளம்பியது
காரிருள் விலகியது
உறக்கம் கலைந்தது
பறவைகள் பறந்தன
ஊர்வன ஊர்ந்தன
விலங்குகள் நடந்தன
உணவின் தேடலை தொடங்கின சிந்தனையின் மூழ்கிய குரங்கைத் தவிர...

"சின்னஞ்சிறு குருவி எனக்கு அறிவுரை கூறுவதா?" என எண்ணத் தொடங்கியது.

கண் விழித்தது
கர்வம் கொண்டது
மரத்தின்மீது ஏறத்தொடங்கியது.

உச்சியை அடைந்தது
இடக்கை மரத்தில்
வலக்கை கூட்டில்
எறிந்தது கூட்டை
அஃது அடைந்தது காட்டை.

மீண்டுமொரு மாலைப் பொழுது...

இரைதேடச் சென்ற குருவி தன்னலகில்
தானியங்களை சுமந்து வந்தது.

மரத்தின் உச்சியை அடைந்தது
அடைந்தபின், உருக்குலைந்து நின்றது.

மரத்தைச் சுற்றிலும் மணிக்கணக்காய் சுற்றியது.

ஏளனச் சிரிப்போன்று எதிர்த்திசையில் கேட்டது!

யாரென்று பார்த்தது.

மரத்திலே மந்தியொன்று மதிமழுங்கிய  நிலையில்...

கனியளவு குருவிக்கும் காடளவு கோபம் வந்தது. தன்னிலை நினைத்து, "குண்டுமணிக் கண்ணிலும் குடங்குடமாய் கண்ணீர் வந்தது".

கோபம் கலந்த சோகத்தில்,"ஆனதுக்கு புத்தி சொன்னா அறிவுண்டு நெனவுண்டு, இந்த ஈனனுக்கு புத்தி சொல்லி இல்லறத்தை இழந்துவிட்டேனே" எனக் கூறியது.

அதாவது, நாம் சொல்லக்கூடிய அறிவுரையை சரியான நபர்களிடம் சொல்லவேண்டும். அத்துடன் அதனை கேட்டு நடப்பவராக இருத்தல்வேண்டும். நாம் சொல்லக்கூடிய அறிவுரையால் நமக்கு துன்பம் ஏற்படாமல் இருத்தல்வேண்டும் என்பதே இக்கதையின் மையக்கருத்து.

நன்றி,
ஊமை இளைஞன் 

2 comments: