நம் உடலில் ஏதேனும் மாறுதல்கள் ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வோம். அவரும் நம்மை பரிசோதித்துவிட்டு, உங்களுக்கு ஊட்டச் சத்துக்குறைபாடு உள்ளது ஆதலால் நல்ல வைட்டமின் உள்ள உணவுப்பொருட்களை சாப்பிடுங்கள் என்று கூறுவார். அத்துடன், வைட்டமின் மாத்திரைகளை மருந்துச் சீட்டில் எழுதித் தருவார். மருத்துவமனையின் வசதிக்கேற்ப கட்டணத்தையும் செலுத்திவிட்டு மாத்திரைகளை வாங்கிவருவோம். இந்த நிலை தற்பொழுது மாறவுள்ளது. ஆம், ஆண்ட்ராய்டு மொபைல் போன்களின் வருகைக்குப் பின்னர், செல்போன்கள் மனித வாழ்வியலின் அங்கமாக செயல்படுகிறது. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறிந்துகொள்ளவும், தேவைப்படும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் பயன்பட்டுவந்த செல்போன்களைக்கொண்டு வைட்டமின் குறைபாட்டினைக் கண்டறியும் செயலி (APP) ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
வைட்டமின் குறைபாடு:
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்தால் உணவின் தேவை மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. கலப்பட உணவுகளால் கிடைக்கும் உணவும் சத்தானதாக இருப்பதில்லை. கலப்பட உணவை உட்கொள்ளும்போது உடலின் ஊட்டச்சத்துக்கள் குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகவேண்டியிருக்கிறது. உலகில் வைட்டமின் குறைபாடுகளால் 2 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பாதிபேர் ஜிங்க் வைட்டமின் குறைபாட்டால் உயிரிழந்துள்ளனர். இரும்பு மற்றும் கால்சியம் வைட்டமின் குறைபாட்டால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் இறக்கின்றனர். இந்த வைட்டமின் குறைபாடுகளை மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே கண்டுபிடித்து அதனை நிவர்த்தி செய்வதில் இந்த செயலி முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்ட-கேம் (Vita - Cam)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாட்டிலுள்ள அஜ்மன் என்னும் பல்கலைக்கழகத்தில் பயிலும் அஹமத் சைப், முகமத் ஐட் காசீம், வெஸ்ஸம் ஷெஹிப் மற்றும் சைபிதின் ஓ.எஸ். அல்ஹகாயினி என்னும் மருத்துவ மாணவர்கள் இணைந்து உடலின் கண், நாக்கு, உதடுகள் மற்றும் நகங்களை படமெடுத்து (Photos) அதன்மூலம் உடலிலுள்ள வைட்டமின் சத்துக்குறைபாடுகளை உடனடியாக அறிந்துகொள்ளும் செயலியை வடிவமைத்துள்ளனர். அத்துடன், இந்த செயலிமூலம் வைட்டமின் குறைபாட்டை சரிசெய்வதற்கு என்ன செய்யவேண்டும்? என்னென்ன சாப்பிடவேண்டும்? என்ற தகவல்களையும் பெறமுடிகிறது. இந்த செயலிக்கு வைட்ட-கேம் (Vita - Cam) அதாவது வைட்டமின் கேமரா (Vitamin - Camera) எனப்பெயரிட்டுள்ளனர். இந்த செயலியை உருவாக்கியதற்கு அவர்களுக்கு AED 50,000 (இந்திய மதிப்பில் ரூ. 966,920.30) பரிசாக வழங்கப்பட்டது.
வைட்ட-கேம் செயல்பாடு:
முதலில் வைட்டமின் குறைபாடுகள் மற்றும் அதன் அறிகுறிகளின் மாதிரிகள் (புகைப்படங்கள்)சேகரிக்கப்படுகிறது. அதாவது, வைட்டமின் குறைபாடுள்ள நபரின் கண், நாக்கு, உதடுகள் மற்றும் நகங்களின் அமைப்பு, வடிவம், நிறம் அல்லது தோற்றம் போன்றவை சேகரிக்கப்படுகிறது. படமெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பின் புகைப்படத்தையும் தனித்தனியாக பகுப்பாய்வு செய்து பிரித்தெடுக்கப்படுகிறது. பின்னர், பிரித்தெடுக்கப்பட்ட மாதிரிகளின் தன்மைக்கேற்ப அவர்களின் வைட்டமின் குறைபாடுகள் திரையில் தோன்றுகிறது. மேலும், வைட்டமின் குறைபாட்டின் தன்மைக்கேற்ப அவர்கள் என்னென்ன உணவு எடுக்கவேண்டும்? என்ற தகவலைக் கொடுக்கிறது. உதாரணத்திற்கு, இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கீரைகள் சாப்பிட வேண்டும் போன்ற தகவல்களை வழங்குகிறது.
வைட்ட-கேம் செயலியின் எதிர்கால திட்டங்கள்:
தற்போது உள்ள செயலியின் மூலம் எப்படி குணப்படுத்துவது? என்னென்னெ சாப்பிடவேண்டும்? போன்ற தகவல்கள் மட்டுமே அடங்கியுள்ளது. வரும் காலங்களில், மருத்துவத்துறையில் சிறந்த வல்லுநர்களை செயலியுடன் இணைத்து அவர்களுடன் எளிதில் தொடர்புகொள்ளுமாறு செயலியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கென குறைந்த கட்டணத்தை வசூல் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
தற்போது உள்ள செயலியின் மூலம் எப்படி குணப்படுத்துவது? என்னென்னெ சாப்பிடவேண்டும்? போன்ற தகவல்கள் மட்டுமே அடங்கியுள்ளது. வரும் காலங்களில், மருத்துவத்துறையில் சிறந்த வல்லுநர்களை செயலியுடன் இணைத்து அவர்களுடன் எளிதில் தொடர்புகொள்ளுமாறு செயலியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கென குறைந்த கட்டணத்தை வசூல் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
நன்றி,
- ஊமை இளைஞன்
No comments:
Post a Comment