நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் வைக்கப்பட்ட சில காட்சிகள் பஞ்சமி நிலம் மற்றும் மீட்பு பற்றி பேசியது. அசுரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு அதனை பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலினை, பாமக நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்கள்,"திமுகவின் முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். ஆனால் திரு. ஸ்டாலின் அவர்கள் அதனை மறுத்து, "அஃது பட்டா நிலமல்ல, தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம்" எனக்கூறி 1985 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட மனைப்பத்திரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். ஆனால், இன்றளவும் பிரச்சனை ஓயவில்லை. ஒருபுறம் இது இருக்க, திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் "பஞ்சமி நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும் உரியவர்களிடம் திருப்பித் தரவேண்டும். அத்துடன், அரசு பஞ்சமி நில மீட்புக்குழு ஒன்றை அமைத்து உரியவர்களுக்கு அதனை அளித்திடவேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார். பஞ்சமி நிலம் என்றால் என்ன? ஏன் அதை திருப்பி ஒப்படைக்கவேண்டும்? ஏன் அது உருவாக்கப்பட்டது? எனப்பல கேள்விகளுக்கு இங்கு விடையைக் காண்போம். பஞ்சமி நிலங்கள் என்றால் என்பதை பார்ப்பதற்கு முன்னால் அது உருவாக்கப்படக் காரணமான மிராசிமுறைப் பற்றிக்காண்போம்.
மிராசி முறை:
கிராமத்துக்குப் பொதுவாக இருந்த நிலங்கள் அனைத்தும் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு அளிக்கப்பட்டது. அவர்களை மிராசுதாரர்கள் என அழைத்தனர். இதற்கு மிராசிமுறை என பெயரிடப்பட்டது. அத்துடன், அந்த நிலங்களை குத்தகைக்குவிட்டு வரிவிதிக்கவும், வரிவசூல் செய்து ஆங்கிலேய அரசிடம் செலுத்தவும் அனுமதியளிக்கப்பட்டது. உடன், கிராமத்தில் இருந்த தரிசு நிலங்களை நிர்வகிக்கும் பொறுப்பும் அவர்களுக்கு விடப்பட்டது. அதனை அவர்கள் விருப்பப்பட்டவர்களுக்கு கொடுக்கவும் அனுமதியளிக்கப்பட்டது. இதனால், ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். ஏற்கெனவே, சாதியரீதியாக பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு, தரிசு நிலங்களைக்கூட பயன்படுத்தும் உரிமையும் பறிக்கப்பட்டது. அரசும், தரிசுநிலம் வேண்டி யாரெனும் மனு அளித்தால் மிராசுகள் அனுமதியளித்தபின்பே அவர்களுக்கு அனுமதிவழங்கினர். ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க மறுத்தனர். காரணம், நிலமற்றவர்களுக்கு நிலங்களை வழங்கினால், தங்களது நிலத்தில் வேலைசெய்ய வரமாட்டார்கள் எனவும் வீட்டுவேலைகளுக்கு உகந்த இவர்களை தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கவேண்டும் எனவும் எண்ணினர்.
ஜேம்ஸ் ட்ரெமென்கீர்:
1891 ஆம் ஆண்டு, அன்றைய செங்கல்பட்டு மாகாணத்தின் ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் ட்ரெமென்கீர் என்னும் ஆங்கிலேய அதிகாரி "பறையர்கள் பற்றிய குறிப்புகள் (Notes of Paraias)" என்னும் பெயரில் அறிக்கையொன்றை தயாரித்து ஆங்கிலயே அரசிடம் ஒப்படைத்தார். அதன்படி, "ஒடுக்கப்பட்ட மக்களின் வாழவை மேம்படுத்த வேண்டுமாயின், அவர்களுக்கு நிலங்கள் வழங்கவேண்டும்" என அந்த அறிக்கை கூறியது. இந்த அறிக்கை, 1892 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ஆங்கிலய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம் , பஞ்சமி நில சட்டம் என அழைக்கப்பட்டது.
பஞ்சமி நில சட்டம்:
ஒடுக்கப்பட்ட மக்களை யாரும் ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தில், ஆங்கிலய அரசால் இயற்றப்பட பஞ்சமி நில சட்டத்தில் பின்வரும் முக்கிய அம்சங்கள் இருந்தன. இந்த சட்டத்தின்படி,
1) பஞ்சமி நில சட்டத்தின்படி அளிக்கப்பட்ட நிலங்களில், பட்டியலின மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம்.
2) முதல் பத்தாண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, தானம் செய்வோ, அடமானம் வைக்ககோ, குத்தகைக்கோ விடக் கூடாது; அதன்பிறகு அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச்சார்ந்தவர்களிடம் (Depressed Class) தான் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை வழங்கப்பட்டது.
3) வேறு வகுப்பினரிடம் விற்றால் அந்த விற்பனை செல்லாது. மீறி வாங்கினால், எந்த காலத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு கிடையாது.
பஞ்சமி நில சட்டத்தின் மூலம் மதராஸ் மாகாணத்தில் மட்டும் சுமார் 12 இலட்சம் ஏக்கர் நிலங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டது. மேலும், வருவாய்த்துறையின் பதிவேடுகளில், அனைத்து விளைநிலங்களை பஞ்சமி நிலம் என்று தனியாகவும் மற்ற நிலங்களை, நத்தம் நிலம், நன்செய், புன்செய், தரிசு நிலம் எனவும் வகைப்படுத்தினர்.
பஞ்சமி நில ஆக்கிரமிப்பு:
இந்திய விடுதலைக்குப்பிறகு, 1950-களில் ஆச்சார்ய வினோபா அவர்களின் பூமிதான இயக்கத்தின்படியும், 1960-களில் வந்த கூட்டுறவு திட்டத்தின்படியும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அரசு மக்களுக்கு எவ்வளவுதான் நலத்திட்டங்களை வகுத்திட்டாலும் அந்தத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைவதில்லை. மேலும், இன்றளவும் பெரும்பாலான திட்டங்களை பற்றிய புரிதல் இன்றளவும் வெகுமக்களை சென்றடைவதில்லை. இதன்காரணமாக, சாதியரீதியன தாக்குதல் மற்றும் ஆதிக்க சாதியினரின் அடக்குமுறையால் பெரும்பலான நிலங்கள் ஒடுக்கப்பட்ட சாதியினரிடமிருந்து பறிக்கப்பட்டது. சிலர் ஒடுக்கப்பட்ட மக்களின் பெயரிலேயே நிலங்களை வாங்கி அனுபவித்து வருகின்றனர்.
பஞ்சமி நில மீட்பு போராட்டம்:
தமிழ்நாட்டிலுள்ள பஞ்சமி நிலங்களில் பாதிக்கு மேல் உள்ள திருவண்ணாமலை, வடஆற்காடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஏறத்தாழ 77 சதவீத பஞ்சமி நிலங்கள் கைமாறியுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இதன் எதிரொலியாக, முதல் பஞ்சமி நிலமீட்பு போராட்டம், 1994 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கியது. இந்த போராட்டத்தில், ஜான் தாமஸ் மற்றும் ஏழுமலை என்னும் போராட்டக்காரர்கள் கலவரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். போராட்டம் வலுபெறவே, 1996 ஆம் ஆண்டு அன்றய அதிமுக அரசு பஞ்சமி நிலமீட்புக் குழு ஒன்றை அமைத்தது ஆனால் அவர்களின் ஆட்சி முடிவடைந்ததால் அஃது கிடப்பில் போடப்பட்டு, பத்து வருடங்கள் கழித்து, 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுகவால் மீண்டும் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதிலும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. மீண்டும் 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசால் மீண்டுமொரு குழு அமைக்கப்பட்டு இன்றுவரை தொடர்கிறது.
1892 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சமி நிலம் சார்ந்த சட்டம் 127 ஆண்டுகள் முடிவடைந்தும் இன்றும் தொடர்கிறது. இதற்கு காரணம் பொறுப்பற்ற ஆட்சியாளர்களின் மனநிலைதான் முக்கிய காரணம். ஒருவேலை அவர்களே பல இடங்களில் பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்திருப்பதால் என்னவோ இன்றளவும் எந்தவொரு முடிவும் எட்டாமல் உள்ளது.
நன்றி,
ஊமை இளைஞன்
No comments:
Post a Comment