Thursday 17 October 2019

வாழை நார் மற்றும் பருத்தி துணியிலிருந்து நாப்கின் தயாரிப்பு!

பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்தாலும் சில அத்தியாவசியமான பொருட்களின் தயாரிப்பில் பிளாஸ்டிக்குகள் முக்கிய பங்குவகிக்கின்றன. அவற்றில், ஒருமுறை பயன்படுத்தி எறியப்படும் நாப்கின்கள். பெண்கள் தன் வாழ்நாளில் சுமார் ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் நாப்கின்களை உபயோகப்படுத்துகிறார்கள். இதன் காரணமாக நாப்கின்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. செயற்கையாக தயாரிக்கப்படும் நாப்கின்களின் விலை அதிகமாக உள்ளதாலும், ஒருமுறை மட்டுமே இதனை பயன்படுத்த முடியும் என்பதாலும், பலர் இயற்கை நாப்கின்களை நோக்கி நகர்கின்றனர். அந்த வகையில், வாழை நார் மற்றும் பருத்தித் துணிகளிலிருந்து நாப்கின்களை தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர்.

செயற்கை நாப்கின்கள் தயாரிக்கும் முறை:


நாப்கின்களில் முதல் லேயர் சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக்கினாலும், இரண்டாவது லேயர் ப்ளீச் செய்யப்பட்ட டிஸ்யூ பேப்பரைக்கொண்டும், மூன்றாவது லேயரில் ஜெல்லும் (பெட்ரோலிய பொருளால் தயாரானது), நான்காவது லேயரில் பாலித்தீனும் (நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பசை வகை) கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இரண்டாவது லேயரில் உள்ள டிஸ்யூ பேப்பரை ப்ளீச் செய்ய ஹைப்போ குளோரைட் மற்றும் டையாக்சின் போன்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த டையாக்சின் வேதிப்பொருளானது அதிகநேரம் பெண்களின் பிறப்புறுப்பின்மீது உபயோகப்படுத்தும் போது, பெண்களின் கர்ப்பப்பை மற்றும் கருமுட்டைகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. மேலும், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இந்த நாப்கின்கள் மக்குவதற்கு சுமார் 60 வருடம் எடுத்துக்கொள்வதுடன் சுற்றுச்சூழலையும் பாதிக்கின்றன.

வாழை நாரிலிருந்து நாப்கின்கள்:


டெல்லியில், ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உதவியுடன் ‘சான்பே’ என்ற தொழில்முனைவு நிறுவனம், வாழை நாரிலிருந்து சானிட்டரி நாப்கின்களை தயாரித்துள்ளது. இதுபற்றி, சான்பே நிறுவனத்தின் அதிகாரி ஆர்சிட் அகர்வால் கூறுகையில்," இன்று சந்தைகளில் விற்கப்படும் சானிட்டரி நாப்கின்கள் செயற்கைப் பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால், அவை மக்குவதற்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாகும். பலர் இதை முறையாக அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுவதால் தொற்று நோய் ஏற்படும் பாதிப்பும் உள்ளது." என கூறியுள்ளார்.

தொடர்ந்து கூறிய அகர்வால், "நாப்கினை எரிப்பதனால் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள் வெளிபடுகிறது. அதே நேரம் இதன் விலையும் அதிக அளவில் உள்ளது. இதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் எங்கள் நிறுவனம் வாழை நாரில் நாப்கின் தயாரிக்க முடிவு செய்தோம். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்த நாப்கின்கள் 2 ஆண்டுகள் வரை இருக்கும், இவற்றை 120 முறை வரை மீண்டும் பயன்படுத்தலாம். மேலும் 199 ரூபாய்க்கு இரண்டு நாப்கின்கள் விற்க உள்ளோம்" எனவும் கூறினார்.

பருத்தி துணியிலிருந்து நாப்கின்கள்:




கோவையில், தையல் தொழிலில் ஈடுபட்டு வந்த இஷானா என்னும் பெண்,  பருத்தித் துணியிலிருந்து நாப்கின்களை உருவாக்கி விற்பனை செய்துவருகிறார். இதுபற்றி அவர்கூறுகையில், "நம் உடலை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல சுற்றுச் சூழலையும் பாதுகாக்க வேண்டும். பருத்தித் துணியில் தயாரிக்கப்படும் இந்த நாப்கின்கள் எளிதில் மக்கும் தன்மையுடன் இருக்கிறது. அத்துடன், இதனை பயன்படுத்திவிட்டு மீண்டும் துவைத்து உபயோகிக்கலாம். இந்தவகையான நாப்கின்களை பயன்படுத்துவதால் நம்முடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது" என்றார்.

இயற்கை நாப்கின்களின் நன்மைகள்:


> இயற்கையான நாப்கின்களில் பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. மாறாக, வாழை நார் மற்றும் பருத்தித் துணிகளால் தயாரிக்கப்படுவதால் எளிதில் மக்கும் திறனைக் கொண்டது. சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்காது.

> முக்கியமாக, வேதிப்பொருட்கள் எதுவும் கலக்கவில்லை என்பதால் நோய்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

> செயற்கை நாப்கின்களுக்கு செலவிடும் தொகையைவிட இதற்கு செலவிடும் தொகை குறைவு.

எந்தன் உளறல்: அறிவியல் எந்த அளவுக்கு நம்மை முன்னேற்றி இருக்கிறதோ அதே அளவில் சுற்றுச்சூழலை பாதித்திருக்கிறது. அதனை பாதுகாப்பது நம் தலையாய கடமை மட்டுமல்லாது அடுத்த சந்ததிகளுக்கு பாதுகாப்பான உலகை விட்டுச்செல்வது ஒவ்வொருவரின் கடமையாகும். ஆதலால், அனைத்திற்கும் செயற்கையையே சார்ந்திராமல் இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக்கொள்ளவேண்டும். அரசும், இந்த மாதிரியான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோரை அங்கீகரித்து மக்களுக்கு பயன்படும் வகையில் உதவிசெய்திட வேண்டும்.

நன்றி,
ஊமை இளைஞன்

No comments:

Post a Comment