Sunday 4 August 2019

இந்தியாவின் சொத்து - தோழர் ஜீவானந்தம்



நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு ஊரில் கோவில்மணி அடிப்பதைக் கேட்டு சிறுவர்கள் இருவர்  கோவிலினுள் நுழைகின்றனர். அதைக்கண்ட பெரியவர்கள் (வயதால்) சிறுவர்கள் இருவரையும் தடுக்கின்றனர். அதில், ஒருசிறுவனிடம், "கோவிலில் உனக்கென்ன வேலை. உள்நுழைந்ததால் இந்த கோவிலே தீட்டாகிவிட்டது. இனிமேல் நீ கோவிலில் நுழையக்கூடாது" என கடுமையாக எச்சரிக்கிறார்கள். மற்றொரு சிறுவனிடம்,"அவனுடன் உனக்கென்ன சேர்க்கை. இனி அவனுடன் சேரக்கூடாது" என்கின்றனர். மேலும், அவனது தந்தையை அழைத்து கண்டிக்கச் சொல்கிறார்கள். அவரது தந்தையும் அவனை கடுமையாக கண்டிக்கிறார். கண்டித்துக்கொண்டிருந்த தந்தையிடம், "தான் செய்ததில் தவறில்லையே" என வாதிடுகிறான். ஆனால், அங்கிருந்த யாரும் செவிசாய்க்காததால் மனம்வாடி வீட்டை விட்டு வெளியேறுவதென்று முடிவெடுத்து பின் வெளியேறுகிறான். ஆதிக்க சாதியில் பிறந்தாலும், உயர்சாதி எனக்கூறப்படும் மக்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் "ஆலயத்தில் நுழையக்கூடாது. மீறி நுழைந்தால் அது தீட்டு" என்ற வர்ணாசிரம கோட்பாட்டின்மீது வெறுப்புணர்வுகொண்டு, தனது சிறுவயதிலேயே "அனைவரும் சமம். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்" என்ற மனப்பாங்குடன் விளங்கினான் அந்த சிறுவன். சிறுவயதில் சொரிமுத்து என்று அழைக்கப்பட்டு பின்னாளில் ஜீவானந்தம் என்னும் பொதுவுடைமைவாதியாக உருவெடுத்தான். அவனது நண்பர் பெயர் மண்ணடி மாணிக்கம்.


ஜீவானந்தம் பிறப்பு :

1907-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 21ஆம் தேதி, நாகர்கோயிவின் அருகேயுள்ள பூதப்பாண்டி என்னும் கிராமத்தில் பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார் ஜீவானந்தம். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சொரிமுத்து. இளம் வயதிலேயே ஆதிக்க சாதியினரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு குரல் கொடுத்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தனது நண்பனுடன் ஆலயத்திற்குள் நுழைந்ததற்காக அவரது தந்தை கண்டித்தார். தான் செய்தது தவறில்லையென என்பதை நன்கு உணர்ந்து பின் வீட்டைவிட்டு வெளியேறினார்.

தமிழ் கலாச்சாரத்தின்மீதும், இலக்கியத்தின் மீதும் அளவுகடந்த மரியாதை கொண்டதனால் சொரிமுத்து என்னும் பெயரை 'உயிர் இன்பன்' மாற்றிக்கொண்டார். தனித்தமிழ் ஆர்வலரான மறைமலை அடிகளின் மீது அளவுகடந்த அன்புகொண்டார். மறைமலை அடிகளாரை சந்திக்கச் சென்ற உயிர் இன்பன் வெளியில் நின்று அடிகளாரின் வீட்டு வாசல் கதவைத் தட்டினார். அப்போது மறைமலை அடிகளார், உள்ளிருந்தவாறே, "யாரது, போஸ்ட் மேனா?' என்றார். அந்த சந்திப்பிலிருந்து தமிழின் மீதான பிடிப்பு தளர்ந்து  'உயிர் இன்பன்' என்னும் தனது பெயரை ஜீவனந்தமாக மாற்றிக்கொண்டார்.

 இந்தியாவின் சொத்து ஜீவா:

காங்கிரஸ் இயக்கக் கோட்பாடுகளின்மீது அதிக ஈர்ப்புகொண்டதால், காங்கிரஸ் இயக்கத் தலைவர் வ. வே. சுப்பிரமணியம் அவர்களால் தொடங்கப்பட்ட "பரத்வாஜ்" என்னும் ஆசிரமத்தில் தன்னை ஆசிரியராக இணைத்துக்கொண்டார். அங்கு, பிராமண மாணவர்களுக்கு தனியாகவும் மற்ற பிறசாதி மாணவர்களுக்கு தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. இதனால் ஆத்திரம் கொண்ட ஜீவானந்தம், காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இதைப்பற்றி பேசினார். அவருக்கு பெரியாரும் ஆதரவளித்தார். ஆனால், காங்கிரசில் ஆதிக்க சாதியினர் அதிகம் இருந்ததால் அவர்களின் பேச்சுக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை. அதனால், "பரத்வாஜ்" ஆசிரமத்திலிருந்து வெளியேறி 'சிராவயல்' என்னும் ஆசிரமத்தை தொடங்கினார். அதுவரை காங்கிரசு கட்சியிலிருந்த பெரியார், காஞ்சிபுரம் மாநாட்டிற்குப்பிறகு காங்கிரசிலிருந்து முழுவதுமாக வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் கட்சியிலிருந்தாலும், ஜீவானந்தம் பெரியாருடன் இணைந்து சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றினார்.

1927 - ஆம் ஆண்டு தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த காந்தியடிகள் ஜீவானந்தம் தொடங்கிய சிராவயல் ஆசிரமத்திற்கு வருகைபுரிந்தார். அப்பொழுது, காந்தியடிகள், "உங்களது சொத்து மதிப்பு எவ்வளவு?" என ஜீவாவிடம் வினவினார். அதற்கு ஜீவா, "இந்தியாதான் எனது சொத்து" என்று பதிலளித்தார். ஜீவாவின் தேசியபற்றை பார்த்து வியந்த காந்தியடிகள், "இல்லை இல்லை, நீங்கள்தான் இந்தியாவின் சொத்து" எனக்கூறி பாராட்டினார்.

ஜீவாவும் சிறைவாசமும்:

சுயமரியாதை இயக்கத்தோடு இந்திய விடுதலை போராட்டத்திலும் பங்குகொண்டார். 1930-ல் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அவரின் தமிழ் உரைநடையும் ஆழ்ந்த கருத்துகளும் மக்களிடையே உத்வேகத்தையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தின. சுதாரித்த அன்றைய அரசு ஜீவாவை உரையாற்றக்கூடாது என "வாய்ப் பூட்டுச் சட்டம்' போட்டனர் ஆனால் மறுநாள் ஜீவா தடையை மீறி கூட்டத்தில் உரையாற்றினார். அதனால் அவர் முதன்முதலாக சிறையிலடைக்கப்பட்டார்.

சிறையில் பகத்சிங்கின் நண்பர்களான பூதகேஸ்வ தத், குந்தலால் ஆகியோரையும், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி ஆகியோரையும் சந்தித்தார். இவர்களுடன், சோஷலிஸம், கம்யூனிஸம் போன்ற சித்தாந்தங்கள் பற்றியும், சோவியத் யூனியன் பற்றியும் நன்கு கற்றுக்கொண்டார். பொதுவுடமைப் புத்தகங்கள் பல படித்தார். தண்டனை முடிந்த பிறகு கம்யூனிஸ்டாக சிறையிலிருந்து வெளியேறினார்.

சிறையிலிருந்து திரும்பிய ஜீவா அவர்கள் சிங்காரவேலர் அவர்களின் நூலகத்திலிருந்த பொதுவுடமை புத்தகங்களை விரும்பி படித்தார். அதன் உட்கருத்துகளை ஆழமாக உணர்ந்து பின்னர் சிறந்த பொதுவுடைமைவாதியாக உருப்பெற்றார். 1933-ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற நாத்திகர்கள் மாநாட்டில் பெரியார், சிங்காரவேலர் ஆகியோருடன் ஜீவா தலைமை தாங்கினார். அத்துடன் மாநாட்டிற்குப் பிறகு சுமார் 200 நாத்திகப் பாடல்களை ஜீவா எழுதியதாக கூறப்படுகிறது.

பகத்சிங் எழுதிய 'நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற கடிதத்தை தமிழில் மொழிபெயர்த்ததற்காக ஜீவாவை சிறையில் அடைத்தனர். அதனால் பெரியார், தான் நடத்திய சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் மூலம் ஜீவா மொழிபெயர்த்த 'நான் ஏன் நாத்திகனானேன்?" கடிதத்தை வெளியிட்டார். அதற்காக பெரியார் கைது செய்யப்பட்டு பின்னர் 'மன்னிப்பு கடிதம்' எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். ஜீவா இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் பெரியாருக்கும் ஜீவாவிற்கும் இருவருக்கும் விரிசல் ஏற்பட்டது.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி துவக்கம்:
சுயமரியாதை இயக்கத்துக்குள் பொதுவுடமைக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால் அன்றைய அரசு, பொதுவுடைமை கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுத்தது. அரசின் ஆணைப்படி, பெரியார் பொதுவுடைமை கருத்துக்கள் பரப்பப்படுவதை நிறுத்தினார் ஆனால் ஜீவா அதற்கு
சம்மதிக்கவில்லை. இதனால், சுயமரியாதை இயக்கத்திலும் விரிசல் ஏற்பட்டு ஜீவா மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் இணைந்து 'காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை தொடங்கினர். அதன் பொதுச்செயலாளராக ஜீவா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1937 ஆம் ஆண்டு வத்தலகுண்டுவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தேர்வில் அன்றைய மதராஸ் மாகாண முதலமைச்சர் ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர் போன்ற முக்கியத் தலைவர்கள் போட்டியிட்டனர்.அதில், ஜீவா அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன்பின்னர் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் "ஜமீன் ஒழிப்பு தீர்மானம்" கொண்டுவரப்பட்டது.

ஜீவா சந்தித்த போராட்டங்கள்:

பசுமலையில் உள்ள மகாலட்சுமி மில்லில்  தொடங்கப்பட்ட தொழிற்சங்கத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர்களாக ஜீவாவும், டி.எல்.சசிவர்ணமும் பொறுப்பேற்றனர். தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அடங்கிய கோப்புக்கள் முதலமைச்சர் இராஜாஜி அவர்களின் மேசைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அரசு அதற்கு செவிசாய்க்காததால் தொழிலாளர்கள் போராட்டம் செய்தனர். போராட்டத்தில் ஜீவாவும் இணைந்து கொண்டார். இறுதியில், தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கம் சிறைவைக்கப்பட்டார். அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஆண் தொழிலாளர்களும் சிறை வைக்கப்பட்டதால், பெண்கள் போராட்டத்தைக் கையிலெடுத்தனர். இறுதியில், தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென்று நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தது. அதில், ஜீவா கையெழுத்திட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். அதன்பின்னர், மக்களிடையேயும் தொழிலாளர்களுக்கும் சோஷலிஸ்ட் கருத்துக்களை கொண்டு செல்ல 'ஜன சக்தி' என்னும் பத்திரிகையை தொடங்கினார்.

1939 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில், தொழிலாளர் போராட்டம் நடத்திய ஜீவாவை ஓராண்டு  கட்சியைவிட்டு நீக்குவதாக அறிவித்தனர். இதனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவியையும், சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார் ஜீவா.

1940-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின்போது கம்யூனிஸ்ட்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. அதனால் முக்கியத் தலைவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இன்னும் சிலரோ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். அந்த சமயத்தில் ஜீவா அவர்கள் கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.வி.காட்டேவைச் சந்தித்தார். அதனால் ஜீவா நாடுகடத்தப்பட்டார். இரண்டாம் உலகப்போரில் பிரெஞ்சு அரசும் ஆங்கில அரசும் இணைந்து பங்கேற்றதால் பாண்டிச்சேரியிலும் ஜீவா அனுமதிக்கப்படவில்லை. இறுதியில், சென்னை மாகாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஜீவா, காரைக்காலுக்குச் சென்றார்.

1946-ல் கப்பற்படை எழுச்சியின்போது முன்னணி வகித்த அனைத்து தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் கட்சிகள் மீது ஆங்கில அரசு கடுமையான ஒடுக்குமுறை நடத்தியது. மாகாண அரசுகள், கம்யூனிஸ்ட்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டு சிறையில் அடைத்தன. கட்சியின் கட்டுப்பாட்டால் ஜீவா போன்ற தலைவர்கள் 1946 நவம்பர் முதல் 1947 ஆகஸ்ட் வரை தலைமறைவாகவே இருக்க நேர்ந்தது. ஒருவழியாக 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் இந்திய திருநாடு விடுதலை பெற்றது. ஜீவா அதனை மகிழ்ச்சிபொங்க வரவேற்றார்.

ஜீவாவும் காமராஜரும்:

இந்திய விடுதலைக்குப்பின் ஜீவா தாம்பரத்திலுள்ள ஒரு குடிசைவீட்டில் தனது இரண்டாவது மனைவி பத்மாவதியுடன் தங்குகிறார். சில வருடங்களுக்குப் பிறகு, காமராஜர் முதலைச்சரான பிறகு பள்ளிக்கூடம் ஒன்றை திறக்க அங்கு வருகிறார். அந்த பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் காமராஜர் ஜீவாவின் வீட்டிற்கு சென்று பள்ளி திறப்பிற்கு வருமாறு அழைக்கிறார். "நீ போடா. நான் பின்னாடியே வாரேன்" என்கிறார். பின்பு, ஒரு மணிநேரம் கழித்து பள்ளி திறப்பு விழாவிற்கு செல்கிறார் ஜீவா. "ஏன்டா இவ்வளவு தாமதம்?" என்ற காமராஜரிடம், "என்கிட்ட இருந்த ஒரு வேட்டியை துவைத்து காய போட்டிருந்தேன். அதான் காய்ந்ததும் கட்டிக்கிட்டு வந்தேன்" என்றார் ஜீவா. இந்திய அரசியலில், முதலமைச்சரின் நண்பர், சட்ட மன்ற உறுப்பினர் உடுத்துவதற்கு ஒரு வேட்டி மட்டும்தான் வைத்திருந்தார் என்பது வியக்கத்தக்க ஒன்றாகவே இருக்கிறது.

காமராசர் அவர்களின் ஆட்சியை இன்றளவும் போற்றுகின்றோம் என்றால் அதற்கு அவர்மட்டுமே காரணமில்லை. அவருடன் பணியாற்றிய அதிகாரிகளும், அமைச்சர்களும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரது நண்பர்களும்தான் காரணம். காமராஜரும் ஜீவாவும் அரசியலில் எதிர் எதிர் துருவத்தில் இருந்தாலும் மிகுந்த நட்புடனே இருவரும் இருந்தனர். ஒருவனின் வெற்றி மற்றும் தோல்வியானது அவனது நண்பர்கள் மற்றும் நண்பர்களின்  செயல்பாடுகள் தீர்மானிக்கிறது. அதற்கு ஜீவானந்தம் மற்றும் காமராசர் இடையேயான நட்பு ஒரு உதாரணம்.

ஜீவாவின் இறுதிக்காலம்:

1963 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் நாள் இரவன்று ஜனசக்தி மற்றும் தாமரை பத்திரிக்கைகளி$ன் அலுவல்களை முடித்துவிட்டு உறங்கச் சென்றவருக்கு திடீரென்று மார்புவலி ஏற்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நினைவு திரும்பிய  பின்னர் காமராசருக்கும் மனைவி பத்மாவதிக்கும் தெரியப்படுத்த சொல்லிவிட்டு உரங்கச் சென்றவர் அப்படியே உறங்கிவிட்டார்.

நன்றி,
ஊமை இளைஞன் 

No comments:

Post a Comment