Monday, 26 August 2019

ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் - கல்யாண சுந்தரம்



வணக்கம் தோழர்களே... நம் நாட்டில் இயற்கை பேரிடரோ அல்லது குழந்தைகளின் கல்விச் செலவுக்கோ நாம் விரும்பும் பிரபலம் நன்கொடை வழங்கினால் அதைப் பெருமையாகக் கருதி நாமே வழங்கியதுபோல் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பகிர்வோம். சில நேரங்களில் நம் பிரபலத்தின் போட்டியாளர் நன்கொடை அழித்து நாம் விரும்பிய பிரபலம் ஏதும் அழிக்காதபோது சிலர் தாமாகவே ஒரு செய்தியை திரித்து பகிர்ந்து மகிழ்ச்சிகொள்வார்கள். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அவர்கள் சில இலட்சங்களை தரும்போதே அவர்களை தலையில் வைத்துக் கொண்டடுகிறோம். ஆனால், ஒரு தனிமனிதன் தன்வாழ்நாளில் சம்பாதித்த, கிடைத்த அனைத்தையும் மற்றவருக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவரை என்னவென்று எப்படி பாராட்டுவது புகழ்வது. அவரது பெயர் ஒன்றே அவரை பறைசாற்றும். ஆம். அவர்தான் மதிப்பிற்குரிய பாலம் கல்யாணசுந்தரம்.

பிறப்பு மற்றும் படிப்பு:
1940 ஆம் ஆண்டு மேலக்கருவேலங்குளம் என்ற ஊரில்,  பால்வண்ணநாதன் - தாயம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த கல்யாணசுந்தரம் அவர்கள் இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கினார். தமிழின் மீது அதீத ஆர்வம் கொண்டதால் தமிழில் பி.ஏ. இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், தனது பெயருக்குப் பின்னால் 36 எழுத்துகளுக்குச் [பா. கல்யாணசுந்தரம்  M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS] சொந்தக்காரரான கல்யாணசுந்தரம் அவர்கள் தான் படித்த அனைத்து துறைகளிலும் முதலிடம் வகித்தார். 

1963ஆம் ஆண்டு இந்திய-சீனப் போரின் போது, அப்போதைய இந்திய பிரதமர் திரு. ஜவகர்லால் நேரு அவர்களின் வானொலிப் அறிக்கை கேட்டு, தேசியப் பாதுகாப்பு நிதிக்காக எட்டரைப் பவுன் தங்கச் சங்கிலியை முதலமைச்சர் காமராசர் அவர்களிடம் கொடுத்தார்.

வாழ்வின் மூன்று கட்டளைகள்:

தனது இளம் வயதில் அவரது தாய் திருமதி. தாயம்மாள், கல்யாணசுந்தரம் அவர்களிடம் மூன்று கட்டளைகள் சொன்னாராம். அவைகள்:

1. எதன்மீதும் பேராசை கொள்ளாதே.
2. கிடைக்கும் வருவாயில் பத்தில் ஒருபங்கை (1/10) மற்றவர்களுக்கு தானம் செய்.
3. தினமும் ஒரு உயிருக்கு நல்லது செய்தால் வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழலாம்

இந்த மூன்று கட்டளைகளையும், தன்னுடைய 79 வயதிலும் கல்யாணசுந்தரம்  அவர்கள் .கடைபிடித்து வருகிறார் என்பது ஆச்சரியமான உண்மை.

ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்:
பேராசிரியராக பணியாற்றி வந்த கல்யாண சுந்தரத்திற்கு மாதம் இருபதாயிரம் சம்பளம். ஆனால், தன் சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, ஒரு உணவகத்தில் சர்வராக பணிபுரிந்து தனது செலவுகளை பார்த்துக்கொண்டார். தொடர்ந்து 35 வருடங்கள் பேராசிரியராக சம்பாதித்த அனைத்தையும் மற்றவர்களின் நலனுக்காகவே விட்டுக்கொடுத்தார்.

உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த அரசு ஊழியர்களோ அல்லது தனியார் நிறுவன ஊழியர்களோ இவ்வாறு செய்தது இல்லை என்பதால், அமெரிக்காவில் "ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர் (Man of the Millennium)" என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 6 .5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் முப்பது கோடி ரூபாய் ) பரிசாக பெற்றார். ஆனால், அந்த பணம் முழுவதையும் ஏழை குழந்தைகளுக்கே வழங்கினார்!

ஐந்தாவது ஊதிய குழுவின் விடுபட்ட ஊதியத்தை (ரூபாய் பத்து லட்சம்) ஏழைகளுக்கும், ஆறாவது ஊதிய குழுவின் ஐந்து லட்சத்தை ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் எழுதிவைத்தார்.

பாலம் தொண்டு நிறுவனம்:

சிலருக்கு எங்கு நன்கொடை கொடுப்பது என்பது தெரியாது. சிலருக்கு எங்கு நன்கொடை வாங்குவது என்பது தெரியாது. இவர்கள் இருவரையும் இணைத்து அவர்களிருவருக்கும் இடையில் ஒரு பாலமாக இருக்க தொடங்கப்பட்டதுதான் பாலம் தொண்டு நிறுவனம். அதன் தலைவராக கல்யாண சுந்தரம் அவர்கள் விளங்குகிறார்.

அப்துல் கலாமிற்கு இணையான கல்யாண சுந்தரம்:

ஒருமுறை பில் கிளிண்டன் அவர்கள் இந்தியா வந்தபோது அரசுப்பணியில் இல்லாத இருவரைச் சந்திக்க முற்பட்டார். அவர்களில் ஒருவர் அப்துல் கலாம் அவர்கள் மற்றொருவர் பாலம் கல்யாண சுந்தரம் அவர்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இவரின் செயல்களை பாராட்டி, கல்யாண சுந்தரம் அவர்களை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார். ஆனால், சில மாதங்கள் கழித்து ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு மீண்டும் தனது இருப்பிடத்திற்கே வந்துவிட்டார்.

விருதுகள்:

1) அமெரிக்காவின் 'Man of the Millennium' விருது.

2) கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தால் 'A Most Notable intellectual in the World' என்ற பட்டத்தை வழங்கியதுடன், நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்திருந்தால் அது அவருக்கு கொடுக்கவேண்டும் என்று பாராட்டியது.

3) ஐ.நா சபை விருது 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர்.

நன்றி,
ஊமை இளைஞன்

No comments:

Post a Comment