Wednesday, 28 August 2019

கழிவறை இல்லை, கல்லறை செல்கிறேன்! - பெண்ணின் தற்கொலை


ஜோக்கர் படத்தில் உள்ள ஒரு காட்சியில், "கழிவறை இருக்கா, கல்யாணம் பண்ணிக்கிறேன்!" என்னும் வசனம் இருக்கும். அரசின் புதிய திட்டத்தின் மூலம் கழிவறை கட்ட அனுமதிபெற்று (உடன் கல்யாணத்திற்கு காதலியின் அனுமதியும் பெற்று) அதிகாரிகளின் அலட்சியத்தால் கழிவறை கட்டிமுடிக்கும் முன்பே கல்யாணம் முடிந்துவிடும். காதலன் காதலியை கட்டிவிடுவான் ஆனால் கழிவறையை கட்ட முடியாது. ஒருவழியாக, அரைகுறையாக கட்டிமுடித்த கழிவறைக் கட்டிடமும் சில நாட்கள் கழித்து பெய்த மழையில் நனைந்து அந்த பெண்ணின்மீது இடிந்து விழுந்துவிடும். இதுபோன்றதொரு உண்மை நிகழ்வு தமிழகத்தில், ஆனால் கழிவறைக் கட்டிடம் கட்டித் தராததால் திருமணமான பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கழிவறை இல்லை அதனால் தற்கொலை:

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஷாலினி என்பவருக்கும் சசிகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அவருக்கு தற்பொழுது மூன்று குழந்தைகள். திருமணத்திற்கு முன்னரே வீட்டில் கழிவறை கட்டிமுடிக்க வேண்டுமென்பது ஷாலினியின் கோரிக்கை. ஆனால், சில காரணங்களால் கழிவறை கட்டிமுடிக்காமலேயே கல்யாணம் நடந்துவிட்டது. திருமணத்திற்குப் பின்னரும் கழிவறை கட்டிமுடிக்காததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (08/25/2019), கழிவறை கட்டிமுடிக்காத பிரச்சினை மீண்டும் பெரிதாக வெடித்தது. மனமுடைந்த ஷாலினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தனிநபர் கழிப்பறை திட்டம்:

திறந்தவெளி கழிப்பிடங்களால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள், நோய்த்தொற்று ஆகியவற்றை கருத்தில் கொண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறை கட்ட குடும்பம் ஒன்றிற்கு ரூ. 12 ஆயிரம் மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. இந்தத் தொகையானது, பயனாளிகளுக்கு நேரடியாகவோ அல்லது அந்தந்த ஊராட்சியிலுள்ள வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலமாகவோ தரப்படும். ஏழைப் பொதுமக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி தங்களது வீட்டிற்கு கழிவறை கட்டிக்கொள்ளலாம். 

ஒரு அரசு எவ்வளவுதான் நல்ல திட்டங்களை அறிவித்தாலும் அதனை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது அதிகாரிகளின் கைகளிலேயே இருக்கின்றது.  அரசின் திட்டங்கள் அனைவருக்கும்
கிடைத்துவிட்டதா என அறிவதற்கும், அதிகாரிகள் சரியாக பணிபுரிகிறார்களா என்பதை கவனிக்கவும் ஒரு குழு அமைத்தால் மக்களின் குறைகளையும் தேவைகளையும் நன்றாக அறியலாம்.

ஆளுங்கட்சியினரின் திட்டங்களில் குறைகளை மட்டுமே கண்டுபிடிக்கும் எதிர்க்கட்சிகள், உண்மையில் மக்களின்மேல் அக்கறை இருக்குமானால், தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் தங்களது கட்சியின் தொண்டர்களை ஆளுங்கட்சியினரின் நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் பயன்படுத்தலாம். அப்படி செய்திருந்தால் இன்று ஒரு உயிர் பிரிந்திருக்காது.

எல்லா வீடுகளுக்கும் இண்டர்நெட் கனெக்சன்:

இந்நிலையில் தமிழக அரசானது அரசு அலுவலகங்களில் காகிதம் இல்லாத நிலையை அடைய அனைத்து ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகளில் இணையதள வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இஃது தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக இருந்தாலும் மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் இருப்பிடம் அனைத்து மக்களுக்கும் கிடைத்துவிட்டதா என்பதை உறுதிசெய்தபின் இந்த திட்டங்களை மேம்படுத்தலாம்.

பெண்ணிண் வளர்ச்சி: 

ஒரு பெண் (சிந்து) அயல்நாட்டில் இறகுப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதை கொண்டாடும் இவ்வேளையில் மற்றொரு பெண் (ஷாலினி) கழிவறை வசதி இல்லாமல் உள்நாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளாள். ஏழு வருடமாக கழிவறை இல்லா வீட்டில் அந்தப் பெண் எத்தனை சங்கடங்களை அனுபவித்திருப்பாள். சாலைகளில் அல்லது தெருக்களில் கழிப்பிடம் இருந்தாலும் 5 ரூபாய் கொடுக்க மறுத்துவிட்டு மற்றவர்கள் என்ன நினைத்தாலும் என்ன சொன்னாலும் பரவாயில்லையென பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைக் கண்டுள்ளோம். அந்த மனப்பான்மைதான் திருமணமாகி ஏழு வருடங்களாகியும் கழிவறை கட்ட மனம் வரவில்லை அல்லது அதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையில், இன்னும் எத்தனைப் பெண்கள் இதுபோன்ற கொடுமையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். பெண் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறாளோ அதே அளவிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளாள். 

இதுமட்டுமல்ல, குழந்தைகளுக்கு பால் கொடுக்கும்போதும் பெண்கள் பல இன்னல்களை சந்திப்பதுண்டு. கோவில்கள், மருத்துவமனை, பேருந்து நிலையங்கள் மற்றும் இன்னும் பல பொது இடங்களில் கூனிக்குறுகி மற்றவர்கள் பார்த்து விடக்கூடாதென தன்னை வருத்தி, பாலூட்டும் போது பால்சுரப்பதும் குறையும்; குழந்தைக்கும் பசி தீராது. மகிழ்ச்சியாக, மனநிறைவாக பாலூட்டும் போது தான் தாய்க்கும், குழந்தைக்குமான பிணைப்பு அதிகமாகும். எனவேதான் பொது இடங்களில் தாய்மார்கள் பால் கொடுக்க தமிழக அரசானது பொது இடங்களில் பாலூட்டும் அறைகளை திறந்துள்ளது. பெண்கள் ஒவ்வொன்றிற்கும் ஆண்களை சார்ந்திருக்கும் வரை இந்நிலை நீடித்துக்கொண்டே இருக்கும். அதற்காக ஆண்களை பெண்கள் சார்திருக்கக் கூடாது என சொல்லவில்லை. சில விஷயங்களில் பெண்கள் ஆண்களை சார்ந்திருக்கத் தேவையில்லை எனக்கூறுகிறோம்.

நன்றி,
ஊமை இளைஞன்

No comments:

Post a Comment