Thursday, 18 July 2019

ஓட்டுக்கு ரெண்டாயிரம்.....



திங்கட்கிழமை காலை 6.00 மணி. கிழக்கே அடிவானத்தில் செந்நிறக் கதிர்கள் சிறகடிக்கத் தொடங்கிய சற்றுநேரத்தில், கூரைவீட்டின் மேற்பகுதியில் உள்ள சிறுதுவாரத்தின் வழியே நுழைந்த கதிரொளி மாராக்காவின் தூக்கத்தை கலைத்துச் சென்றது. கதவைத் திறந்து பார்த்த மாராக்காவின் எதிரே, பெட்டைக்கோழியின் அழகில் மயங்கிய சேவல்கள் தன் கொக்கரித்தலை மறந்து கொஞ்சிக்கண்டிருந்தது. பசுக்கள் தன் சமிக்ஞயை கதக்கிக்கொண்டிருந்தன. பசுக்களின் கொம்புகள் மற்றும் முதுகுபுறத்தில் சிட்டுக்குருவிகள் தன் அலகால் கொத்தி கொண்டிருந்தது. எதிர்வீட்டு வாசலில் இருந்த குப்பைகளை துடைப்பம் கொண்டு வீதியில் தள்ளிக்கொண்டிருந்தாள் மாரியம்மாள். சோம்பலை முறித்து வேலையை தொடங்கினாள் மாராக்கள். பசுக்களின் அருகில் கிடந்த மாட்டுச்சாணத்தை வாளியில் உள்ள தண்ணீருடன் கரைத்து வாசலில் தெளிக்கத்தொடங்கிய சிறிது நேரத்தில்....

"என்ன மாராக்கா, ரெண்டு நாளா ஆளையேக் காணோம்? ஏதாவது விசேஷமா?" என்றாள் மாரியம்மாள்.

கையில் வைத்திருந்த வாளியை கீழே வைத்துவிட்டு, "ஆமாண்டி. பேத்தி ஆளாயிட்டா. அதான் டவுனுக்கு போயிட்டு வந்தன்... ம்ம்ம்...." என்றால் மனத்தில் கனத்துடன்.

"அட நல்ல விஷயம்தானே. ஏன் இப்படி சலிச்சுக்கிற?" என்ற மாரியம்மாளிடம், "நல்ல விஷயம்தான். என் வூட்டுக்காரரோ இல்ல ஒரு பையனோ இருந்திருந்தா, என் பேத்தியோட சடங்க ஜாம் ஜாம்'னு பண்ணிருப்பேன். மூணாவது மனுசியாட்டம் போய் நின்னுட்டு வந்துட்டேன்" என்றாள் விரக்தியுடன்.

"சரி விடுக்கா. எல்லாம் நாம நெனைக்கிறதா நடக்குது." என மாரியம்மாள் கூறிமுடிக்கும்போது "நீங்கள் நல்லா இருக்கோணும் நாடு முன்னேற...." என்ற பாடல் ஒலிப்பெருக்கியில் கேட்டது. 

"என்னாடி பாட்டெலாம் பாடுது. யாராவது முக்கியமானவங்க வாரங்களா?" என்றாள் மாராக்காள்.

"ஆமாக்கா. அடுத்த மாசம் எலெக்சன் வருதுல. அதுக்குதான் இந்த பாட்டெலாம். நம்ம தலைவர் கட்சிக்காரர்தான் வராரு."

"நம்ம தலைவர் கட்சிக்காரருனு சொல்ற. அப்டினா நம்ம ஊருக்காரரா?"

"இல்ல இல்ல. நம்ம ஊரு இல்ல. எந்த ஊரா இருந்தா நமக்கென்ன? நம்ம ஓட்டு நம்ம தலைவருக்குதான" என்று மாரியம்மாள் கூறிமுடித்தாள்.

"ம்ம். அதுவும் சரிதான். ஆமா, நம்ம தலைவரு கட்சிக்கு எதிரா யாராரு நிக்கிறாங்க?"

" அதுவா? நம்ம ஊருலயே நிறையபெரு நிக்கிறாங்க. சிலபேரு எதிர்க்கட்சி சின்னத்துல நிக்கிறாங்க. சிலபேரு தனியா நிக்குறாங்க."

"தனியாவா? அது யாருடி நம்ம ஊருல அம்புட்டு பெரியாலு?"

"அட, நம்ம பொன்னாத்தா பேரன் பாண்டி இருக்கான்ல, அவன்தான் தனியா நிக்குறானாம்"

"எதுக்குடி அந்த பையனுக்கு இந்த வேலையெல்லாம்? படிச்சோமா, வேலைக்கு போனோமானு இருக்காம!"

"ம்க்கும்.. எங்க கேக்குறானுங்க. கொஞ்சம் படிச்சிட்டாலே துளிருட்டு போயிடுது. நாட்டை திருத்துறேன், போராட்டம் பண்றேன்னு கூடசுத்துற நாலுபேத்த சேத்துக்கிட்டு கெளம்பிடுதுங்க. இவிங்கள நம்பி எவன் ஓட்டு போடறானாம்"

"ம்ம்ம்.. அதுவும் சரிதான்."

"என்னாடி காத்தாலையே ரெண்டுபேரும் பொறணி பேசிட்டு இருக்கீங்க" என்ற குரல் பொன்னாத்தாளிடமிருந்து வந்தது.

திடுக்கிட்ட மாரியம்மாள் "வாக்கா. அட நீ வேற. இன்னிக்கு நம்ம ஊருக்கு தலைவரு வராறுல, அதைப்பத்திதான் பேசிட்டுருக்கோம்"

"தலைவரா? அதுயாரிடி?"

"ஆமா ஆமா.. வூட்டுலயே தலைவரு வந்துட்டாங்கள. இப்படித்தான் கேப்ப!" 

"அட விசயத்த சொல்லுடி."

"நம்ம பாண்டி எதோ எலெக்சன்ல நிக்குதாம். நம்ம தலைவர எதுத்து நின்னு ஜெயிக்க முடியுமா? எதுக்கு இந்த வேலையெல்லாம்?"

"எது நம்ம தலைவரா? 20 வருசமா நம்ம தலைவருன்னுதான் ஓட்டு போட்டோம். என்னத்த கண்டொம்! இந்த பசங்களெல்லாம் சேந்து இவன நிக்க சொல்லிருக்காங்க. இவனும் சரினு சொல்லிட்டானாம். இவ்ளோ பேசுறியே, ஏன் நீ பாண்டிக்கு ஓட்டு போடமாட்டியா?"

"அப்பிடி இல்லக்கா. நேத்துதான் ஓட்டுக்கு ரெண்டாயிரம்னு எனக்கும், உங்க தம்பிக்கும் சேத்து நாலாயிரம் குடுத்துட்டு போனாங்க. "இன்னிக்கு காத்தால 10 மணிக்கு தலைவரு வராரு சீக்கிரமா டவுன்ல பள்ளிக்கோடத்து கிரவுண்டுக்கு வந்துடுன்னு" நேத்து சாயங்காலமே கட்சிக்காரங்க வந்து கூப்ட்டு போயிட்டாங்க. அதான் சீக்கிரமே எந்திரிச்சி வேலைசெஞ்சிட்டு இருக்கேன்" என்றாள் மாரியம்மாள்.

மாராக்கள் இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே வாளியில் உள்ள சாணநீரை வாசலெங்கும் தெளித்துக்கொண்டிருந்தாள்.

தொடர்ந்த மாரியம்மாள், "கட்சி கூட்டத்துக்கு போனா, தனியா முன்னூறு ரூவாயும் சாப்பாடும் தரங்களாம். பொழுது வரைக்கும் வேலைசெஞ்சாக்கூட இருநூறு ரூவாதான் கிடைக்கும். இங்கபோயி ஒரு மூணு மணிநேரம் சும்மா ஒக்காந்துட்டு வந்தாலே முன்னூறு ரூவா தராங்க. இந்த முன்னூறு ரூவா இருந்தா, ஒரு மாசத்துக்கு பையன் டவுனுக்கு பள்ளிக்கோடம் போயிட்டு வந்துடுவான்" என்றாள் விரக்தியுடன்.

"போடி, போக்கத்தவளே. இந்த நாலாயிரத்தையும் அவன் கொடுக்குற முன்னூறையும் வச்சு எத்தன நாளைக்கு பொழப்ப? அதுக்குதான் இந்த பசங்களெல்லாம் சேந்து எலெக்சன்ல நிக்கிறாங்க. எங்கயோ இருக்குறவன நம்ம ஊருல நிறுத்திட்டு நம்ம தலைவரு கட்சி, நம்ம தலைவரு சின்னம்னு ஓட்டு போட்டதுக்கு, படிக்க பள்ளிக்கோடமும் இல்ல, ஏதாவது காச்சல், சளி வந்தாக்கூட டவுனு வரைக்கும் போறதா இருக்கு. நம்ம ஊருலயே, நம்ம கஷ்டத்த தெரிஞ்சவனா பாத்து ஓட்டு போடலாம். எவேவனுக்கோ ஓட்ட போட்டுட்டு, "தண்ணி வரல, கரண்டு வரலனு அழுவுறதுல ஒரு மண்ணும் இல்ல. நான் சொல்றத சொல்லிப்புட்டேன். உங்க இஷ்டம்." என்று கூறிவிட்டு நகர்ந்தாள் பொன்னாத்தாள்.

மாராக்காவும் மாரியம்மாளும் தன் அறியாமையை நினைத்து திகைத்து நின்றனர்.

நன்றி,
ஊமை இளைஞன்

No comments:

Post a Comment