Friday 19 July 2019

மாற்றம் உண்டாக மனிதனை மனிதனாக மதிப்போம்.....


சென்னையிலுள்ள டைட்டில் பார்க்கில் மானேஜராக பணிபுரியும் நடேசனுக்கு மாதம் இரண்டு இலட்சம் சம்பளம். அவனது திறமையை அறிந்து பல கம்பெனிகள் அதிக சம்பளம் தருவதாகக் கூறி, தற்பொழுது பார்க்கும் வேலையை விட்டுவிட்டு தங்களது கம்பெனிக்கு வந்து வேலைபார்க்கும்படி கூறினர். ஆனால், நடேசன் அதற்கு செவிமடுப்பதாய் தெரியவில்லை. நடேசன் வேலைபார்க்கும் கம்பெனிக்கு அமெரிக்காவிலிருந்து சில  உயரதிகாரிகள் புதிய ப்ரோஜெக்ட் விசயமாக வந்திருந்தனர். அந்நேரம், கம்பெனியின் உரிமையாளர் முக்கிய விஷயமாக வெளியூர் சென்றிருந்ததால் நடேசனையே அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொள்ளுமாறு கூறியிருந்தார். அதன்படியே, நடேசன் புதிதாக வந்திருந்த அமெரிக்கர்களிடம் நன்கு உரையாடி அவர்களிடமும் நன்மதிப்பு பெற்று வெற்றிகரமாக கம்பெனிக்கு புதிய ப்ரோஜெட்களை பெற்றுத்தந்தார். தனது பயணத்தை முடித்துகொண்டு மீணடும் கம்பெனியை அடைந்தவுடன்  கம்பெனியின் உரிமையாளரான சதாசிவம் நடேசனுக்கு தனது கம்பெனியின் புதிய ப்ரொஜெக்ட்டில் பங்குதாரராக நியமித்தார். புதிய ப்ரொஜெக்ட்டும் சிறப்பாக போய்க்கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு பிறகு, சாதாசிவமும்  நடேசனும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் நடேசனின் செல்போன்  ஒலித்தது.

சார், 

"ஹலோ அப்பா எப்படி இருக்கிங்க?" என்றான் நடேசன்

"ம்ம். நல்லாயிருக்கேன்பா. நீ நல்லா இருக்கியா? " என்றார் நடேசனின் அப்பாவான கணேசன்.

"ம்ம் ... ஊர்ல அண்ணண், மாமா , அத்தை , சித்தப்பா சித்தி , ஏரியா  பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?"

 "எல்லாம் நல்லாருக்காங்க பா. வர்ற தை மாசம் 12 ஆம் தேதி ஊரில திருவிழா... மறக்காம வந்துருப்பா. லீவு இல்லனு சொல்லிடப்போற. உன்ன பாத்து ரொம்ப வருஷமாச்சுப்பா. கண்ணுல இருக்குற மாதிரி இருக்கு."

"திருவிழாவா? எந்த கோவில்லபா ? "

"ரொம்ப வருசமா பூட்டி கடந்துச்சுல...நம்ம காளியம்மன் கோயில்..கேஸ் எல்லாம் முடிஞ்சி இந்த வருஷம்தான் திருவிழா பண்ணறாங்க"


"கண்டிப்பா வரேன்பா...உடம்ப பாத்துக்கோங்க.."


"ம்ம் .. சரிப்பா.. வச்சிடறேன்.."


"சொல்லுங்க  நடேசன். யாரு அப்பாவா??" என்றார் சதாசிவம்.


"எஸ் சார் ... நெக்ஸ்ட் மந்த் நேட்டிவ்ல டெம்பிள் பங்க்ஷன் .. அதான் கால் பண்ணாரு" என்றார் நடேசன்..


"நெக்ஸ்ட் மந்த்தா ... டேட் என்ன ?"


"ஜனவரி 25 சார் ..."


"அந்த டேட்ல நம்ம ஃப்ரீதான்... நீங்க 1 வீக் லீவ் எடுத்துக்கோங்க..."


"தேங்க் யு சார் .."


சிறிது நாட்களுக்கு பிறகு ஊருக்கு புறப்பட்டு சென்றான். வீட்டை அடைந்த நடேசன் அப்பாவை சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு பின்னர் ஓய்வெடுக்க முடிவுசெய்து அருகில் கிடந்த கட்டிலில் சாய்ந்தான். தொலைதூரப் பிரயாணம் என்பதால் அயர்ந்து தூங்கிவிட்டான்.


"நடேசா.. கண்ணு எந்திரிப்பா.. நேராகுது. கோயிலுக்கு போலாம்." என்றார் கணேசன்.


"பத்து நிமிஷம் பா. ரொம்ப டயர்டா இருக்கு"


"பூசை ஆரம்பிச்சிருவாங்கப்பா.. வந்து தூங்கிக்கலாம்.எந்திரிப்பா..."


"ம்ம்ம்.." (சோம்பலுடன் எந்திரித்து சென்றான்)


குளித்து முடித்தவுடன், தனது அப்பா வைத்திருந்த மோட்டார் வண்டியில் தனது அப்பாவை ஏற்றிக்கொண்டு கோவிலுக்குச் சென்றான். செல்லும் வழியில்,


"தம்பி எப்போ வந்தீங்க?" என்றார் வழியில் செல்லும் முதியவர்...


"காலைலதாங்க வந்தேன்... நல்லாருக்கீங்களா?"


"ம்ம் ஏதோ இருக்கன் கண்ணு. நீங்க சௌக்கியமா?"


"ஆம். நல்லாயிருக்கங்க..."


"ம்ம் சரிப்பா... கோயிலுக்கு போயிட்டு வாங்க.."


"ம்ம் சரிங்க... பாத்து போங்க.."


கோவிலின் அருகில் சென்றான். கோவிலுக்குள் சில மனிதர்கள் பட்டாடை தரித்து தலைப்பாகையுடன் தரிசனம் செய்துகொண்டிருந்தனர். பலர், வெளியில் நின்றுகொண்டு உள்ளிருக்கும் கடவுளை பார்க்க அலைமோதிக்கொண்டிருந்தனர். கோவிலின் பூசாரி இடதுகையில் மணியும், வலதுகையில் கற்பூர ஆரத்தியையும் எடுத்துக்கொண்டு கடவுளுக்கு காட்டிக்கொண்டிருந்தார். பூஜையை முடித்தபின், கற்பூர ஆரத்தியை ஒவ்வொருவரிடமும் காட்டிக்கொண்டு வந்தார். உள்ளிருந்தவர்கள் தாங்களாகவே ஆறத்தியில் இருந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டனர்... வெளியில் இருந்தவர்கள் பக்கம், ஆரத்தியை சற்று மேலேதூக்கி காமித்துவிட்டு அதன்பின் அவர்கள் போடும் காணிக்கைகளை ஆராத்தித்தட்டில் பெற்றுக்கொண்டு கோவிலின் உள்ளே சென்றார் பூசாரி. கோவிலின் உள்பக்கம் விசாலமாக இருந்ததாலும், பூசாரி உள்ளே சென்றதாலும், நடேசன் தன் தந்தையின் கையைபிடித்துக்கொண்டு தனக்கு முன்பிருந்த கூட்டத்தை கடந்து உள்செல்ல முற்பட்டான். அப்பொழுது,


"நடேசா.. என்ன பன்ற?... நம்ம உள்ள போகக்கூடாது!" என்று கத்தினார் (பதட்டத்துடன்)


"ஏப்பா... என்னாச்சு?"


"என்ன தம்பி... கொஞ்ச நாள் ஊருல இல்லைனா பழசலாம் மறந்து போய்டுமா" என்ற குரல் ஊர்த்தலைவரிடமிருந்து கனத்தது.


"சாமி மன்னிச்சுடுங்க.. எம்பையன் தெரியாம உள்ள வந்துட்டான்"


"ம்ம்.. அப்புறம்... கோயிலுக்குள்ள வந்ததுக்கு குத்தம் கட்ட சொல்லு" என்று அதட்டினார் ஊர்த்தலைவர்.


"சேரிங்க சாமி.. நான் கட்ட சொல்றேன்.. டேய் போய்ட்டு அவங்க எவ்ளோ சொல்றாங்களோ அந்த பணத்த கட்டிப்புட்டு வா..." என்று அழுகையுடன் கூறினார் கணேசன்.


"அப்பா நம்ம என்னப்பா பண்ணோம்... எதுக்கு குத்தம் கட்டணும்?"


"டேய்.. அதான் உங்கொப்பன் சொல்றான்ல.. போய் கட்டிட்டு வா?" என்றார் ஊர்த்தலைவர்.


தோய்ந்த முகத்துடன், தன் தந்தையின் கட்டளையாலும் கோவிலின் நன்கொடை பிரிவுக்குச் சென்று பணத்தை கட்டினான். திரும்பி பார்க்கையில், வெளியில் இருந்தவர்களில் பெரும்பாலானோர், கோவிலின் வெளிப்புறத்தில் நீண்டிருந்த கொடிக்கம்பத்தின் அருகே திருநீறு கொட்டப்பட்டிருந்தது. அதையெடுத்து தங்களது நெற்றியில் பூசிக்கொண்டிருந்தார்கள். கொடிக்கம்பத்தின் அருகே வேகமாக சென்ற கணேசன்  திருநீறை கையில் கொஞ்சம் எடுத்துக்கொண்டுவந்து நடேசனின் நெற்றியில் வைத்தார்.


கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு டாட்டா சுமோ கார்கள் கோவிலின் அருகே வந்து நின்றது. காரிலிருந்து வெள்ளை வேஷ்டி, கதர் சட்டை, கழுத்தில் 10 சவரனுக்கு மேல் சங்கிலி, இரண்டு கைகளின் விரல்களிலும் மோதிரங்கள் அணிந்த மனிதர்கள் இறங்கினார்கள். தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை கையிடுக்கில் வைத்துக்கொண்டு ஊர்த்தலைவரும், ஆராத்தித்தட்டை கையில் ஏந்திக்கொண்டு பூசாரியும் கோவிலுக்கு வெளியே நின்ற காரினருகே வந்து நின்றனர்.


"அய்யா.. வாங்க!" என்றார் ஊர்த்தலைவர் (பணிவுடன்).


"சாமி...தீபம் எடுத்துக்கோங்க" என்றார் பூசாரி [பக்தியுடன்]


தீபத்தை தொட்டு கும்பிட்டுவிட்டு சட்டைப்பையிலிருந்த ஐநூறு ரூபாயை தட்டில் வைத்தார் அந்த பெரிய மனிதர்.


"நீங்களும், உங்க குடும்பமும் நீடூழி வாழனும் சாமி.. இந்தாங்க, உங்களுக்கு சிறப்பு பிரசாதம்." என்றார் பூசாரி.


"நல்லது" என்று கூறிவிட்டு மீண்டும் காரில் ஏறிச்சென்று விட்டார் அந்த பெரிய மனிதர்.


இதையெல்லாம் உற்று கவனித்துக்கொண்டிருந்த நடேசன், தனது அருகிலிருந்த பெரியவரிடம் அந்த பெரிய மனிதரைப்பற்றி விசாரித்தான்.


"தாத்தா..யார் இந்த மனிதர்? அவரைக்கண்டதும் ஏன் பூசாரியும் ஊர்த்தலைவரும் கோவிலுக்கு வெளியவே வந்துவிட்டார்கள்? அவர் அவ்வளவு பெரிய மனிதரா? அவர் இவர்களுக்கு அப்படி என்ன செய்துவிட்டார்?" என்று தனது மனதில் ஓடிக்கொண்டிருந்த கேள்விகளையெல்லாம் கேட்டான்.

"தம்பி அவர தெரீல.. அவருதான் இந்தவூரு எம்எல்ஏ அதனாலதான் இந்த மரியாதையெல்லாம்..." என்று சிரித்துக்கொண்டார் பெரியவர் 

"ஏன் தாத்தா சிரிக்கிறீங்க?"

"இல்ல தம்பி.. இப்போ வந்தாரே அந்த பெரிய மனுஷன். அவரு நம்ம ஊருதான்...நம்ம சனம்தான்... நம்ம தெரு தாண்டி ரெண்டாவது தெரு. மொதல்ல ஒரு கட்சில இந்தப்புல... அப்புறம் எலக்சன்ல நின்னு இப்போ எம்எல்ஏ ஆயிட்டாப்ல. நீ உள்ள போயி சாமிகும்பிட போன, ஆனா நீ உள்ள வந்தா தீட்டுனு சொல்லி கோயில சுத்தம் பண்ணாங்க... ஆனா அந்த மனுஷனுக்கு சாமியே வெளில வந்து தரிசனம் தந்துட்டு போகுது!!!... சாமிகக்கூட சாதிப்பாக்குது போல.." என்று ஏளனமாக சிரித்தார்.

"ஏன் தாத்தா இந்த சாதியெல்லாம் இன்னுமா பாக்குறாங்க? இதெல்லாம் ஒழியவே ஒழியாதா?"

பெரியவர் இன்னும் சத்தமாக வாய்விட்டு சிரித்துவிட்டு, "இன்னுமா பாக்கறாங்களாவா?  கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் எல்லாம் மாறிடும்னு நினைச்சன்...ஆனா போன வாரம் பொன்பரப்பியில ரெண்டு சமூகத்தை சேர்ந்தவங்க மோதிக்கிட்டாங்க .. பொன்னமராவதியிலயும் இதே பிரச்சனைதான்... இது இந்த ரெண்டு ஊருல மட்டுமில்ல நாடு பூராவும் நடக்குது. ஏன் இப்போ உனக்கு நடந்ததுகூட சமூக பிரச்சனைதான்..என்ன வெளில தெரியறது இல்ல?"

"நானும் கேள்விப்பட்டேன் தாத்தா... இவ்வளவு அறிவியல் வளந்துருச்சு...நாடு எங்கயோ போய்ட்டு இருக்கு? இந்த காலத்துல எதுக்கும் உதவாத சாதிய பெருசா தூக்கிபிடிச்சி சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்களே தாத்தா? இவங்கள என்னதான் சொல்றது?"

"இவங்கள சொல்லி எந்த தப்பும் இல்ல தம்பி... இவங்க எல்லாரும் பிரிஞ்சி கிடந்ததான் அவங்க பொழப்பு நல்லா ஓடும்... "

"யார சொல்றிங்க தாத்தா?"
...அவங்கதான் தம்பி.. சாதிக்கொரு கட்சி... கட்சிக்கொரு தலைவன்.. அவனுக்கு கீழ நாலு பேரு... அந்த நாலு பேருக்கு கீழ நானூறு பேருனு... அப்படியே வாழையடி வாழை மாதிரி சாதிய திணிச்சிட்டு இருக்காங்கள அவங்கதான்... இதுல வேடிக்கை என்னனா, தலைவனையும் சாதியையும் உசுரா பாக்குறாங்க பாரு அவங்கதான் சண்டையிட்டும் வெட்டிகிட்டும் கிடப்பாங்க... ஆனா, தலைவனோ, தலைவனோடு பசங்களோ, பொண்ணுங்களோ, அவங்க குடும்பத்தை சேர்ந்தவங்களோ யாரும் சண்டையில இருக்கமாட்டாங்க... நாலு லட்சம் பெற வெறும் நானூறு பேரு ஆட்டிவைக்கிறாங்க... அது புரியாம சாதி மதம்னு ஆர்ப்பரிக்கிறாங்க... அவங்ககிட்ட இருந்து எந்த மாற்றமும் வராது தம்பி... மொதல்ல நம்ம திருந்தனும்... அதுக்கு மனுஷன், மனுசன  மனுசனா மதிக்கணும்" என்று கூறிவிட்டு சென்றார் பெரியவர்...

நன்றி,
ஊமை இளைஞன்

No comments:

Post a Comment