Wednesday, 24 July 2019

இடஒதுக்கீட்டில் இறங்கிய சந்திராயன் 2


இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-2 திங்கட்கிழமை (ஜூலை-22) பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய மக்கள் அனைவருமே இந்த மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், சமூக வலைத்தளங்களில் சிலர் "இஸ்ரோவில் இடஒதுக்கீடு இல்லை அதனால்தான் இஸ்ரோவால் இத்தகைய சாதனையை செய்யமுடிந்தது" எனவும் "திறமையின் அடிப்படையில் பணிகொடுத்ததால்தான் இஸ்ரோ உலக அரங்கில் முதலிடத்தை பிடித்தது. இடஒதுக்கீடு உள்ளே போயிருந்தால் அரசு அலுவலகங்கள் போல நாசமா போயிருக்கும்" எனவும் பதிவு செய்திருந்தனர். இந்த கருத்துகளை பலர் வரவேற்றும் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளால் மோதிக்கொண்டிருக்கின்றனர். உண்மையில் இஸ்ரோவில் இடஒதுக்கீடு இல்லையா என ஆராய்ந்தபோது பின்வரும் தகவல்கள் கிடைக்கின்றன.

இஸ்ரோ தேர்வுமுறை:

இஸ்ரோ அமைப்பானது இந்திய அளவில் தேர்வுகளை நடத்தி அதன்மூலம் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் நபர்களை தேர்ந்தெடுத்து அடுத்தகட்டத்திற்கு தேர்வுசெய்கின்றனர். இங்கு, SC/ST/OBC தரப்பு மக்களுக்கு மதிப்பெண்களில் தளர்வு அளிக்கப்படுகிறது. மேலும்,  வயது வரம்பமானது (அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை) தளர்த்தப்படுகிறது. நிர்வாக அதிகாரி (administrative jobs) மற்றும் உதவியாளர் (Assistant) பணியிடங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது. குறிப்பாக, சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல் பொறியியலாளர் பணியிடங்களில் இடஒதுக்கீடு உள்ளது. இருப்பினும், இஸ்ரோ அமைப்பானது வருடத்திற்கு 10 முதல் 15 நபர்களையே தேர்வு செய்கின்றது. ஆனால், கணிப்பொறி, மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியலாளர் பணியிடங்களில் இடஒதுக்கீடு இல்லை. ஏனென்றால், இவர்கள் அனைவரும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research & Development) பிரிவில் பணிபுரிபவர்கள். இங்கு, பணியாளரின் உற்றுநோக்கும் திறன் மற்றும் அறிவுப்பூர்வமான ஆற்றல் முக்கியமானது. இதில் இடஒதுக்கீட்டுக்கு வேலையில்லை. இதைப் பற்றிய முழு விவரம் 'www.quora.com' என்னும் இணையதளத்தில் விரிவாக தரப்பட்டுள்ளது.

https://www.quora.com/Some-people-say-ISRO-is-successful-because-it-has-no-reservations-for-Scientist-posts-how-far-is-it-true

இட ஒதுக்கீடு:

"திறமையின் அடிப்படையில் பணி கொடுக்கவேண்டும்" என்று போராடுங்கள் தவறில்லை. ஆனால் இடஒதுக்கீட்டில் வந்தவர்களுக்கு திறமையே இல்லையென்று பொய்யுரை பரப்பாதீர்கள். இன்றைய கால இளைஞர்கள் "இட ஒதுக்கீட்டின் மூலம், தங்களுக்கு கிடைக்கவேண்டிய கல்வி மற்றும் வேலைவாய்ப்பை தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகள் பெற்றுக்கொள்கிறார்கள்" என எண்ணுகிறார்கள். உண்மையில் இட ஒதுக்கீடு [http://pamarankaruthu.com/is-reservation-still-need-in-india-answer-in-tamil/] என்பது "பல்லாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு, கல்வி மற்றும் வேலைகள் மறுக்கப்பட்டு, சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்களாக பார்க்கப்பட்ட மக்களுக்கு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசாங்கத்தால் தரப்படும் நஷ்ட ஈடு" ஆகும். இட ஒதுக்கீடு அவர்களுக்கு நாம் அளிக்கும் பிச்சையில்லை அவர்களது உரிமை. இட ஒதுக்கீட்டை அவர்களுக்கு சாதாரணமாக யாரும் வழங்கவில்லை. அதற்காக பல்வேறு தலைவர்கள் பல இன்னல்களை அடைந்து பின் உயிர்நீத்துள்ளார்கள்.

அரசு அலுவலகங்கள் நாசமாப் போக அரசு அதிகாரிகள் மட்டும்தான் காரணமா?

சிலர் "திறமையின் அடிப்படையில் பணிகொடுத்ததால்தான் இஸ்ரோ உலக அரங்கில் முதலிடத்தை பிடித்தது. இடஒதுக்கீடு உள்ளே போயிருந்தால் அரசு அலுவலகங்கள் போல நாசமா போயிருக்கும்" எனப் பதிவிடுகிறார்கள். அவர்களிடம் இரண்டு கேள்விகள் கேட்க தோன்றுகிறது.

1) அரசு அலுவலகங்கள் நாசமாப் போக அரசு அதிகாரிகள் மட்டும்தான் காரணமா?
2) அரசு அலுவலகங்களில் இடஒதுக்கீட்டில் வந்தவர்கள் மட்டுமே இலஞ்சம் வாங்குகிறார்களா?

இந்த இரண்டு கேள்விகளையும் ஒவ்வொருவரும் மனதில் நினைத்து அதற்கான விடையை ஆராய்ந்தால் அவ்வாறு பதிவிடமாட்டார்கள். இடஒதுக்கீட்டை எதிர்ப்பதுகூட ஒருவகை சாதிய மனப்பான்மைதான். அந்த சாதியைச் சார்ந்தவன் மட்டும் இந்தச் சலுகையை அனுபவிக்கிறானே என்ற எண்ணம். பொங்கல் பரிசாக ஏழை எளியவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அரசு அறிவித்ததும் இங்கு எத்தனைபேர் இது நமக்கல்ல என்று எண்ணினார்கள்? இலஞ்சம் வாங்குகிறவர்கள் குற்றவாளிகள் என்றால் உரிய ஆவணங்களின்றி தம் வேலைமுடிந்தால் சரி, தன் வீட்டில் உள்ளவர்களுக்கு இது கிடைத்துவிட்டால் போதுமென இலஞ்சம் கொடுத்து நம் வேலையை முடிக்கும் நம்மை என்னவென்று அழைப்பது?

நன்றி,
ஊமை இளைஞன்

No comments:

Post a Comment