Monday 22 July 2019

திராவிடத்தின் ஆணி வேர் - பண்டிதர் க. அயோத்தியதாசர்


"இந்தியதேசம் முன்னேற வேண்டுமாயின் இந்தியநாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலைபெறவேண்டும்" என எண்ணி, நாட்டின் விடுதலை வேட்கையை மக்களிடம் பரப்ப சுப்ரமணிய அய்யரும் பாரதியாரும் "சுதேசமித்திரன்" மற்றும் "சுயராஜ்யம்" முதலிய பத்திரிக்கைகளை தொடங்கினர். ஆனால், இந்தியாவிலேயே இந்தியர் ஒருவரால் தொடங்கப்பட்ட நாளிதழொன்று " முதலில், இந்தியாவில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர்குடி மக்களிடமிருந்து விடுதலை கிடைக்கட்டும். பின்னர், இந்திய நாடு  விடுதலை நோக்கி பயணிக்கட்டும்" என்ற முழக்கம் அந்நாளில் காலணாவுக்கு வெளியான "ஒரு பைசா தமிழன்" என்னும் இதழில் வந்தது. அந்த இதழின் ஆசிரியர் இன்றைய திராவிட இயக்கங்களின் கொள்கைகளுக்கு முதன்முதலில் வித்திட்ட திரு. காத்தவராயன் என்னும் அயோத்தியதாசர்.

காத்தவராயன் - கல்வி - அயோத்தியதாசர்:

1945 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி அன்றைய மதராஸ் மாகாணத்திலுள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்த  அயோத்தியதாசருக்கு அவரின் பெற்றோர் சூட்டிய பெயர் காத்தவராயன். காத்தவராயனின் குடும்பம் சித்த மருத்துவம் மற்றும் தமிழ் இலக்கியங்களில் புலமைப்பெற்று விளங்கியது. கத்தவராயனின் தாத்தா திரு. பட்லர் கந்தப்பன் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் இருந்த திருக்குறளைத் ஆங்கிலேயே அரசு அதிகாரியான எல்லிஸ் துரையிடம் வழங்கி அதனை அச்சுவடிவிற்கு மாற்றக்கோரினார். அதன்பின்னர்தான், திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது. சில வருடங்களுக்குப் பிறகு காத்தவராயனின் தந்தையின் பணியிட மாறுதலால் தன் தாத்தா கந்தப்பன் சமையல்காரராக பணிபுரியும் நீலகிரிக்குச் சென்றனர். அங்கு வல்லக்காளத்தி திரு. வீ. அயோத்தி தாசர் பண்டிதர் அவர்களிடம் கல்வி கற்ற காத்தவராயன் அவர்கள் சித்த மருத்துவம் மற்றும் தத்துவத்தில் புலமைபெற்று விளங்கினார். அத்துடன், தமிழ், பாலி வடமொழி மற்றும் ஆங்கில மொழிகளில் புலமைபெற்று விளங்கினார். பின்னர், தன் குருமீது கொண்ட அதீத மரியாதையினால் காத்தவராயன் என்னும் தன்பெயரை அயோத்தி தாசர் என மாற்றிக்கொண்டார்.

அயோத்தியதாசரும் ஒடுக்கப்பட்ட மக்களும்:

1961 முதல் 1991 வரை பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் கிருத்துவர்கள் மற்றும் முஷ்லிம்கள் அல்லாதோர்கள் அனைவரையும் "இந்து" என அடையாளப்படுத்தி அதனுள் திணிக்கப்பட்டனர். அயோத்தியதாசர் வைணவ மரபை ஆதரித்தாலும் "இந்து" என்ற கோட்பாட்டை ஏற்க மறுத்தவர். ஏனென்றால், தன்னை "இந்து" என அடையாளப்படுத்திக்கொண்டால் சாதிய அமைப்புகளுக்குள் தன்னை இணைத்துவிடுவார்கள் என்பதால்  "இந்து" என்ற கோட்பாட்டை ஏற்க மறுத்தார். மேலும், ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்களைக் களைந்து அவர்களனைவரையும் ஓரணியில் திரட்ட முற்பட்டார். அத்துடன் அவர்களை "சாதியற்ற ஆதிதிராவிடர்கள்" என பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார்.  தன் இளமைக்காலத்தில் ஆதிசங்கரரின்மேல்  ஈடுபாடு கொண்டிருந்த அயோத்தியதாசர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த சமயக் கோட்பாடுகளை வடிவமைத்து அவர்களை நெறிப்படுத்துவதற்காக 'அத்வைதானந்த சபை'யை தோற்றுவித்தார்.

"சாதியற்ற திராவிட மஹா ஜன சபை" என்னும் அமைப்பின்மூலம் தாழ்த்தப்பட்ட நிலமில்லா மக்களுக்கு தரிசாக கிடக்கும் நிலங்களை வழங்கவேண்டும், இலவசக்கல்வி மற்றும் அனைத்து சாதியினரும் கோவிலுக்குள் நுழையவேண்டும் முதலிய கோரிக்கைகளை அன்றைய ஒரே கட்சியான இந்திய தேசிய காங்கிரசுக்கு அனுப்பினார். ஆனால், அன்றைய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. அத்துடன் நிறுத்தாமல், மதராஸ் மகாசன சபை 1892 இல் ஏற்பாடு செய்த கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தின் பிரதிநிதியாய் பங்கேற்று மேற்கண்ட அறிக்கையை பிரிட்டிஷ் அரசுக்கு கோரிக்கையாகக் கொடுத்தார். ஆனால், அங்கு அதிகம் கூடியிருந்த உயர்குடிமக்களால் அவமானப்படுத்தப்பட்டு கோரிக்கையானது நிராகரிக்கப்பட்டது.

பௌத்தமும் அயோத்தியதாசரும்:

தான் சார்ந்த சமூக மக்களை தீண்டாதத் தகாதவர்களாக என்னும் இந்து மதத்தையும் வருணாசிரம கொள்கைகளையும் முற்றிலும் வெறுத்தார். அச்சமயம், ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களின் அறியாமையை அறிந்துகொண்ட கிருத்துவ பாதிரியார்கள் அவர்களின் ஏழ்மை மற்றும் அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை கிருத்துவ மதத்திற்கு மதமாற்றும் வேளையில் இறங்கினர். இதையறிந்த அயோத்தியதாசர், "ஆதிதிராவிட மக்கள் பௌத்த மதத்தினரே" என்றும் "அவர்களை பிழைக்க வந்த ஆரியர்கள் வருணாசிரம முறையை வகுத்து ஒதுக்கிவைத்துவிட்டார்கள்" என்றும் கருத்து தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், ஆதிதிராவிட மக்கள் முன்னேற அனைவரும் பௌத்த மதத்திற்கு மாறவேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.1898 ஆம் ஆண்டில் ஹென்றி ஆல்காட் மற்றும் அனகாரிகா தர்ம்பாலா ஆகியோரைச் சந்தித்து தானும் தான் சார்ந்த மக்களும் பௌத்த மதத்தை தழுவவிருப்பதாகக்கூறினார். பின்னர், ஹென்றி ஆல்காட் அவர்களின் வழிகாட்டுதலினால் இலங்கையிலுள்ள சிங்கள பௌத்தத் துறவி சுமங்கல நாயகரைச் சந்தித்து பௌத்த மதத்திற்கு மாறினார். மதராஸ் திரும்பிய அயோத்தியதாசர் "தென்னிந்திய சாக்கிய பௌத்த சபை"யை துவங்கினார். அதில், பல்லாயிரக்கணக்கான ஆதிதிராவிட மக்கள் பௌத்த மதத்திற்கு மாறினர்.

ஒரு பைசா தமிழன்:

ஆதிதிராவிட மக்கள் பௌத்த மதத்திற்கு மாறினாலும் அவர்களை தாழ்த்தப்பட்ட மக்களாகவே உயர்சாதி மக்கள் பார்க்கத்தொடங்கினர். தங்களது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மக்களிடையே கொண்டு செல்ல 1907- ஆம் ஆண்டு 'ஒரு பைசா தமிழன்' என்னும் நாளிதழ் தொடங்கப்பட்ட்டது. அதன்மூலம் புத்தரின் அறநெறிகளை போதனைகளும் பரப்பப்பட்டது. அயோத்தியதாசரின், பௌத்தமும் தமிழ் நடையும் மக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்தியப் பாரம்பரியம் பௌத்த மதமாக இருந்தது என்பதைத் தன் தமிழ்ப்புலமை மூலம் இவ்வாறு விளக்கினார்:

"இந்திய என்ற சொல் 'இந்திரம்' என்பதன் திரிபு. இந்திரனாகிய புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு 'இந்திரதேசம்' என்ற பெயர் வந்தது. ஆரியர் வருகைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது, அந்த தேசியத்தைப் பௌத்தம் உருவாக்கியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம், சமத்துவம், அறக்கருத்தொற்றுமை, மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அன்னியரான வெளியாரின் ஊடுருவலால், படையெடுப்பால் காலப்போக்கில் அது மந்திர அல்லது மாயத்தன்மையென திரிக்கப்பட்டது." .

மேலும், பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், மூட நம்பிக்கை, தீண்டாமை கொடுமை, சாதிய ஒழிப்பு பற்றி விரிவாக எழுதினார். அத்துடன், சமூக நீதி, சமூக மதிப்பிடுகள் விளிம்பு நிலை ஒடுக்குமுறைகள் குறித்து பேசினார். ஒருவருடத்திற்குப் பிறகு வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க "ஒரு பைசா தமிழன்" பெயரிலிருந்து "தமிழன்" எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

1912-ஆம் ஆண்டு அக்டோபர் 30, தமிழன் இதழில், "இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தால் இம்மண்ணிண் மைந்தர்களாம் ஆதித் தமிழர்களிடம் அரசியல் அதிகாரத்தை வழங்கவேண்டும். கருணை தாங்கிய பிரிட்டீஷ் துரை அவர்கள், சுதேசிகள் மீது கிருபை பாவித்து சுயராட்சியத்தை அளிப்பதாயினும் இத்தேச பூர்வக்குடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்றுக் குடியேறி வந்தவர்களையும், முன்னாடி குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக் கருதி அவர்கள் வசம் சுயராட்சிய ஆளுகையைக் கொடுத்தால் நாடு பாழாகி சீர்கெட்டுப்போகும்" என்றார்.

திராவிடத்தின் ஆணி வேர்:

சுதந்திர இந்தியாவில் தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டவர்களில் முக்கியமானவர்கள் யாரென்று கேட்டால் அனைவரது பதிலும் ஒன்றாகத்தான் இருக்கும். ஒருவர் வட இந்தியாவின் அம்பேத்கர் மற்றொருவர் தென்னிந்தியாவின் பெரியார். ஆனால், இவர்கள் இருவரும் தவழ்ந்து கொண்டிருக்கும்போதே அவருக்கென்று தனி இயக்கமோ கட்சியோ இல்லாமல் தனியாளாக நின்றுகொண்டு "தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமை, இலவசக்கல்வி, சமூக நீதி மற்றும் அறம்" பேசி போராடிக்கொண்டிருந்தார் என்றால் "திராவிடத்தின் ஆணி வேர் அயோத்தியதாசர்" எனக்கூறலாம். அதுமட்டுமல்லாமல், பெரியாரே "தனது கொள்கைகளுக்கு முன்னோடி திரு. அயோத்தியதாசர்" எனக்கூறியிருக்கிறார் என்றால் இவர் பெரியருக்கே பெரியாரல்லவா!

தீண்டாமை தலைவிரித்தாடிய காலத்தில், பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கொள்கைகள் கொண்ட தேசத்தில் "மனிதம் ஒன்றே. இதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எவருமிலர்" என்ற கொள்கையினை நிலைநாட்ட முதன்முதலில் "சாதி எதிர்ப்பு" போராட்டத்தை துவக்கிய அயோத்தியதாசர் போற்றப்படுபவரே. "சிறு தீப்பொறியும் பெரும் காட்டை அழித்துவிடும் ஆற்றல் கொண்டது". அதுபோல், இன்றைய திராவிட இயக்கங்களின் பெரும் வளர்ச்சிக்கு தீயிட்டவர் திரு. அயோத்தியதாசர்.

நன்றி,
ஊமை இளைஞன் 

1 comment: