சமீபத்தில் பணிநிறைவு விழாவொன்றிற்குச் சென்றிருந்தேன். விழாவில் மொத்தம் 4 பேர் பணிநிறைவு பெறவிருந்தனர். மாலை 5 மணியளவில் விழா ஆரம்பித்தது. விழாவில் பணிநிறைவு பெறுபவர்களின் மனைவிகள், மகன்கள், மகள்கள், உறவினர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். அலுவலகத்தின் தலைமைச் செயலாளர் முன்னுரையாற்றினார். பின்னர் ஒவ்வொரு துறையின் சார்பாகவும், பணிநிறைவு பெறுபவர் தங்களுக்கு செய்த உதவி பற்றியும், நன்னடத்தைகளை புகழ்ந்தும் வாழ்த்தியும் உரையாற்றினார். பணிநிறைவு பெரும் நான்கு பேருக்கும் நான்கு விதமான அனுபவங்கள். அவற்றில் மனம் கவர்ந்தது, முதலமானவரின் பணிநிறைவைக் காண அவரது தந்தையே தனது ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வந்திருந்தார். அவருக்கு வயது 90 முடிந்துவிட்டது. இன்றும் அவர் தன் உழைப்பினால் ஆட்டோ ஓட்டிக்கொண்டு தத்தம் செலவுகளை தானே சம்பாதித்துக்கொள்கிறாராம். அவரின் தன்னம்பிக்கை மற்றும் உழைப்பினைக் கண்டு சற்றுநேரம் வியந்தேவிட்டேன்.
இரண்டாவதாக பணிநிறைவு பெற்ற நபர் மாற்று மதத்தை சார்ந்தவர். இவர் அனைவரையும் மாமா மச்சான் என்றுதான் அழைப்பாராம். அவரையும் மாமா மச்சான் என அழைப்பதையே விரும்புவாராம். மதம் மற்றும் சாதிய பாகுபாடுகளை முற்றிலும் துறந்தவர் எனக்கூறினார்கள் அவரது அலுவலக நண்பர்கள். நாமும் மதங்களை மறந்து சாதியம் துறந்து மனிதராக மக்களோடு மக்களாக வாழ முயற்சிப்போம்.
மூன்றாவதாக, சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பேருந்தில் தொலைத்த நகையை தங்களுக்கு திருப்பிக்கொடுத்ததற்காக, அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, நகையை தொலைத்தவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு உதவிய நபரின் பணிநிறைவு விழாவில் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்கள். உடனிருப்பவர்கள், உறவினர்களே தங்களுக்கு உதவிய உறவுகளை மறந்திடும் இக்காலத்தில் 15 வருடங்களுக்கு முன்பு உதவிய ஒருவரை நியாபகம் வைத்து அவரது பணிநிறைவு விழாவில் கலந்துகொண்டு அவருக்கு பரிசுகளையும் வழங்குவதென்பது எவ்வளவு பெரிய விஷயம். நன்றி மறவா பண்புக்கு இவர்கள் ஒரு எடுத்துக்காட்டு. இப்படிப்பட்டவர்கள் வாழும் இவ்வுலகில், நாம் எவ்வாறு இருக்கிறோமென்று எண்ணிப்பார்த்து நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்.
நான்காவது நபரின் மனைவி விழாவில் உரையாற்றினார். அவர் தன் கணவனைப் பற்றி, "பணிமுடிந்து எவ்வளவு நேரம்கழித்து வீட்டிற்கு வந்தாலும், காலையில் சீக்கிரம் எழுந்து தனது வேலைகளை பார்க்க ஆரம்பித்து விடுவார். அவர்(கணவர்) என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார். அன்பாக பழகுவார்" எனக்கூறுகையில், அவர் கணவர் எழுந்து," என்னைப் பற்றி என் மனைவி உயர்வாக கூறுகிறாள். இது முற்றிலும் உண்மையில்லை. உண்மையில் நான் எப்பொழுதும் டென்ஷனாகதான் இருப்பேன். மனைவி அருகில் பேசவந்தாலும் எரிந்து விழுவேன். அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" என உண்மையைக் கூறினார். மனிதரில் பல குணங்கள் உண்டு. அகமொன்று வைத்தும் புறமொன்று வைத்தும் பேசும் பலர். மற்றவர்களிடம் எவ்வளவுதான் லயமாக பேசினாலும், பழகினாலும் வீட்டில் சரியாக பேசாத சிரிக்காத மனிதர்கள் பலர் உண்டு. யாரோ செய்த செயலுக்கு தன்னை பாராட்டினாலும், அதை மறுக்காமல் ஏற்கும் நெஞ்சங்கள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட சமூகத்தில் வாழும் ஒருவர் "தான் இப்படித்தான். அந்த புகழுக்கு நான் சொந்தக்காரனில்லை" என உண்மையைக்கூறி கைத்தட்டல் வாங்கிய மனிதரை பார்த்து மனம் வாடியது.
நன்றி,
ஊமை இளைஞன்
No comments:
Post a Comment