Sunday, 28 July 2019

அவளுக்குள் ஆயிரம் வருத்தங்கள்....



வெள்ளைநிற குளத்திற்குள்
கரியநிற வைரமொன்று
கருநிறக் காவலாளிகளால்
பூட்டு இல்லாக் கதவுகொண்டு மூடப்படுகிறது...!!

காலத்தின் கோலத்தில்
சிதைந்த சிறுநெஞ்சின்
சிந்தனைத்  துளியில்,
கதவும் மூடியிருக்க
காவலர்களும் காவலிருக்க
கரைபுரண்டோடுதம்மா கங்கை வெள்ளம்
கன்னியவளின் கன்னத்தில் ..!

நன்றி,
ஊமை இளைஞன்  

Friday, 26 July 2019

ஊருக்கு உபதேசம் - 100 நாள் வேலைத்திட்டம்


கடந்த வாரம் சென்னையிலிருந்து எனது சேலத்தில் உள்ள கிராமத்திற்கு சென்றிருந்தேன். வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் வீட்டை அடைந்தேன். அம்மா வழக்கம்போல் விழித்திருந்தார்கள். "வா கண்ணு, எப்படி இருக்க? ஏன் இப்படி இளைச்சிபோயிருக்க" என்று வழக்கமாக கேட்டார்கள். இதழில் சிறு புன்னகையுடன் "ம். நல்லா இருக்கேன்." என்று கூறிவிட்டு என்னுடைய பையை இறக்கி வைத்தேன். அருகில் வாசல் கூட்டிக்கொண்டிருந்த பாட்டியோ "ஊரிலிருந்து இப்போதான் வரியா? மெட்ராஸ் எல்லாம் எப்படி இருக்கு?" என கேட்க "நல்லாயிருக்கு" என கூறிவிட்டு, முந்தையநாள் இரவு முழுவதும் பிரயாணம் என்பதால் சரியாக தூங்கவில்லை. அருகில் உள்ள கட்டிலில் அப்படியே படுத்துவிட்டேன்.

உறங்கிய சற்று நேரத்தில் "ஏய் சீக்கிரம் வாடி, மேனேஜர் வந்துடுவான். 9 மணிக்கெல்லாம் போகலேனா ஓவரா பேசுவான்" என்ற குரல் கேட்டது. அதற்கு மறுமுனையில் "இருக்கா, வந்துடறேன். இந்தப்பையன் வேற ஸ்கூலுக்கு போகமாட்டேனு அடம்புடிக்கிறான். போய்த்தொலைடா, நீயாவது ஒழுங்கா படிச்சி நல்ல வேலைக்கு போ. இல்லேனா, உங்கொப்பன் மாதிரி நீயும் கஷ்டபடுவ." என்ற புலம்பல் கேட்டது. அவர்களுடன் இன்னும் சில பெண்களும் அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தனர். எங்கே இவர்கள் செல்கிறார்கள்? என்று அம்மாவிடம் கேட்டேன். "அவங்க எல்லாரும் 100 நாள் வேலைக்கு போறாங்க. எப்பவும் 10 மணிக்கு மேலதான் போவாங்க. இன்னைக்கு யாரோ மேனேஜர் வராங்களாம். அதனால சீக்கிரமா போறாங்க. மேனேஜர் போனதும் கொஞ்ச நேரம் வேளை செஞ்சிட்டு, ஒரு 2 மணிநேரம் அங்கேயே இருந்துட்டு வந்துடுவாங்க." என்று கூறி முடித்துவிட்டு கட்டுத்தாரை க்கு சென்றாள்.

சிறிது நேரம் கழித்து நண்பனொருவன் வீட்டிற்கு வந்தான். "வா மாப்ள. எப்படி இருக்க?" என்று கேட்க, அவனோ " ஏதோ இருக்கன் மாப்ள." என்றான் விரக்தியுடன். "ஏன்டா! அப்படி என்ன ஆச்சு? சொந்த ஊர்ல சொந்தவீட்ல இருக்க. மாசம் பத்தாயிரம் கிட்ட சம்பளம் வேற வருது. உனக்கு என்ன கொறச்சலு" என்று கேட்டதற்கு, "அட ஏன்  மாப்ள, நீ வேற கிண்டல் பண்ற. பையனுக்கு ஸ்கூல் பீசு, கரண்டு பில், மளிகை சாமான் அப்புறம் மாசாமாசம் ஆஸ்பித்திரி செலவுனு, மாசம் பதினையாயிரம் ஆயிடுது. அதனாலதான், அவள (நண்பன் மனைவி) 100 நாள் வேலைக்கு அனுப்பலாம்னு விஏஓ-வ பாக்க போறேன். மொதல்ல ஒரு நாளைக்கு ரூ.133 கொடுத்துட்டு இருந்தாங்க. இப்போ ரூ.224 கொடுக்கறாங்க.

1 மாசமா இந்த அப்ளிகேஷனை வச்சிட்டு அலையிறன், கையெழுத்தே வாங்க முடியல. இப்போ அது விஷயமாதான் போயிட்டு இருக்கேன். நீயும் வரியா" என்றான். நானும் "சரி. வா போலாம்" என்று கூறிவிட்டு இருவரும் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றோம். செல்லும் வழியில் 100 நாள் வேலைவாய்ப்பு பற்றி இணையத்தில் சிறிது தேடிப்பார்த்தேன். அவற்றில் சில:
" தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் (அ) 100 நாள் வேலை திட்டம் என்பது பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு (18 வயது நிரம்பியவர்கள்), அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

> கிராமத்தை  சேர்ந்த விவசாயிகள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் வகையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
> 18 வயது நிரம்பிய திறன் சாரா உடல் உழைப்பு செய்ய விரும்பும் கிராமப்புற நபர்கள், தங்கள் பெயர், வயது மற்றும் முகவரியை தங்கள் புகைப்படத்துடன் வந்து கிராம பஞ்சாயத்திடம் விண்ணப்பிக்கலாம்.
> தகுதி வாய்ந்தோருக்கு அரசாங்கத்தால் பணி அட்டை வழங்கப்படும். பணி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள நபரின் விவரங்கள் மற்றும் முகவரியைக்கொண்டு, 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு உட்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
> இத்திட்டம், தகுதி வாய்ந்தோருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை வழங்கப்படும் என  உறுதி அளிக்கிறது.
> இத்திட்டத்தின் மூலம் ஊரக ஏழை மக்களின் வேலைக்கான உரிமை நிலை நாட்டப்படும் மற்றும் ஊரக பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.
> கிராமப்புற சமூகப் பொருளாதார உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
> நிழல் தரும் மரங்கள், பயன் தரும் மரங்கள் ஆகியவை நட்டு இயற்கை வளம் மேம்படுத்தப்படும்."

பரவாயில்லையே, இவ்வளவு சிறப்புகள் இத்திட்டத்தில் உள்ளனவா என்றெண்ணிக்கொண்டிருந்தேன். சிறிது தூரத்தில் இருசக்கர மோட்டார் சைக்கிள் வரும் சத்தம் கேட்டது. விஏஓ வண்டியிலிருந்து இறங்கினார். சற்றே மிடுக்குடன் பஞ்சாயத்து அலுவகத்தில் நுழைந்தார். மேசையில் வைக்கப்பட்டுள்ள சில கோப்புகளை பார்த்துவிட்டு "2 நாள் கழித்து வந்து பாருங்கள்" என்று கூறிவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்றார். அருகிலுள்ள ஒரு தேனீர் கடைக்கு சென்று, "2 காபி, ஒன்னுல சக்கரை அதிகமா கொடுங்க" என்று சொல்லிவிட்டு அமர்ந்திருந்தோம். மனம் மட்டும் 100 நாள் வேலைத்திட்டம் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தது. காபியை குடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்லலாமென முடிவு செய்தோம்.

போகும் வழியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களில் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சிலர் பாதையோரம் காய்ந்து கிடைக்கும் செடி மற்றும் முட்களை களைந்து கொண்டிருந்தனர். இன்னும் சிலரோ தோள்மீது மண்வெட்டிகளை குழந்தைகளைப்போல் சுமந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தனர். "என்ன மாப்ள, 100 நாள் வேலைனு சொன்ன! ஆனா ஒருத்தரும் வேலை செய்றமாதிரி தெரில. எல்லாரும் அங்கொன்னும் இங்கொன்னுமா நின்னுட்டு இருக்காங்க?" என்று கேட்டதற்கு, "ஆமா மாப்ள. காலைல 9, 10 மணிக்கு போகணும். 2 மணிநேரம் வேலை. உடல் உழைப்பு இல்ல. மதியம் வீட்டுக்கு வந்துடுவாங்க. பையன ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, வீட்டுவேலை முடிச்சிட்டு சும்மா இருக்கற நேரத்துல போயிட்டு வரட்டும்னுதான் அவளுக்கு இந்த அப்ளிகேஷன வாங்குனேன். ஆனா, இந்த விஏஓ'கிட்ட ஒரு கையெழுத்து வாங்குறதுக்குள்ள போதும்னு ஆயிடுது." என்று சொல்லி முடிக்கையில், தோளில் மண்வெட்டியை வைத்திருந்த பெண்ணொருவர், "ஏக்கா, அடுத்த மாசம் எலெக்சன் வருதாம். பக்கத்து ஊருலலாம் இப்பவே ஓட்டுக்கு 500, 1000 குடுக்கறாங்களாம். நம்ம ஊருல எவ்வளவு குடுப்பாங்கனு தெரில. போன எலெக்சனுக்கே, அப்புறமா தறேன்னு 100 ரூவாயும், உங்க அண்ணன்கிட்ட ஒரு பாட்டிலையும் கொடுத்து ஏமாத்திபுட்டாங்க." என்றாள். மறுமுனையில் மிகவும் ஏமாந்தவளாய் "ஆமாண்டி, எனக்கும் 100 ரூவாதான் குடுத்தானுங்க. நம்ம தலைவர் எல்லாம் நிறையதான் கொடுப்பாரு. ஆனால், இங்க இருக்கறவனுங்க தலைவர ஏமாத்துறாங்க. காச வாங்கி இவனுங்களே வச்சிக்கிறானுங்க போல" என்றாள், தாமும் மேனேஜரை ஏமாற்றுகிறோம் என்பதை மறந்து.

100 நாள் வேலை திட்டத்தில் இத்தனை சிறப்புகள் உள்ளனவா என்றெண்ணிக்கொண்டிருந்த எனக்கு இவர்களின் பேச்சும் செயலும் அவர்களது வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்றுதான் தோன்றியது.

நன்றி,
ஊமை இளைஞன்

Thursday, 25 July 2019

அலுவலகம் முடிந்தபின்....



அலுவலகம் முடிந்தபின்,

மடை திறந்த வெள்ளமாய்
மங்கையவளை காணச்சென்றேன் !

செல்லும் வேகத்தில் சில மேடு பள்ளங்கள் தடையாயின!

மனத்தின் தவிப்பில் மலைமேடுகளும் மறந்துபோயின..

சிந்தனைகள் சிறகடிக்க எண்ணத்தின்  ஓட்டத்தில் எழுதமுடியாக் கவிதைகள் கொட்டின...

எண்ணத்தின் ஓட்டத்தில் சென்ற எனக்கு வழியெங்கும் வண்ணங்கள்  வரவேற்றன!

அதில்,

சிவப்பு வண்ணமோ "சற்றுநேரம் என்னையும் கவனித்து செல்" என்றது!

வண்ணத்தின் எண்ணத்தை பூர்த்தி செய்தபின் பச்சை விளக்கொன்று

பார்த்து செல்லென பாதை காட்டியது!

மனஓட்டத்த்தில் சென்ற என்னை
மல்லியொன்று தடுத்தது!

மல்லியை அள்ளிக்கொண்டு மீண்டும்
மின்னல் வேகத்தில் பயணித்தேன்!

மின்னலுக்குப்பின் இடியிடிக்குமல்லவா?

வந்தது...

மணியோ பதினொன்று,
மனதிலோ பயமொன்று!

காணவந்த பைங்கிளி உறங்கியிருக்குமோ என்று!

எண்ணங்களனைத்தும் எரிந்துபோயின!
கனவுகளனைத்தும் கலைந்துபோயின!
நினைவுகளோ நீங்கிப்போயின!

அட என்னவொரு ஆச்சரியம்?

ஒரு பயம்,

ஓராயிரம் கனவுகளை கலைத்தது!
ஒருகோடி எண்ணங்களை தடுத்தது!

#அச்சம்_ தவிர் 


நன்றி,
ஊமை இளைஞன்

கோபம் வேண்டாம் கொள்ளைபோகிறேன்........



இளவேனிற் காலத்தில்
இதயத்தில் முளைத்தவளே!

உந்தன் கோபக்கனலில்,
உதிரமெல்லாம் உறைந்துபோகிறேன்!

உந்தன் வெள்ளி பார்வையில்
வெடவெடுத்துப் போகிறேன்!

உந்தன் சுட்டுவிழிப் பார்வையில்
எந்தன் தேகம்சுட்டு சாய்கிறேன்!

என்னவளே,

இரக்கம் கொள்,
இமைகளால் கொல்லாதே!

பற்றிக்கொள்,
பார்வையால் தள்ளாதே!

நன்றி,
ஊமை இளைஞன்

Wednesday, 24 July 2019

இடஒதுக்கீட்டில் இறங்கிய சந்திராயன் 2


இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-2 திங்கட்கிழமை (ஜூலை-22) பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய மக்கள் அனைவருமே இந்த மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், சமூக வலைத்தளங்களில் சிலர் "இஸ்ரோவில் இடஒதுக்கீடு இல்லை அதனால்தான் இஸ்ரோவால் இத்தகைய சாதனையை செய்யமுடிந்தது" எனவும் "திறமையின் அடிப்படையில் பணிகொடுத்ததால்தான் இஸ்ரோ உலக அரங்கில் முதலிடத்தை பிடித்தது. இடஒதுக்கீடு உள்ளே போயிருந்தால் அரசு அலுவலகங்கள் போல நாசமா போயிருக்கும்" எனவும் பதிவு செய்திருந்தனர். இந்த கருத்துகளை பலர் வரவேற்றும் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளால் மோதிக்கொண்டிருக்கின்றனர். உண்மையில் இஸ்ரோவில் இடஒதுக்கீடு இல்லையா என ஆராய்ந்தபோது பின்வரும் தகவல்கள் கிடைக்கின்றன.

இஸ்ரோ தேர்வுமுறை:

இஸ்ரோ அமைப்பானது இந்திய அளவில் தேர்வுகளை நடத்தி அதன்மூலம் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் நபர்களை தேர்ந்தெடுத்து அடுத்தகட்டத்திற்கு தேர்வுசெய்கின்றனர். இங்கு, SC/ST/OBC தரப்பு மக்களுக்கு மதிப்பெண்களில் தளர்வு அளிக்கப்படுகிறது. மேலும்,  வயது வரம்பமானது (அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை) தளர்த்தப்படுகிறது. நிர்வாக அதிகாரி (administrative jobs) மற்றும் உதவியாளர் (Assistant) பணியிடங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது. குறிப்பாக, சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல் பொறியியலாளர் பணியிடங்களில் இடஒதுக்கீடு உள்ளது. இருப்பினும், இஸ்ரோ அமைப்பானது வருடத்திற்கு 10 முதல் 15 நபர்களையே தேர்வு செய்கின்றது. ஆனால், கணிப்பொறி, மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியலாளர் பணியிடங்களில் இடஒதுக்கீடு இல்லை. ஏனென்றால், இவர்கள் அனைவரும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research & Development) பிரிவில் பணிபுரிபவர்கள். இங்கு, பணியாளரின் உற்றுநோக்கும் திறன் மற்றும் அறிவுப்பூர்வமான ஆற்றல் முக்கியமானது. இதில் இடஒதுக்கீட்டுக்கு வேலையில்லை. இதைப் பற்றிய முழு விவரம் 'www.quora.com' என்னும் இணையதளத்தில் விரிவாக தரப்பட்டுள்ளது.

https://www.quora.com/Some-people-say-ISRO-is-successful-because-it-has-no-reservations-for-Scientist-posts-how-far-is-it-true

இட ஒதுக்கீடு:

"திறமையின் அடிப்படையில் பணி கொடுக்கவேண்டும்" என்று போராடுங்கள் தவறில்லை. ஆனால் இடஒதுக்கீட்டில் வந்தவர்களுக்கு திறமையே இல்லையென்று பொய்யுரை பரப்பாதீர்கள். இன்றைய கால இளைஞர்கள் "இட ஒதுக்கீட்டின் மூலம், தங்களுக்கு கிடைக்கவேண்டிய கல்வி மற்றும் வேலைவாய்ப்பை தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகள் பெற்றுக்கொள்கிறார்கள்" என எண்ணுகிறார்கள். உண்மையில் இட ஒதுக்கீடு [http://pamarankaruthu.com/is-reservation-still-need-in-india-answer-in-tamil/] என்பது "பல்லாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு, கல்வி மற்றும் வேலைகள் மறுக்கப்பட்டு, சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்களாக பார்க்கப்பட்ட மக்களுக்கு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசாங்கத்தால் தரப்படும் நஷ்ட ஈடு" ஆகும். இட ஒதுக்கீடு அவர்களுக்கு நாம் அளிக்கும் பிச்சையில்லை அவர்களது உரிமை. இட ஒதுக்கீட்டை அவர்களுக்கு சாதாரணமாக யாரும் வழங்கவில்லை. அதற்காக பல்வேறு தலைவர்கள் பல இன்னல்களை அடைந்து பின் உயிர்நீத்துள்ளார்கள்.

அரசு அலுவலகங்கள் நாசமாப் போக அரசு அதிகாரிகள் மட்டும்தான் காரணமா?

சிலர் "திறமையின் அடிப்படையில் பணிகொடுத்ததால்தான் இஸ்ரோ உலக அரங்கில் முதலிடத்தை பிடித்தது. இடஒதுக்கீடு உள்ளே போயிருந்தால் அரசு அலுவலகங்கள் போல நாசமா போயிருக்கும்" எனப் பதிவிடுகிறார்கள். அவர்களிடம் இரண்டு கேள்விகள் கேட்க தோன்றுகிறது.

1) அரசு அலுவலகங்கள் நாசமாப் போக அரசு அதிகாரிகள் மட்டும்தான் காரணமா?
2) அரசு அலுவலகங்களில் இடஒதுக்கீட்டில் வந்தவர்கள் மட்டுமே இலஞ்சம் வாங்குகிறார்களா?

இந்த இரண்டு கேள்விகளையும் ஒவ்வொருவரும் மனதில் நினைத்து அதற்கான விடையை ஆராய்ந்தால் அவ்வாறு பதிவிடமாட்டார்கள். இடஒதுக்கீட்டை எதிர்ப்பதுகூட ஒருவகை சாதிய மனப்பான்மைதான். அந்த சாதியைச் சார்ந்தவன் மட்டும் இந்தச் சலுகையை அனுபவிக்கிறானே என்ற எண்ணம். பொங்கல் பரிசாக ஏழை எளியவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அரசு அறிவித்ததும் இங்கு எத்தனைபேர் இது நமக்கல்ல என்று எண்ணினார்கள்? இலஞ்சம் வாங்குகிறவர்கள் குற்றவாளிகள் என்றால் உரிய ஆவணங்களின்றி தம் வேலைமுடிந்தால் சரி, தன் வீட்டில் உள்ளவர்களுக்கு இது கிடைத்துவிட்டால் போதுமென இலஞ்சம் கொடுத்து நம் வேலையை முடிக்கும் நம்மை என்னவென்று அழைப்பது?

நன்றி,
ஊமை இளைஞன்

Monday, 22 July 2019

திராவிடத்தின் ஆணி வேர் - பண்டிதர் க. அயோத்தியதாசர்


"இந்தியதேசம் முன்னேற வேண்டுமாயின் இந்தியநாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலைபெறவேண்டும்" என எண்ணி, நாட்டின் விடுதலை வேட்கையை மக்களிடம் பரப்ப சுப்ரமணிய அய்யரும் பாரதியாரும் "சுதேசமித்திரன்" மற்றும் "சுயராஜ்யம்" முதலிய பத்திரிக்கைகளை தொடங்கினர். ஆனால், இந்தியாவிலேயே இந்தியர் ஒருவரால் தொடங்கப்பட்ட நாளிதழொன்று " முதலில், இந்தியாவில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர்குடி மக்களிடமிருந்து விடுதலை கிடைக்கட்டும். பின்னர், இந்திய நாடு  விடுதலை நோக்கி பயணிக்கட்டும்" என்ற முழக்கம் அந்நாளில் காலணாவுக்கு வெளியான "ஒரு பைசா தமிழன்" என்னும் இதழில் வந்தது. அந்த இதழின் ஆசிரியர் இன்றைய திராவிட இயக்கங்களின் கொள்கைகளுக்கு முதன்முதலில் வித்திட்ட திரு. காத்தவராயன் என்னும் அயோத்தியதாசர்.

காத்தவராயன் - கல்வி - அயோத்தியதாசர்:

1945 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி அன்றைய மதராஸ் மாகாணத்திலுள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்த  அயோத்தியதாசருக்கு அவரின் பெற்றோர் சூட்டிய பெயர் காத்தவராயன். காத்தவராயனின் குடும்பம் சித்த மருத்துவம் மற்றும் தமிழ் இலக்கியங்களில் புலமைப்பெற்று விளங்கியது. கத்தவராயனின் தாத்தா திரு. பட்லர் கந்தப்பன் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் இருந்த திருக்குறளைத் ஆங்கிலேயே அரசு அதிகாரியான எல்லிஸ் துரையிடம் வழங்கி அதனை அச்சுவடிவிற்கு மாற்றக்கோரினார். அதன்பின்னர்தான், திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது. சில வருடங்களுக்குப் பிறகு காத்தவராயனின் தந்தையின் பணியிட மாறுதலால் தன் தாத்தா கந்தப்பன் சமையல்காரராக பணிபுரியும் நீலகிரிக்குச் சென்றனர். அங்கு வல்லக்காளத்தி திரு. வீ. அயோத்தி தாசர் பண்டிதர் அவர்களிடம் கல்வி கற்ற காத்தவராயன் அவர்கள் சித்த மருத்துவம் மற்றும் தத்துவத்தில் புலமைபெற்று விளங்கினார். அத்துடன், தமிழ், பாலி வடமொழி மற்றும் ஆங்கில மொழிகளில் புலமைபெற்று விளங்கினார். பின்னர், தன் குருமீது கொண்ட அதீத மரியாதையினால் காத்தவராயன் என்னும் தன்பெயரை அயோத்தி தாசர் என மாற்றிக்கொண்டார்.

அயோத்தியதாசரும் ஒடுக்கப்பட்ட மக்களும்:

1961 முதல் 1991 வரை பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் கிருத்துவர்கள் மற்றும் முஷ்லிம்கள் அல்லாதோர்கள் அனைவரையும் "இந்து" என அடையாளப்படுத்தி அதனுள் திணிக்கப்பட்டனர். அயோத்தியதாசர் வைணவ மரபை ஆதரித்தாலும் "இந்து" என்ற கோட்பாட்டை ஏற்க மறுத்தவர். ஏனென்றால், தன்னை "இந்து" என அடையாளப்படுத்திக்கொண்டால் சாதிய அமைப்புகளுக்குள் தன்னை இணைத்துவிடுவார்கள் என்பதால்  "இந்து" என்ற கோட்பாட்டை ஏற்க மறுத்தார். மேலும், ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்களைக் களைந்து அவர்களனைவரையும் ஓரணியில் திரட்ட முற்பட்டார். அத்துடன் அவர்களை "சாதியற்ற ஆதிதிராவிடர்கள்" என பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார்.  தன் இளமைக்காலத்தில் ஆதிசங்கரரின்மேல்  ஈடுபாடு கொண்டிருந்த அயோத்தியதாசர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சிறந்த சமயக் கோட்பாடுகளை வடிவமைத்து அவர்களை நெறிப்படுத்துவதற்காக 'அத்வைதானந்த சபை'யை தோற்றுவித்தார்.

"சாதியற்ற திராவிட மஹா ஜன சபை" என்னும் அமைப்பின்மூலம் தாழ்த்தப்பட்ட நிலமில்லா மக்களுக்கு தரிசாக கிடக்கும் நிலங்களை வழங்கவேண்டும், இலவசக்கல்வி மற்றும் அனைத்து சாதியினரும் கோவிலுக்குள் நுழையவேண்டும் முதலிய கோரிக்கைகளை அன்றைய ஒரே கட்சியான இந்திய தேசிய காங்கிரசுக்கு அனுப்பினார். ஆனால், அன்றைய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. அத்துடன் நிறுத்தாமல், மதராஸ் மகாசன சபை 1892 இல் ஏற்பாடு செய்த கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தின் பிரதிநிதியாய் பங்கேற்று மேற்கண்ட அறிக்கையை பிரிட்டிஷ் அரசுக்கு கோரிக்கையாகக் கொடுத்தார். ஆனால், அங்கு அதிகம் கூடியிருந்த உயர்குடிமக்களால் அவமானப்படுத்தப்பட்டு கோரிக்கையானது நிராகரிக்கப்பட்டது.

பௌத்தமும் அயோத்தியதாசரும்:

தான் சார்ந்த சமூக மக்களை தீண்டாதத் தகாதவர்களாக என்னும் இந்து மதத்தையும் வருணாசிரம கொள்கைகளையும் முற்றிலும் வெறுத்தார். அச்சமயம், ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களின் அறியாமையை அறிந்துகொண்ட கிருத்துவ பாதிரியார்கள் அவர்களின் ஏழ்மை மற்றும் அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை கிருத்துவ மதத்திற்கு மதமாற்றும் வேளையில் இறங்கினர். இதையறிந்த அயோத்தியதாசர், "ஆதிதிராவிட மக்கள் பௌத்த மதத்தினரே" என்றும் "அவர்களை பிழைக்க வந்த ஆரியர்கள் வருணாசிரம முறையை வகுத்து ஒதுக்கிவைத்துவிட்டார்கள்" என்றும் கருத்து தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், ஆதிதிராவிட மக்கள் முன்னேற அனைவரும் பௌத்த மதத்திற்கு மாறவேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.1898 ஆம் ஆண்டில் ஹென்றி ஆல்காட் மற்றும் அனகாரிகா தர்ம்பாலா ஆகியோரைச் சந்தித்து தானும் தான் சார்ந்த மக்களும் பௌத்த மதத்தை தழுவவிருப்பதாகக்கூறினார். பின்னர், ஹென்றி ஆல்காட் அவர்களின் வழிகாட்டுதலினால் இலங்கையிலுள்ள சிங்கள பௌத்தத் துறவி சுமங்கல நாயகரைச் சந்தித்து பௌத்த மதத்திற்கு மாறினார். மதராஸ் திரும்பிய அயோத்தியதாசர் "தென்னிந்திய சாக்கிய பௌத்த சபை"யை துவங்கினார். அதில், பல்லாயிரக்கணக்கான ஆதிதிராவிட மக்கள் பௌத்த மதத்திற்கு மாறினர்.

ஒரு பைசா தமிழன்:

ஆதிதிராவிட மக்கள் பௌத்த மதத்திற்கு மாறினாலும் அவர்களை தாழ்த்தப்பட்ட மக்களாகவே உயர்சாதி மக்கள் பார்க்கத்தொடங்கினர். தங்களது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மக்களிடையே கொண்டு செல்ல 1907- ஆம் ஆண்டு 'ஒரு பைசா தமிழன்' என்னும் நாளிதழ் தொடங்கப்பட்ட்டது. அதன்மூலம் புத்தரின் அறநெறிகளை போதனைகளும் பரப்பப்பட்டது. அயோத்தியதாசரின், பௌத்தமும் தமிழ் நடையும் மக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்தியப் பாரம்பரியம் பௌத்த மதமாக இருந்தது என்பதைத் தன் தமிழ்ப்புலமை மூலம் இவ்வாறு விளக்கினார்:

"இந்திய என்ற சொல் 'இந்திரம்' என்பதன் திரிபு. இந்திரனாகிய புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு 'இந்திரதேசம்' என்ற பெயர் வந்தது. ஆரியர் வருகைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது, அந்த தேசியத்தைப் பௌத்தம் உருவாக்கியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம், சமத்துவம், அறக்கருத்தொற்றுமை, மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அன்னியரான வெளியாரின் ஊடுருவலால், படையெடுப்பால் காலப்போக்கில் அது மந்திர அல்லது மாயத்தன்மையென திரிக்கப்பட்டது." .

மேலும், பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், மூட நம்பிக்கை, தீண்டாமை கொடுமை, சாதிய ஒழிப்பு பற்றி விரிவாக எழுதினார். அத்துடன், சமூக நீதி, சமூக மதிப்பிடுகள் விளிம்பு நிலை ஒடுக்குமுறைகள் குறித்து பேசினார். ஒருவருடத்திற்குப் பிறகு வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க "ஒரு பைசா தமிழன்" பெயரிலிருந்து "தமிழன்" எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

1912-ஆம் ஆண்டு அக்டோபர் 30, தமிழன் இதழில், "இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தால் இம்மண்ணிண் மைந்தர்களாம் ஆதித் தமிழர்களிடம் அரசியல் அதிகாரத்தை வழங்கவேண்டும். கருணை தாங்கிய பிரிட்டீஷ் துரை அவர்கள், சுதேசிகள் மீது கிருபை பாவித்து சுயராட்சியத்தை அளிப்பதாயினும் இத்தேச பூர்வக்குடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்றுக் குடியேறி வந்தவர்களையும், முன்னாடி குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக் கருதி அவர்கள் வசம் சுயராட்சிய ஆளுகையைக் கொடுத்தால் நாடு பாழாகி சீர்கெட்டுப்போகும்" என்றார்.

திராவிடத்தின் ஆணி வேர்:

சுதந்திர இந்தியாவில் தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டவர்களில் முக்கியமானவர்கள் யாரென்று கேட்டால் அனைவரது பதிலும் ஒன்றாகத்தான் இருக்கும். ஒருவர் வட இந்தியாவின் அம்பேத்கர் மற்றொருவர் தென்னிந்தியாவின் பெரியார். ஆனால், இவர்கள் இருவரும் தவழ்ந்து கொண்டிருக்கும்போதே அவருக்கென்று தனி இயக்கமோ கட்சியோ இல்லாமல் தனியாளாக நின்றுகொண்டு "தீண்டாமை ஒழிப்பு, பெண்ணுரிமை, இலவசக்கல்வி, சமூக நீதி மற்றும் அறம்" பேசி போராடிக்கொண்டிருந்தார் என்றால் "திராவிடத்தின் ஆணி வேர் அயோத்தியதாசர்" எனக்கூறலாம். அதுமட்டுமல்லாமல், பெரியாரே "தனது கொள்கைகளுக்கு முன்னோடி திரு. அயோத்தியதாசர்" எனக்கூறியிருக்கிறார் என்றால் இவர் பெரியருக்கே பெரியாரல்லவா!

தீண்டாமை தலைவிரித்தாடிய காலத்தில், பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கொள்கைகள் கொண்ட தேசத்தில் "மனிதம் ஒன்றே. இதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எவருமிலர்" என்ற கொள்கையினை நிலைநாட்ட முதன்முதலில் "சாதி எதிர்ப்பு" போராட்டத்தை துவக்கிய அயோத்தியதாசர் போற்றப்படுபவரே. "சிறு தீப்பொறியும் பெரும் காட்டை அழித்துவிடும் ஆற்றல் கொண்டது". அதுபோல், இன்றைய திராவிட இயக்கங்களின் பெரும் வளர்ச்சிக்கு தீயிட்டவர் திரு. அயோத்தியதாசர்.

நன்றி,
ஊமை இளைஞன் 

கக்கன் - தமிழக அரசியலில் இப்படியும் ஒரு கதர் சட்டை


"என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே", "என் இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகளே" என்றுகூறி வார்த்தைகளால் வர்ணஜாலம்பூசி சினிமாவிலும் மேடைப்பேச்சுகளிலும் மக்களை தன்பக்கம் இழுக்கும் வசீகரம் கொண்டவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர்களாகிய திரு. கலைஞரும், திரு. எம்ஜியாரும். ஆனால் அவர்களுக்கு முன்னரே, எந்தவொரு சினிமா பின்புலமும் முக வசீகரமும் இல்லாமல் வாழ்ந்த ஒரு மனிதரை, அன்றுமுதல் இன்றுவரை, அரசியலின் தூய்மை என்றால் அவர் ஒருவரது பெயரையே முன்மொழிகிறோம் என்றால் அவரையும் அவரின் நேர்மையையும் யாருடன் எதனுடன் உருவகப்படுத்துவது? காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் அவர் பெயர் ஒன்றே போதும்.ஆம். அவர்தான் திரு. கக்கன்.

கக்கனின் பிறப்பு:

ஜூன் 18, 1908 ஆம் ஆண்டு, மதுரை மாவட்டத்திலுள்ள தும்பைபட்டி என்னும் கிராமத்தில் வசிக்கும் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தார் கக்கன். இளமையிலேயே தன் தாயை இழந்ததால் தனக்குச் சிற்றன்னையாக வந்த பிரம்பியம்மாள் என்னும் அம்மையாரால் வளர்க்கப்பட்டார். தன் பள்ளி இறுதித் தேர்வில் (எஸ்.எஸ்.எல்.சி) ஆங்கிலப் பாடத்தில் ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் தோல்வியடைந்தார். மீண்டும் படிக்க தொடர்ந்த அவரால் வெற்றிபெற முடியவில்லை. எனவே, தன் மாணவப்பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பிறகு மதுரை வைத்தியநாத அய்யர் அவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் கலந்துகொண்டார்.

தீண்டாமையும் கக்கனும்:

ஒருவன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் அவன்மீது கீழ்சாதி என்னும் சாயம் பூசப்பட்டால் அவன் அதை சுமந்துதானே ஆகவேண்டும். தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடிய காலம் அது. தும்பைபட்டியில் உள்ள ஊரணியில் உயர்சாதி மக்கள் மட்டும் நீர் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்கு வெளியில் உள்ள ஒரு அசுத்தமான குளத்திற்குச் சென்று நீரெடுக்க வேண்டும் என்ற சாதிய அடக்குமுறை இருந்துவந்தது. அந்த அசுத்தமான குளத்துக்கு உயர்சாதி மக்கள் வைத்த பெயர் பீக்குளம். காக்கன் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பிலிருந்த போதும் அவரால் அந்தப்பகுதி மக்களுக்கு ஏதும் செய்ய இயலவில்லை. காரணம், காங்கிரஸ் கட்சியில் உயர்சாதியினரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. கக்கனின் வேதனையை புரிந்துகொண்ட தும்பைபட்டி அம்பலம் ஒருவரும் செட்டியார் ஒருவரும் ஊர் பஞ்சாயத்தை கூட்டி தாழ்த்தப்பட்ட மக்களையும் ஊர் பொதுக்குளத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று பேசினார்கள். பெரிய அடிதடி பிரச்சனைகளுக்கு பிறகு, குளத்தின் ஒருபுறம் ஆதிக்க சாதியினரும் மறுபக்கம் தாழ்த்தப்பட்ட மக்களும் நீர் எடுக்கலாம் என்று பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது.

1927 ஆம் ஆண்டு, ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே. எஸ். கண்ணப்பர் தொடங்கிய, ஆலய உள்நுழைவு (தாழ்த்தப்பட்ட மக்களும் கோவிலுக்குள் செல்லவேண்டும்) போராட்டத்தின்  தொடர்ச்சியாக மதுரை வைத்தியநாத அய்யர் துணையுடன் தாழ்த்தப்பட்ட மக்களுடன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலினுள் நுழைந்து போராட்டத்தை வெற்றிகரமாக முடித்தார் (குறிப்பு: முதலில் வைத்தியநாத அய்யர் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்).

தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை கல்வியால் மட்டுமே உயர்த்தமுடியும் என எண்ணி, காங்கிரஸ் கட்சியின் சார்பில், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட "அரிசன சேவா சங்கத்தில்" தன்னை இணைத்துக்கொண்டு சேவையாற்றினார்.

சுதந்திரப் போராட்டத் தியாகி என்ற அடிப்படையில் தனக்குத் தரப்பட்ட நிலத்தை, வினோபா பாவேவின் 'பூமிதான' இயக்கத்துக்குத் தானமாகக் கொடுத்துவிட்டார் கக்கன்.

கக்கனும் அரசியலும்:

1946-ல் நடைபெற்ற தேர்தலில் மத்திய சட்டமன்ற உறுப்பினராக கக்கன் தேர்வுசெய்யப்பட்டார். பின்னர், 1952-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.  1957-ல் மேலூர் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றிபெற்றார். அதனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. காமராஜர் ஆட்சியில் தொடர்ந்து 9 ஆண்டுகள் அமைச்சராக பதிவு வகித்தார். அதில், பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும்  உள்துறை அமைச்சர் பதவி முதலியன அடங்கும். மேலும், 5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அரசியல் வரலாற்றில் 'பிழைக்கத்தெரியாதவர்' என்றால் இன்றும் கக்கனின் பெயரையே கூறுவர். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் தமிழகத்தில் மேட்டூர் மற்றும் வைகை அணைகள் கட்டப்பட்டன.

விவசாயிகளுக்குக் குறித்த நேரத்தில் உரம் கிடைக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினார் கக்கன். பசுந்தாளுரம் அறிமுகமானது கக்கனின் காலத்தில்தான்.

1963-ல் காங்கிரசின் மூத்த தலைவர்கள் பதவி விலகி கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் காமராஜர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அப்பொழுது கக்கனையே அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது காமராஜர் எண்ணம் ஆனால் பக்தவத்சலம் முதல்வரானார். தொடர்ந்து வெற்றியையே பார்த்துவந்த கக்கனுக்கு 1971-ல் நடைபெற்ற தேர்தல் முதல் தோல்வியை தந்தது. ஆம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட கக்கன் தோல்வியடைந்தார். அத்துடன், அரசியலிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டார்.

கக்கனின் நேர்மை:

கக்கன் அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்த சமயம். கக்கனின் தம்பி திரு.விஸ்வநாதன் அவர்களுக்கு காவல் துறையில் சேர விருப்பம். சிறந்த ஓட்டப்பந்தய வீரரும்கூட. அவருக்கு காவல்துறையில் சேர அழைப்பும் வந்தது. ஆனால் கக்கன் அவர்களோ விஸ்வநாதனிடம், " காவல்துறை என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. நீ நேர்மையான முறையில் தேர்வாகியிருந்தாலும், என்னுடைய சிபாரிசில்தான் உனக்கு இந்த வேலை கிடைத்தது என்று கூறுவார்கள். அதனால் இந்த வேலை உனக்கு வேண்டாம்" என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். மேலும், ஐ.ஜி அருளை அழைத்து, "என் தம்பிக்கு 2 விரல்கள் சரியாக வேலை செய்யாது. அவனால் துப்பாக்கியெல்லாம் இயக்க முடியாது. நீங்கள் சரியாக தேர்வு செய்யவில்லை" என்றுகூறி அந்த ஆர்டரையே ரத்து செய்ய வைத்துவிட்டார். (தற்காலத்தில், கட்சியின் கடைசிநிலை பொறுப்பில் இருப்பவர்கள்கூட பொதுமக்களிடம் அதிகாரம் செய்கிறார்கள்).

ஒருமுறை கக்கன் அவர்கள் கட்சிப்பணியின் காரணமாக வெளியூர் சென்றிருந்தார். ஒருநாளில் கட்சிப்பணி முடிந்து வீடு திரும்பிவிடலாம் என்பதால் மாற்றுத்துணி ஏதும் எடுத்துவரவில்லை. காலையில் குளிக்கச் சென்ற கக்கன் வெகுநேரமாகியும் வெளியில் வராததால் அதிகாரிகள் உள்நுழைந்து பார்த்தனர். அங்கு கக்கனே தனது கிழிந்த அழுக்குபடிந்த வேஷ்டியை துவைத்து உலர்த்திக்கொண்டிருந்தார். துவைத்து கொடுக்க ஆட்களும் அங்கு உண்டு ஆனால் துவைக்க சொல்லவில்லை. புதிய வேஷ்டி வாங்கிவரச் சொன்னால் அதிகாரிகளே வாங்கிவந்து கொடுப்பார்கள். இருப்பினும் கக்கன் அந்த அழுக்குப்படிந்த வேஷ்டியை தானே துவைத்து உலர்த்தியபின் அதிகாரிகளுடன் வெளியில் சென்றார். கக்கனின் அரசியல் வாழ்க்கையில் கரை படிந்தது அவரின் உடையில் மட்டுமே.

கக்கனின் இறுதிகாலம்:

காமராஜரின் இறப்பிற்குப்பிறகு, அரசியலை விட்டு முழுவதும் வெளியேறிய கக்கன் அவர்கள் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுவந்தார். அரசு பேரூந்துகளையே பயன்படுத்தி வந்தார். கடும் பொருளாதார நெருக்கடிக்குட்பட்டார். இதையறிந்த நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் தனக்குப் பரிசாகக் கிடைத்த 'தங்கச்சங்கிலி' ஒன்றை பொதுவெளியில் ஏலம் விட்டு, அதில் கிடைத்த தொகையைத் தனியார் நிதி நிறுவனத்தில் நிரந்தர முதலீடு செய்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டித்தொகையை ஒவ்வொரு மாதமும் கக்கனுக்குக் கிடைக்குமாறு வழிவகை செய்தார்.

1980-ஆம் ஆண்டு மதுரை முத்துவைக் காண இராஜாஜி அரசு மருத்துவமனைக்குச் சென்றார் முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள். அங்கு நலம் விசாரித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம் உடனிருந்த காளிமுத்து ஏதோ கிசுகிசுக்க எம்.ஜி.ஆர் பதறிப்போனார். மருத்துவமணையின் சாதாரண வார்டுக்கு விரைந்து சென்றார். மக்களோடு மக்களாக படுக்கை வசதியின்றி கீழே படுத்திருக்கும் கக்கனைக் கண்டு கண்கலங்கினார். உடனடியாக எம்.ஜி.ஆர் "கக்கனை சிறப்பு வார்டுக்கு மாற்றக்கோரி உத்தரவிட்டார் ஆனால் கக்கனோ "சாதாரண வார்டே எனக்குப்போதும்" எனக்கூறி அதனை மறுத்துவிட்டார். சென்னை திரும்பிய திரு. எம்.ஜி.ஆர் அவர்கள், "முன்னாள் அமைச்சர்களுக்கு, இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் இலவச பேருந்து பயணம்" முதலிய உதவிகளை அரசு செய்யும் என அறிவித்தார். மேலும், கக்கனுக்கு ஓய்வூதியம் கிடைக்கவும் வழிவகை செய்தார். இருப்பினும், கக்கனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் 1981- ஆம் ஆண்டு, டிசம்பர்-23 அன்று மரணம் அடைந்தார்

இன்றைய இளைஞர்கள் இன்றைய அரசியல்வாதிகளின் அரசியலை பார்த்துக்கொண்டு, "அரசியல் என்றாலே ஊழல், மக்களை ஏமாற்றும் செயல். அதற்குள் நாம் செல்லக்கூடாது " என்றெண்ணுகிறார்கள். அரசியலில் இப்படியும் சில தலைவர்கள் இருந்தார்கள் என்பதை அறியாமலேயே. "அவர்கள் அவ்வாறு இருக்கிறார்கள் அதனால் அங்கு நான் செல்லமாட்டேன்" எனக்கூறுவது எவ்வகையில் நியாயமாகும். காமராஜரின் ஆட்சியில் கக்கன் மட்டுமே அமைச்சரில்லை. அவருடன் இன்னும் பல அமைச்சர்களும் இருந்தார்கள் ஆனால் இன்றளவும் கக்கனையே அரசியலின் நேர்மையாக கூறுகிறார்கள். எங்கு இருக்கிறோம் என்று பாராமல்,  எவ்வாறு தனித்து நிற்கிறோம் என்பதிலேயே நம் வெற்றி இருக்கிறது. கக்கன் அன்று ஒடுக்கப்பட்டிருந்தாலும் இன்று ஓங்கியே இருக்கிறார். நாமும் ஓங்கி நிற்க உழைத்து நிற்போம்.

நன்றி,
க. வினோத்குமார் 

Friday, 19 July 2019

மாற்றம் உண்டாக மனிதனை மனிதனாக மதிப்போம்.....


சென்னையிலுள்ள டைட்டில் பார்க்கில் மானேஜராக பணிபுரியும் நடேசனுக்கு மாதம் இரண்டு இலட்சம் சம்பளம். அவனது திறமையை அறிந்து பல கம்பெனிகள் அதிக சம்பளம் தருவதாகக் கூறி, தற்பொழுது பார்க்கும் வேலையை விட்டுவிட்டு தங்களது கம்பெனிக்கு வந்து வேலைபார்க்கும்படி கூறினர். ஆனால், நடேசன் அதற்கு செவிமடுப்பதாய் தெரியவில்லை. நடேசன் வேலைபார்க்கும் கம்பெனிக்கு அமெரிக்காவிலிருந்து சில  உயரதிகாரிகள் புதிய ப்ரோஜெக்ட் விசயமாக வந்திருந்தனர். அந்நேரம், கம்பெனியின் உரிமையாளர் முக்கிய விஷயமாக வெளியூர் சென்றிருந்ததால் நடேசனையே அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொள்ளுமாறு கூறியிருந்தார். அதன்படியே, நடேசன் புதிதாக வந்திருந்த அமெரிக்கர்களிடம் நன்கு உரையாடி அவர்களிடமும் நன்மதிப்பு பெற்று வெற்றிகரமாக கம்பெனிக்கு புதிய ப்ரோஜெட்களை பெற்றுத்தந்தார். தனது பயணத்தை முடித்துகொண்டு மீணடும் கம்பெனியை அடைந்தவுடன்  கம்பெனியின் உரிமையாளரான சதாசிவம் நடேசனுக்கு தனது கம்பெனியின் புதிய ப்ரொஜெக்ட்டில் பங்குதாரராக நியமித்தார். புதிய ப்ரொஜெக்ட்டும் சிறப்பாக போய்க்கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு பிறகு, சாதாசிவமும்  நடேசனும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் நடேசனின் செல்போன்  ஒலித்தது.

சார், 

"ஹலோ அப்பா எப்படி இருக்கிங்க?" என்றான் நடேசன்

"ம்ம். நல்லாயிருக்கேன்பா. நீ நல்லா இருக்கியா? " என்றார் நடேசனின் அப்பாவான கணேசன்.

"ம்ம் ... ஊர்ல அண்ணண், மாமா , அத்தை , சித்தப்பா சித்தி , ஏரியா  பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?"

 "எல்லாம் நல்லாருக்காங்க பா. வர்ற தை மாசம் 12 ஆம் தேதி ஊரில திருவிழா... மறக்காம வந்துருப்பா. லீவு இல்லனு சொல்லிடப்போற. உன்ன பாத்து ரொம்ப வருஷமாச்சுப்பா. கண்ணுல இருக்குற மாதிரி இருக்கு."

"திருவிழாவா? எந்த கோவில்லபா ? "

"ரொம்ப வருசமா பூட்டி கடந்துச்சுல...நம்ம காளியம்மன் கோயில்..கேஸ் எல்லாம் முடிஞ்சி இந்த வருஷம்தான் திருவிழா பண்ணறாங்க"


"கண்டிப்பா வரேன்பா...உடம்ப பாத்துக்கோங்க.."


"ம்ம் .. சரிப்பா.. வச்சிடறேன்.."


"சொல்லுங்க  நடேசன். யாரு அப்பாவா??" என்றார் சதாசிவம்.


"எஸ் சார் ... நெக்ஸ்ட் மந்த் நேட்டிவ்ல டெம்பிள் பங்க்ஷன் .. அதான் கால் பண்ணாரு" என்றார் நடேசன்..


"நெக்ஸ்ட் மந்த்தா ... டேட் என்ன ?"


"ஜனவரி 25 சார் ..."


"அந்த டேட்ல நம்ம ஃப்ரீதான்... நீங்க 1 வீக் லீவ் எடுத்துக்கோங்க..."


"தேங்க் யு சார் .."


சிறிது நாட்களுக்கு பிறகு ஊருக்கு புறப்பட்டு சென்றான். வீட்டை அடைந்த நடேசன் அப்பாவை சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு பின்னர் ஓய்வெடுக்க முடிவுசெய்து அருகில் கிடந்த கட்டிலில் சாய்ந்தான். தொலைதூரப் பிரயாணம் என்பதால் அயர்ந்து தூங்கிவிட்டான்.


"நடேசா.. கண்ணு எந்திரிப்பா.. நேராகுது. கோயிலுக்கு போலாம்." என்றார் கணேசன்.


"பத்து நிமிஷம் பா. ரொம்ப டயர்டா இருக்கு"


"பூசை ஆரம்பிச்சிருவாங்கப்பா.. வந்து தூங்கிக்கலாம்.எந்திரிப்பா..."


"ம்ம்ம்.." (சோம்பலுடன் எந்திரித்து சென்றான்)


குளித்து முடித்தவுடன், தனது அப்பா வைத்திருந்த மோட்டார் வண்டியில் தனது அப்பாவை ஏற்றிக்கொண்டு கோவிலுக்குச் சென்றான். செல்லும் வழியில்,


"தம்பி எப்போ வந்தீங்க?" என்றார் வழியில் செல்லும் முதியவர்...


"காலைலதாங்க வந்தேன்... நல்லாருக்கீங்களா?"


"ம்ம் ஏதோ இருக்கன் கண்ணு. நீங்க சௌக்கியமா?"


"ஆம். நல்லாயிருக்கங்க..."


"ம்ம் சரிப்பா... கோயிலுக்கு போயிட்டு வாங்க.."


"ம்ம் சரிங்க... பாத்து போங்க.."


கோவிலின் அருகில் சென்றான். கோவிலுக்குள் சில மனிதர்கள் பட்டாடை தரித்து தலைப்பாகையுடன் தரிசனம் செய்துகொண்டிருந்தனர். பலர், வெளியில் நின்றுகொண்டு உள்ளிருக்கும் கடவுளை பார்க்க அலைமோதிக்கொண்டிருந்தனர். கோவிலின் பூசாரி இடதுகையில் மணியும், வலதுகையில் கற்பூர ஆரத்தியையும் எடுத்துக்கொண்டு கடவுளுக்கு காட்டிக்கொண்டிருந்தார். பூஜையை முடித்தபின், கற்பூர ஆரத்தியை ஒவ்வொருவரிடமும் காட்டிக்கொண்டு வந்தார். உள்ளிருந்தவர்கள் தாங்களாகவே ஆறத்தியில் இருந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டனர்... வெளியில் இருந்தவர்கள் பக்கம், ஆரத்தியை சற்று மேலேதூக்கி காமித்துவிட்டு அதன்பின் அவர்கள் போடும் காணிக்கைகளை ஆராத்தித்தட்டில் பெற்றுக்கொண்டு கோவிலின் உள்ளே சென்றார் பூசாரி. கோவிலின் உள்பக்கம் விசாலமாக இருந்ததாலும், பூசாரி உள்ளே சென்றதாலும், நடேசன் தன் தந்தையின் கையைபிடித்துக்கொண்டு தனக்கு முன்பிருந்த கூட்டத்தை கடந்து உள்செல்ல முற்பட்டான். அப்பொழுது,


"நடேசா.. என்ன பன்ற?... நம்ம உள்ள போகக்கூடாது!" என்று கத்தினார் (பதட்டத்துடன்)


"ஏப்பா... என்னாச்சு?"


"என்ன தம்பி... கொஞ்ச நாள் ஊருல இல்லைனா பழசலாம் மறந்து போய்டுமா" என்ற குரல் ஊர்த்தலைவரிடமிருந்து கனத்தது.


"சாமி மன்னிச்சுடுங்க.. எம்பையன் தெரியாம உள்ள வந்துட்டான்"


"ம்ம்.. அப்புறம்... கோயிலுக்குள்ள வந்ததுக்கு குத்தம் கட்ட சொல்லு" என்று அதட்டினார் ஊர்த்தலைவர்.


"சேரிங்க சாமி.. நான் கட்ட சொல்றேன்.. டேய் போய்ட்டு அவங்க எவ்ளோ சொல்றாங்களோ அந்த பணத்த கட்டிப்புட்டு வா..." என்று அழுகையுடன் கூறினார் கணேசன்.


"அப்பா நம்ம என்னப்பா பண்ணோம்... எதுக்கு குத்தம் கட்டணும்?"


"டேய்.. அதான் உங்கொப்பன் சொல்றான்ல.. போய் கட்டிட்டு வா?" என்றார் ஊர்த்தலைவர்.


தோய்ந்த முகத்துடன், தன் தந்தையின் கட்டளையாலும் கோவிலின் நன்கொடை பிரிவுக்குச் சென்று பணத்தை கட்டினான். திரும்பி பார்க்கையில், வெளியில் இருந்தவர்களில் பெரும்பாலானோர், கோவிலின் வெளிப்புறத்தில் நீண்டிருந்த கொடிக்கம்பத்தின் அருகே திருநீறு கொட்டப்பட்டிருந்தது. அதையெடுத்து தங்களது நெற்றியில் பூசிக்கொண்டிருந்தார்கள். கொடிக்கம்பத்தின் அருகே வேகமாக சென்ற கணேசன்  திருநீறை கையில் கொஞ்சம் எடுத்துக்கொண்டுவந்து நடேசனின் நெற்றியில் வைத்தார்.


கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு டாட்டா சுமோ கார்கள் கோவிலின் அருகே வந்து நின்றது. காரிலிருந்து வெள்ளை வேஷ்டி, கதர் சட்டை, கழுத்தில் 10 சவரனுக்கு மேல் சங்கிலி, இரண்டு கைகளின் விரல்களிலும் மோதிரங்கள் அணிந்த மனிதர்கள் இறங்கினார்கள். தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை கையிடுக்கில் வைத்துக்கொண்டு ஊர்த்தலைவரும், ஆராத்தித்தட்டை கையில் ஏந்திக்கொண்டு பூசாரியும் கோவிலுக்கு வெளியே நின்ற காரினருகே வந்து நின்றனர்.


"அய்யா.. வாங்க!" என்றார் ஊர்த்தலைவர் (பணிவுடன்).


"சாமி...தீபம் எடுத்துக்கோங்க" என்றார் பூசாரி [பக்தியுடன்]


தீபத்தை தொட்டு கும்பிட்டுவிட்டு சட்டைப்பையிலிருந்த ஐநூறு ரூபாயை தட்டில் வைத்தார் அந்த பெரிய மனிதர்.


"நீங்களும், உங்க குடும்பமும் நீடூழி வாழனும் சாமி.. இந்தாங்க, உங்களுக்கு சிறப்பு பிரசாதம்." என்றார் பூசாரி.


"நல்லது" என்று கூறிவிட்டு மீண்டும் காரில் ஏறிச்சென்று விட்டார் அந்த பெரிய மனிதர்.


இதையெல்லாம் உற்று கவனித்துக்கொண்டிருந்த நடேசன், தனது அருகிலிருந்த பெரியவரிடம் அந்த பெரிய மனிதரைப்பற்றி விசாரித்தான்.


"தாத்தா..யார் இந்த மனிதர்? அவரைக்கண்டதும் ஏன் பூசாரியும் ஊர்த்தலைவரும் கோவிலுக்கு வெளியவே வந்துவிட்டார்கள்? அவர் அவ்வளவு பெரிய மனிதரா? அவர் இவர்களுக்கு அப்படி என்ன செய்துவிட்டார்?" என்று தனது மனதில் ஓடிக்கொண்டிருந்த கேள்விகளையெல்லாம் கேட்டான்.

"தம்பி அவர தெரீல.. அவருதான் இந்தவூரு எம்எல்ஏ அதனாலதான் இந்த மரியாதையெல்லாம்..." என்று சிரித்துக்கொண்டார் பெரியவர் 

"ஏன் தாத்தா சிரிக்கிறீங்க?"

"இல்ல தம்பி.. இப்போ வந்தாரே அந்த பெரிய மனுஷன். அவரு நம்ம ஊருதான்...நம்ம சனம்தான்... நம்ம தெரு தாண்டி ரெண்டாவது தெரு. மொதல்ல ஒரு கட்சில இந்தப்புல... அப்புறம் எலக்சன்ல நின்னு இப்போ எம்எல்ஏ ஆயிட்டாப்ல. நீ உள்ள போயி சாமிகும்பிட போன, ஆனா நீ உள்ள வந்தா தீட்டுனு சொல்லி கோயில சுத்தம் பண்ணாங்க... ஆனா அந்த மனுஷனுக்கு சாமியே வெளில வந்து தரிசனம் தந்துட்டு போகுது!!!... சாமிகக்கூட சாதிப்பாக்குது போல.." என்று ஏளனமாக சிரித்தார்.

"ஏன் தாத்தா இந்த சாதியெல்லாம் இன்னுமா பாக்குறாங்க? இதெல்லாம் ஒழியவே ஒழியாதா?"

பெரியவர் இன்னும் சத்தமாக வாய்விட்டு சிரித்துவிட்டு, "இன்னுமா பாக்கறாங்களாவா?  கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் எல்லாம் மாறிடும்னு நினைச்சன்...ஆனா போன வாரம் பொன்பரப்பியில ரெண்டு சமூகத்தை சேர்ந்தவங்க மோதிக்கிட்டாங்க .. பொன்னமராவதியிலயும் இதே பிரச்சனைதான்... இது இந்த ரெண்டு ஊருல மட்டுமில்ல நாடு பூராவும் நடக்குது. ஏன் இப்போ உனக்கு நடந்ததுகூட சமூக பிரச்சனைதான்..என்ன வெளில தெரியறது இல்ல?"

"நானும் கேள்விப்பட்டேன் தாத்தா... இவ்வளவு அறிவியல் வளந்துருச்சு...நாடு எங்கயோ போய்ட்டு இருக்கு? இந்த காலத்துல எதுக்கும் உதவாத சாதிய பெருசா தூக்கிபிடிச்சி சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்களே தாத்தா? இவங்கள என்னதான் சொல்றது?"

"இவங்கள சொல்லி எந்த தப்பும் இல்ல தம்பி... இவங்க எல்லாரும் பிரிஞ்சி கிடந்ததான் அவங்க பொழப்பு நல்லா ஓடும்... "

"யார சொல்றிங்க தாத்தா?"
...அவங்கதான் தம்பி.. சாதிக்கொரு கட்சி... கட்சிக்கொரு தலைவன்.. அவனுக்கு கீழ நாலு பேரு... அந்த நாலு பேருக்கு கீழ நானூறு பேருனு... அப்படியே வாழையடி வாழை மாதிரி சாதிய திணிச்சிட்டு இருக்காங்கள அவங்கதான்... இதுல வேடிக்கை என்னனா, தலைவனையும் சாதியையும் உசுரா பாக்குறாங்க பாரு அவங்கதான் சண்டையிட்டும் வெட்டிகிட்டும் கிடப்பாங்க... ஆனா, தலைவனோ, தலைவனோடு பசங்களோ, பொண்ணுங்களோ, அவங்க குடும்பத்தை சேர்ந்தவங்களோ யாரும் சண்டையில இருக்கமாட்டாங்க... நாலு லட்சம் பெற வெறும் நானூறு பேரு ஆட்டிவைக்கிறாங்க... அது புரியாம சாதி மதம்னு ஆர்ப்பரிக்கிறாங்க... அவங்ககிட்ட இருந்து எந்த மாற்றமும் வராது தம்பி... மொதல்ல நம்ம திருந்தனும்... அதுக்கு மனுஷன், மனுசன  மனுசனா மதிக்கணும்" என்று கூறிவிட்டு சென்றார் பெரியவர்...

நன்றி,
ஊமை இளைஞன்

மழை தருவாய் மழையே




ஆறும் வறண்டிருக்கு
அணையும் தவம்கிடக்கு
அருள்புரிவாயே அன்பு மழையே..!!

குளமும் வெறும் குழியாகிடக்கு
குட்டை கிணறும் கல்லாகிடக்கு
கோவம் வேண்டாம் கொள்ளை மழையே!

ஓடையும் ஒழிஞ்சுகிடக்கு
ஊரணியும் உருகிக்கிடக்கு
ஓடி வா உன்னத மழையே

மண்ணும் காய்ஞ்சுகிடக்கு
மக்க மனசும் மருண்டுகிடக்கு
மவுனம் வேண்டாம் மழழை மழையே!

உடம்போ வேர்த்துக்கிடக்கு
உசுரோ காத்து கிடக்கு
இரக்கம் கொள்வாய் இன்ப மழையே!

ஊற்றும் உறங்கிக்கிடக்கு
நாத்தும் நசுங்கி கிடக்கு
கீழிறங்கி வா! கிளை தழைக்க வா!
உயிர் பிழைக்க வா! உறவாக வா!

நன்றி,
ஊமை இளைஞன்

Thursday, 18 July 2019

ஓட்டுக்கு ரெண்டாயிரம்.....



திங்கட்கிழமை காலை 6.00 மணி. கிழக்கே அடிவானத்தில் செந்நிறக் கதிர்கள் சிறகடிக்கத் தொடங்கிய சற்றுநேரத்தில், கூரைவீட்டின் மேற்பகுதியில் உள்ள சிறுதுவாரத்தின் வழியே நுழைந்த கதிரொளி மாராக்காவின் தூக்கத்தை கலைத்துச் சென்றது. கதவைத் திறந்து பார்த்த மாராக்காவின் எதிரே, பெட்டைக்கோழியின் அழகில் மயங்கிய சேவல்கள் தன் கொக்கரித்தலை மறந்து கொஞ்சிக்கண்டிருந்தது. பசுக்கள் தன் சமிக்ஞயை கதக்கிக்கொண்டிருந்தன. பசுக்களின் கொம்புகள் மற்றும் முதுகுபுறத்தில் சிட்டுக்குருவிகள் தன் அலகால் கொத்தி கொண்டிருந்தது. எதிர்வீட்டு வாசலில் இருந்த குப்பைகளை துடைப்பம் கொண்டு வீதியில் தள்ளிக்கொண்டிருந்தாள் மாரியம்மாள். சோம்பலை முறித்து வேலையை தொடங்கினாள் மாராக்கள். பசுக்களின் அருகில் கிடந்த மாட்டுச்சாணத்தை வாளியில் உள்ள தண்ணீருடன் கரைத்து வாசலில் தெளிக்கத்தொடங்கிய சிறிது நேரத்தில்....

"என்ன மாராக்கா, ரெண்டு நாளா ஆளையேக் காணோம்? ஏதாவது விசேஷமா?" என்றாள் மாரியம்மாள்.

கையில் வைத்திருந்த வாளியை கீழே வைத்துவிட்டு, "ஆமாண்டி. பேத்தி ஆளாயிட்டா. அதான் டவுனுக்கு போயிட்டு வந்தன்... ம்ம்ம்...." என்றால் மனத்தில் கனத்துடன்.

"அட நல்ல விஷயம்தானே. ஏன் இப்படி சலிச்சுக்கிற?" என்ற மாரியம்மாளிடம், "நல்ல விஷயம்தான். என் வூட்டுக்காரரோ இல்ல ஒரு பையனோ இருந்திருந்தா, என் பேத்தியோட சடங்க ஜாம் ஜாம்'னு பண்ணிருப்பேன். மூணாவது மனுசியாட்டம் போய் நின்னுட்டு வந்துட்டேன்" என்றாள் விரக்தியுடன்.

"சரி விடுக்கா. எல்லாம் நாம நெனைக்கிறதா நடக்குது." என மாரியம்மாள் கூறிமுடிக்கும்போது "நீங்கள் நல்லா இருக்கோணும் நாடு முன்னேற...." என்ற பாடல் ஒலிப்பெருக்கியில் கேட்டது. 

"என்னாடி பாட்டெலாம் பாடுது. யாராவது முக்கியமானவங்க வாரங்களா?" என்றாள் மாராக்காள்.

"ஆமாக்கா. அடுத்த மாசம் எலெக்சன் வருதுல. அதுக்குதான் இந்த பாட்டெலாம். நம்ம தலைவர் கட்சிக்காரர்தான் வராரு."

"நம்ம தலைவர் கட்சிக்காரருனு சொல்ற. அப்டினா நம்ம ஊருக்காரரா?"

"இல்ல இல்ல. நம்ம ஊரு இல்ல. எந்த ஊரா இருந்தா நமக்கென்ன? நம்ம ஓட்டு நம்ம தலைவருக்குதான" என்று மாரியம்மாள் கூறிமுடித்தாள்.

"ம்ம். அதுவும் சரிதான். ஆமா, நம்ம தலைவரு கட்சிக்கு எதிரா யாராரு நிக்கிறாங்க?"

" அதுவா? நம்ம ஊருலயே நிறையபெரு நிக்கிறாங்க. சிலபேரு எதிர்க்கட்சி சின்னத்துல நிக்கிறாங்க. சிலபேரு தனியா நிக்குறாங்க."

"தனியாவா? அது யாருடி நம்ம ஊருல அம்புட்டு பெரியாலு?"

"அட, நம்ம பொன்னாத்தா பேரன் பாண்டி இருக்கான்ல, அவன்தான் தனியா நிக்குறானாம்"

"எதுக்குடி அந்த பையனுக்கு இந்த வேலையெல்லாம்? படிச்சோமா, வேலைக்கு போனோமானு இருக்காம!"

"ம்க்கும்.. எங்க கேக்குறானுங்க. கொஞ்சம் படிச்சிட்டாலே துளிருட்டு போயிடுது. நாட்டை திருத்துறேன், போராட்டம் பண்றேன்னு கூடசுத்துற நாலுபேத்த சேத்துக்கிட்டு கெளம்பிடுதுங்க. இவிங்கள நம்பி எவன் ஓட்டு போடறானாம்"

"ம்ம்ம்.. அதுவும் சரிதான்."

"என்னாடி காத்தாலையே ரெண்டுபேரும் பொறணி பேசிட்டு இருக்கீங்க" என்ற குரல் பொன்னாத்தாளிடமிருந்து வந்தது.

திடுக்கிட்ட மாரியம்மாள் "வாக்கா. அட நீ வேற. இன்னிக்கு நம்ம ஊருக்கு தலைவரு வராறுல, அதைப்பத்திதான் பேசிட்டுருக்கோம்"

"தலைவரா? அதுயாரிடி?"

"ஆமா ஆமா.. வூட்டுலயே தலைவரு வந்துட்டாங்கள. இப்படித்தான் கேப்ப!" 

"அட விசயத்த சொல்லுடி."

"நம்ம பாண்டி எதோ எலெக்சன்ல நிக்குதாம். நம்ம தலைவர எதுத்து நின்னு ஜெயிக்க முடியுமா? எதுக்கு இந்த வேலையெல்லாம்?"

"எது நம்ம தலைவரா? 20 வருசமா நம்ம தலைவருன்னுதான் ஓட்டு போட்டோம். என்னத்த கண்டொம்! இந்த பசங்களெல்லாம் சேந்து இவன நிக்க சொல்லிருக்காங்க. இவனும் சரினு சொல்லிட்டானாம். இவ்ளோ பேசுறியே, ஏன் நீ பாண்டிக்கு ஓட்டு போடமாட்டியா?"

"அப்பிடி இல்லக்கா. நேத்துதான் ஓட்டுக்கு ரெண்டாயிரம்னு எனக்கும், உங்க தம்பிக்கும் சேத்து நாலாயிரம் குடுத்துட்டு போனாங்க. "இன்னிக்கு காத்தால 10 மணிக்கு தலைவரு வராரு சீக்கிரமா டவுன்ல பள்ளிக்கோடத்து கிரவுண்டுக்கு வந்துடுன்னு" நேத்து சாயங்காலமே கட்சிக்காரங்க வந்து கூப்ட்டு போயிட்டாங்க. அதான் சீக்கிரமே எந்திரிச்சி வேலைசெஞ்சிட்டு இருக்கேன்" என்றாள் மாரியம்மாள்.

மாராக்கள் இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே வாளியில் உள்ள சாணநீரை வாசலெங்கும் தெளித்துக்கொண்டிருந்தாள்.

தொடர்ந்த மாரியம்மாள், "கட்சி கூட்டத்துக்கு போனா, தனியா முன்னூறு ரூவாயும் சாப்பாடும் தரங்களாம். பொழுது வரைக்கும் வேலைசெஞ்சாக்கூட இருநூறு ரூவாதான் கிடைக்கும். இங்கபோயி ஒரு மூணு மணிநேரம் சும்மா ஒக்காந்துட்டு வந்தாலே முன்னூறு ரூவா தராங்க. இந்த முன்னூறு ரூவா இருந்தா, ஒரு மாசத்துக்கு பையன் டவுனுக்கு பள்ளிக்கோடம் போயிட்டு வந்துடுவான்" என்றாள் விரக்தியுடன்.

"போடி, போக்கத்தவளே. இந்த நாலாயிரத்தையும் அவன் கொடுக்குற முன்னூறையும் வச்சு எத்தன நாளைக்கு பொழப்ப? அதுக்குதான் இந்த பசங்களெல்லாம் சேந்து எலெக்சன்ல நிக்கிறாங்க. எங்கயோ இருக்குறவன நம்ம ஊருல நிறுத்திட்டு நம்ம தலைவரு கட்சி, நம்ம தலைவரு சின்னம்னு ஓட்டு போட்டதுக்கு, படிக்க பள்ளிக்கோடமும் இல்ல, ஏதாவது காச்சல், சளி வந்தாக்கூட டவுனு வரைக்கும் போறதா இருக்கு. நம்ம ஊருலயே, நம்ம கஷ்டத்த தெரிஞ்சவனா பாத்து ஓட்டு போடலாம். எவேவனுக்கோ ஓட்ட போட்டுட்டு, "தண்ணி வரல, கரண்டு வரலனு அழுவுறதுல ஒரு மண்ணும் இல்ல. நான் சொல்றத சொல்லிப்புட்டேன். உங்க இஷ்டம்." என்று கூறிவிட்டு நகர்ந்தாள் பொன்னாத்தாள்.

மாராக்காவும் மாரியம்மாளும் தன் அறியாமையை நினைத்து திகைத்து நின்றனர்.

நன்றி,
ஊமை இளைஞன்

நான் கண்ட சில மனிதர்கள்...



சமீபத்தில் பணிநிறைவு விழாவொன்றிற்குச் சென்றிருந்தேன். விழாவில் மொத்தம் 4 பேர் பணிநிறைவு பெறவிருந்தனர். மாலை 5 மணியளவில் விழா ஆரம்பித்தது. விழாவில் பணிநிறைவு பெறுபவர்களின் மனைவிகள், மகன்கள், மகள்கள், உறவினர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். அலுவலகத்தின் தலைமைச்  செயலாளர் முன்னுரையாற்றினார். பின்னர் ஒவ்வொரு துறையின் சார்பாகவும், பணிநிறைவு பெறுபவர் தங்களுக்கு செய்த உதவி பற்றியும், நன்னடத்தைகளை புகழ்ந்தும் வாழ்த்தியும் உரையாற்றினார். பணிநிறைவு பெரும் நான்கு பேருக்கும் நான்கு விதமான அனுபவங்கள். அவற்றில் மனம் கவர்ந்தது, முதலமானவரின் பணிநிறைவைக் காண அவரது தந்தையே தனது ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வந்திருந்தார். அவருக்கு வயது 90 முடிந்துவிட்டது. இன்றும் அவர் தன் உழைப்பினால் ஆட்டோ ஓட்டிக்கொண்டு தத்தம் செலவுகளை தானே சம்பாதித்துக்கொள்கிறாராம். அவரின் தன்னம்பிக்கை மற்றும் உழைப்பினைக் கண்டு சற்றுநேரம் வியந்தேவிட்டேன்.

இரண்டாவதாக பணிநிறைவு பெற்ற நபர் மாற்று மதத்தை சார்ந்தவர். இவர் அனைவரையும் மாமா மச்சான் என்றுதான் அழைப்பாராம். அவரையும் மாமா மச்சான் என அழைப்பதையே விரும்புவாராம். மதம் மற்றும் சாதிய பாகுபாடுகளை முற்றிலும் துறந்தவர் எனக்கூறினார்கள் அவரது அலுவலக நண்பர்கள். நாமும் மதங்களை மறந்து சாதியம் துறந்து மனிதராக மக்களோடு மக்களாக வாழ முயற்சிப்போம்.

மூன்றாவதாக, சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பேருந்தில் தொலைத்த நகையை தங்களுக்கு திருப்பிக்கொடுத்ததற்காக, அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, நகையை தொலைத்தவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு உதவிய நபரின் பணிநிறைவு விழாவில் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்கள். உடனிருப்பவர்கள், உறவினர்களே தங்களுக்கு உதவிய உறவுகளை மறந்திடும் இக்காலத்தில் 15 வருடங்களுக்கு முன்பு உதவிய ஒருவரை நியாபகம் வைத்து அவரது பணிநிறைவு விழாவில் கலந்துகொண்டு அவருக்கு பரிசுகளையும் வழங்குவதென்பது எவ்வளவு பெரிய விஷயம். நன்றி மறவா பண்புக்கு இவர்கள் ஒரு  எடுத்துக்காட்டு. இப்படிப்பட்டவர்கள் வாழும் இவ்வுலகில், நாம் எவ்வாறு இருக்கிறோமென்று எண்ணிப்பார்த்து நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்.

நான்காவது நபரின் மனைவி விழாவில் உரையாற்றினார். அவர் தன் கணவனைப் பற்றி, "பணிமுடிந்து எவ்வளவு நேரம்கழித்து வீட்டிற்கு வந்தாலும், காலையில் சீக்கிரம் எழுந்து தனது வேலைகளை பார்க்க ஆரம்பித்து விடுவார். அவர்(கணவர்) என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார். அன்பாக பழகுவார்" எனக்கூறுகையில், அவர் கணவர் எழுந்து," என்னைப் பற்றி என் மனைவி உயர்வாக கூறுகிறாள். இது முற்றிலும் உண்மையில்லை. உண்மையில் நான் எப்பொழுதும் டென்ஷனாகதான் இருப்பேன். மனைவி அருகில் பேசவந்தாலும் எரிந்து விழுவேன். அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" என உண்மையைக் கூறினார். மனிதரில் பல குணங்கள் உண்டு. அகமொன்று வைத்தும் புறமொன்று வைத்தும் பேசும் பலர். மற்றவர்களிடம் எவ்வளவுதான் லயமாக பேசினாலும், பழகினாலும் வீட்டில் சரியாக பேசாத சிரிக்காத மனிதர்கள் பலர் உண்டு. யாரோ செய்த செயலுக்கு தன்னை பாராட்டினாலும், அதை மறுக்காமல் ஏற்கும் நெஞ்சங்கள் நிறைய உண்டு. அப்படிப்பட்ட சமூகத்தில் வாழும் ஒருவர் "தான் இப்படித்தான். அந்த புகழுக்கு நான் சொந்தக்காரனில்லை" என உண்மையைக்கூறி கைத்தட்டல் வாங்கிய மனிதரை பார்த்து மனம் வாடியது.

நன்றி,
ஊமை இளைஞன்