Friday 31 January 2020

பெண்ணியமே (Feminisim) பெண்களின் எதிரி?


பெண்ணியம் (Feminism). இந்தச் சொல்லானது, சமீபகாலமாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும், ஏன் அடிக்கடி நம்மிடையேயும் வந்துபோகும் ஒரு தனிச்சொல். பெண்ணியம் என்ற சொல்லானது 18 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் (1837) பிரான்சு நாட்டின் சார்லஸ் பியரிர் (Charles Fourier) என்ற அறிஞரால் முதன்முதலில்  பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இந்தியாவில், 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னரே 'பெண்ணியம்' என்ற சொல்லானது பயன்படுத்தப்பட்டது. சமீபகாலமாக பெண்ணியம் என்ற சொல்லின் தாக்கம் பெண்களிடையே அதிகளவில் உள்ளது. அதற்குகாரணம், தற்போதைய சூழலில் பெண்களிடையே தாங்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்ற எண்ணத்தின் ஊடுருவலால் பெண்ணியம் என்ற சொல்லின் வளர்ச்சி அல்லது பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. உண்மையில், பெண்ணியம் என்றால் என்ன? என்பதைப் பற்றிய சிறுதொகுப்பே இந்தப்பதிவு. வாருங்கள் அறிவோம்!

பெண்ணியம் (Feminism):


பெண்ணியம் என்பது பாலின சமத்துவத்தை அடைப்படையாகக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அவர்களின் தேவையைப் பொருத்தும், சமூகத்தில் அவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டும் வரையறுக்கப்படுகிறது. அவை ஒவ்வொரு நாட்டிற்கும் அந்த நாட்டில் வகிக்கும் அரசின் அல்லது சமூகத்தின் நிலமையைப் பொறுத்து மாறுபடுகிறது. அதாவது, பெண்ணியம் என்றால் என்ன? என்று பெண்களிடம் கேட்டாலும், அவர்களின் பதிலானது ஒவ்வொரு காலகட்டத்திற்கும், நாட்டிற்கும், மாநிலத்திற்கும், கிராமம் மற்றும் நகரத்திற்கும் ஏன் ஒவ்வொரு பெண்ணிற்குமே பெண்ணியம் என்றால் என்ன என்பது மாறுபடுகிறது.

பெண்ணிய வகைபாடுகள்:

இதுவரை பெண்கள் தங்களை அடிமைப் படுத்ததலிலிருந்து கடந்து வந்த காலங்களை மூன்று அலைகளாக பிரிக்கலாம்.
முறையே, முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைகள். 



முதல் அலை பெண்ணியத்தில் பெண்களின் அரசியல் சார்ந்த உரிமைகள் பெறப்பட்டன. அதாவது, சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்களுக்கு மட்டுமே வழங்கியிருந்த வாக்களிக்கும் உரிமை பெண்களுக்கும் அளிக்கப்பட்டதுடன், அவர்களை அரசியலிலும் பங்கேற்க வைத்தது. இரண்டாம் அலை பெண்ணியத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான சொத்துரிமை, சமத்துவம், அலுவலகங்களில் ஆண்களுக்கு நிகரான பணிவாய்ப்பு முதலியன கிடைக்கப்பெற்றன. மூன்றாம் அலை பெண்ணியத்தில் பெண்ணின் இனப்பெருக்க அணுகல், பாலியல் வன்புணர்வு குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளுக்கு சட்டமியற்றுதல் முதலிய செயல்களுக்கு ஆதரவாக உருவெடுத்தது எனக்கொள்ளலாம். தற்போது நான்காவது அலையின் தொடக்கத்தில் உள்ளனர். நான்காம் அலையில் பெண்களின் வேலைவாய்ப்பு உரிமை மற்றும் ஆண்களுக்கு நிகரான சம்பளம், ஆட்சி மற்றும் அதிகாரம்  முதலியன அடங்கும். 

பெண்ணியத்தின் எதிரி பெண்ணே:

பெண்ணியத்தின் வகைப்பாடுகளைக் கொண்டு பெண்கள் அனைவரும் அந்த அலைகளை அடைந்தார்களா என உற்றுநோக்கினால், உண்மையில் சில சதவீதப் பெண்கள் மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளனர் அதற்குக் காரணம் யாரென பார்த்தால் அங்கே பெண்களே உள்ளனர். இந்த உண்மை பலருக்கு அதிர்ச்சியூட்டினாலும், உண்மையில் பெண்களின் நிலை உயராததற்கு பெண்களே காரணமாக அமைகின்றனர். பெண்ணியம் பேசிடும் மாந்தரில் பலர் பெண்களை கண்ணகிபோலும் சீதையைப்போலும் இருக்கவேண்டுமென்று கூறுகின்றனர். அதன்காரணம், புராணங்கள்  அனைத்தும் ஆண்களால் எழுதப்பட்டவை. அதனால்தான், பெண்களுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலிய நான்கு வகை குணங்களையும் ஆண்களுக்கு வீரம் என்னும் ஒற்றை குணத்தை மட்டும் தகுதியாய் வைத்து அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்தினர். பெண் என்பவள் இவ்வாறு நடக்கணும், இவ்வாறு பேசணும் என்று பாடமெடுக்கும் சமூகம் ஆண்களுக்கென்று எந்தவித கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுக்கவில்லை என்பதும் முக்கிய காரணமாக அமைகிறது. உடன், ஆண்கள் வகுத்த அத்தனையும் பின்பற்றுவோரை உயர்வாகவும், அதை மீறுவோரை கடுமையாகவும் விமர்சிக்கின்றனர். விமர்சனத்திற்கு பயந்தே பல பெண்கள் தங்களின் நிலையிலிருந்து முன்னேற மறுக்கின்றனர் என்பது நிதர்சனமாக உண்மை.

பெண்கள் என்ன செய்யவேண்டும்?

தற்போதைய பெண்கள், பெண்ணியம் என்பதை தவறாகவே புரிந்துகொண்டுள்ளனர். தங்களது விருப்பத்திற்கு ஏற்ப ஆடை அணிவது, ஆண்களைப்போல் புகைபிடிப்பது, மது குடிப்பது போன்ற செயல்களை பெண்ணியம் என நினைத்துக்கொண்டுள்ளனர் எனத் தோன்றுகிறது. உதாரணத்திற்கு, சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபாடு வேண்டுமென்று போராடிய பெண்கள், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் பெண்குழந்தைகளின் வாழ்வுக்காக, பெண்ணியம் பேசிடும் எந்தவொரு பெண்ணும் குரல் கொடுத்ததாக ஒரு செய்தியிலும் வரவில்லை என்பது இன்றும் பெண்கள் பெண்ணியத்தை தவறாகவே புரிந்துகொண்டுள்ளனர் என்பதை உறுதிசெய்கிறது. உண்மையில் பெண்ணியம் என்பது ஆண்களுக்கு கிடைக்கும் சமுதாயம் சார்ந்த உரிமைகளை, பெண்களுக்கு தேவையான ஆனால் சமுதாயத்தால் மறுக்கும் உரிமைகளை பெற போராடுவதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கான சமூக மாற்றத்தை நோக்கிப் பயணிக்கவேண்டும்.

நன்றி,
ஊமை இளைஞன்

No comments:

Post a Comment