Sunday, 12 January 2020

பணத்தின் வரலாறு....


பணம். இந்த ஒற்றை வார்த்தைக்கு மயங்காதவர் எவர். அதை கொடுக்கும்போது வேண்டாமென்று கூறுபவர்தான் எவர்? எனக்கு இவ்வளவு போதுமென்று கூறுபவர்தான் எவர்? தனிமனிதன் ஒருவன் பணத்தின் மீது கொண்ட ஆசையை, ஆசையின் எல்லையை யாரேனும் கணிக்க முடியுமா என்றால், நிச்சயம் கணிக்க முடியாது என்பதுதான் பதிலாக அமையும். உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகிய மூன்றும் மனிதனின் அடிப்படைத் தேவைகள் என படித்திருப்போம் ஆனால் இந்த மூன்று மட்டுமே ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கையை திருப்திபடுத்துவது இல்லை. ஏனென்றால், மனிதன் தன்னிடம் உள்ளனவற்றைக் கொண்டு என்றும் திருப்தி அடைவது இல்லை. காரணம், அவனது எண்ணம் தன்னைச் சார்ந்தவர்களையோ அல்லது மற்றவர்களையோ அல்லது தனது எதிரிகளையோ அதிகம் சார்ந்துள்ளது. ஆதலால், பணமானது மனிதனின் வாழ்வியலில் அத்தியாவசியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. சில நேரங்களில் அதீத பணத்தாசையின் விளைவாக பிறரை கொல்லும் அளவிற்கும் கொண்டு செல்கிறது. மனிதனே மனிதனைக் கொல்லும் சக்தியைக் அளவிற்கு ஆசையைத் தூண்டிய  இந்த பணம், முதன்முதலில் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றிய சிறு தொகுப்புதான் இந்த பதிவு.

பண்டமாற்று முறை:

இன்றைய நவீன உலகில் நாம், நாணயங்கள், காகிதப் பணம், காசோலை, வரைவோலை, இணையதளம் மூலம் பொருட்களை வாங்கவும் விற்கவும் உபயோகிக்கிறோம். ஆனால், ஆரம்ப காலங்களில் மனிதன் தன்னிடம் உள்ள பொருட்களைக்கொண்டு, அந்த பொருளின் மதிப்பிற்கேற்றவாறு, தனக்குத் தேவையான பொருட்களை பிறரிடமிருந்து பெற்றான். உதாரணத்திற்கு, காடுகளில் முயல் போன்ற விலங்கினங்களை வேட்டையாடி பின் அதனை பிறரிடம் கொடுத்து அதற்கு தகுந்த தானிய பொருட்களை வாங்கிக்கொண்டான். அதாவது, தங்களிடம் உள்ள ஆனால் மற்றவர்களிடம் இல்லாத பொருட்களை கொடுத்தும் வாங்கியும் கொண்டனர். இன்னும், சில கிராமங்களில் தாங்கள் செய்யும் விவசாய வேலைக்கு ஏற்ப, நாள் ஒன்றுக்கு சில படி நெல்லை கூலியாக பெறுகின்றனர். இவ்வாறாக, ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளை கொடுத்து வாங்குவதை பண்டமாற்று முறை என அழைத்தான். மனிதன் தனியாக வாழும்வரை அவனுக்கு அதிக பொருட்கள் தேவைப்படவில்லை ஆனால் நாளடைவில் மனிதர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து வாழுந்து கொண்டிருக்கும்போது, தங்களது உணவிற்கும் இன்னும் பிற தேவைக்கும் அதிக பொருட்களை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். நாளடைவில் இந்த பண்டமாற்று முறையானது பொருட்களிலிருந்து நாணயமாக உருவெடுத்தது. அதாவது வெள்ளி மற்றும் தங்கத்தாலான நாணயங்களை கொடுத்து பொருட்களை வாங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

முதல் நாணயம்:


உலகில் முதன்முதலில் நாணயமானது கிமு ஆறாம் நூற்றாண்டில், பண்டைய மேற்கு ஆசியாவின் லிடியாவில் (Lydia) அறிமுகப்படுத்தப்பட்டது எனவும், இந்த நாணயமானது வெள்ளி மற்றும் தங்கத்தின் கலவையினாலானது எனவும் கிரீக் நாட்டின் வரலாற்று ஆராய்ச்சியாளரான ஹெரோடோட்டஸ் கூறுகிறார். அதே நூற்றாண்டுகளில் இந்தியா மற்றும் சீனாவிலும் நாணயப் பயன்பாடு இருந்துள்ளது என சங்ககால இலக்கியங்களின் வாயிலாக அறிகிறோம். இவற்றில் எது உண்மையாயினும், உலகில் முதன் முதலில் நாணயத்தை உபயோகப்படுத்தியவர்கள் ஆசிய நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது உறுதியாகிறது.

ஆரம்பகால நாணயங்களில் அரசர்கள் மற்றும் விலங்கினங்களின் உருவங்களை நாணயத்தில் பதித்துள்ளனர். உதாரணத்திற்கு, தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களது நாணயத்தில் வில், அம்பு மற்றும் மீனின் உருவத்தை பதித்துள்ளனர். ஒவ்வொரு நாட்டு அரசும் அந்நாட்டு அரசர் அல்லது நாட்டின் விலங்கு உருவம் பொரித்த நாணயங்களை வெளியிட்டனர். அதேபோல், 1500 -களில் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் குடியேறிய பிரித்தானியர்கள், உள்ளூர் பண்பாடுகளுக்கேற்ப தனித்தனி நாணயங்களை தங்கள் வணிகத்திற்காக வெளியிட்டு பயன்படுத்தினர். வங்காளத்தில் முகலாயர்களைச் சார்ந்தும், சென்னையில் தென்னிந்தியர்களைச் சார்ந்தும் நாணயங்கள் உருவாக்கப்பட்டன. உதாரணத்திற்கு, மேற்கு இந்தியாவில் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர்களைச் சார்ந்தும் நாணயங்கள் வெளியாயின.

முதல் காகிதப் பணம்:


உலகின் முதல் காகிதப்பணமானது ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் சீனர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் உலகம் முழுவதும் பரவ 200 ஆண்டுகளுக்கும் மேலானது. இந்தியாவில் 18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே காகிதப்பணங்கள் முதன்முதலில் அச்சிடப்பட்டன. பேங்க் ஆப் பம்பாய், பேங்க் ஆப் மதராஸ் மற்றும் பேங்க் ஆப் பெங்கால் போன்ற தனியார் நிறுவனங்கள் காகிதப்பணத்தை அச்சிட்டன. காகிதப்பணங்கள் அச்சிடும் உரிமையை இந்திய அரசு (அன்றைய ஆங்கில அரசு) கொண்டிருந்தது. 1934-ல் தொடங்கப்பட்ட ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, நான்கு வருடங்கள் கழித்து 1938 -ல் முதன்முதலில் 5 ரூபாய் காகிதப்பணத்தை வெளியிட்டது. அதே ஆண்டில் ரூ.10, ரூ.100 மற்றும் ரூ.1000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.

சுதந்திர இந்தியாவில் நாணயங்கள் மற்றும் காகிதப்பணங்கள்:

இந்திய சுதந்திரத்திற்க்குப் பிறகும் சில வருடங்கள் இந்த நாணயங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. அதன்பின்னர், 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று இந்த நாணயங்களுக்குப் பதிலாக "அணா" என்ற பெயரில் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நாணயங்களில் அரசர் மற்றும் விலங்குகள் உருவத்திற்குப் பதிலாக அசோகரின் மூன்று சிங்கங்கள் கொண்ட நாட்டுச் சின்னம் பொறிக்கப்பட்டது. ஒரு ரூபாய் நாணயத்தில் தானியக் கதிர் பொறிக்கப்பட்டது. இவ்வாறான பல வரலாற்றுக்களைக் கொண்ட பணமானது மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டது. அவர்களுக்குள் பிரிவினையை தூண்டியது.

மனிதம் மறைத்த பணம்:

மனிதர்கள் வாழ்வதற்காகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யவும் உருவாக்கப்பட்ட பண்டமாற்று முறையானது பின்னாளில் மனிதர்களே மனிதர்களை கொல்லுமளவிற்கு மனதை மாற்றியது. ஆம், மனிதன் குழுவாக வாழ ஆரம்பித்தப்பிறகு பண்டமாற்றுக்கு பதிலாக உபயோகப்படுத்தப்பட்ட நாணயங்கள் மற்றும் காகிதப்பணங்களை தனக்கும் தான்சார்ந்த உறவினர்களுக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும் சேமிக்கத் தொடங்கினான்.

அதிக சேமிப்பு அவனை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றது. அதிக பணம் அதிகாரத்தைத் தந்தது. அதிகாரமும் பணமும் இணைந்து அவனுள் மாற்றத்தைத் தந்தது. தான்தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் அவனுள் புகுந்துகொண்டது. அதன்விளைவாக அவன் உடன் இருந்தவர்களைவிட்டு விலகிநின்றான். ஒருகட்டத்தில் தன்னையும் மறந்து பணத்தின்மீது மோகம் கொண்டு நினைத்ததையெல்லாம் நடத்திட ஆசைகொண்டான். ஆசை பேராசையாகி அனைத்தையும் தனதாக்கிக்கொள்ள விரும்பினான். போட்டி பொறாமை பேராசை என அனைத்தும் இணைந்து மனிதனுக்கு மனிதம் மறைந்து பணம் என்னும் மதம் பிடித்தது. மதமானது இல்லாதவர்களை அடிமையாக்க நினைத்தது. பணமுள்ளவர்கள் ஒருபுறமும் இல்லாதவர்கள் மறுபுறமும் வசிக்க தொடங்கினர். இல்லாதவர்களை விலக்கிவைத்து அவர்களின்மீது சாதி என்னும் தீயை வைத்தனர். அன்று வைத்த தீயானது இன்றும் எரிகிறது. அணைக்க சிலர் முயல்கின்றனர் ஆனால் அவர்களின்மீதும் பலர் தீமூட்டுகின்றனர். என்று அணையுமோ இந்தத் (சா)தீ... காத்திருக்கிறேன்...

கனவுடன்,
ஊமை இளைஞன்

No comments:

Post a Comment