Tuesday, 18 February 2020

சத்துணவு திட்டத்தின் தந்தை - எல்.சி.குருசாமி


மூன்று வயதே ஆகியிருந்த நான், எனது தாயார், தமையனார் மூவரும் பட்டினி கிடந்தபோது, பக்கத்துவீட்டுத் தாய் முறத்தில் வைத்து அரிசி கொடுப்பார். அதைக் கஞ்சியாகக் காய்ச்சி, சாப்பிட்டிருக்காவிட்டால், நாங்கள் இந்த உலகத்தை விட்டே மறைந்திருப்போம். பசித்தால் அழமட்டுமே தெரிந்த வயதில், பசிக்கொடுமைக்கு ஆளாகும் அனுபவத்தை நான் இளமையில் அறிந்ததன் விளைவுதான் இந்தத் திட்டம்" என்று தனது சத்துணவு திட்டத்தின் துவக்க விழாவில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் கூறியிருந்தார். அத்துடன், இந்த சத்துணவு திட்டமானது தனது கனவு திட்டம் எனவும் கூறியிருந்தார். அப்படிப்பட்ட திட்டத்திற்கு முதன்முதலில் அடிக்கல் நாட்டியவர் யார் என்ற கேள்வி எழும்போது நம் நினைவிற்கு வருவது இருவர் மட்டுமே. ஒருவர் கர்மவீரர் காமராசர், மற்றொருவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆனால் உண்மையில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்திற்கு முதன்முதலில் அடிக்கல் நாட்டியவர் ராவ் சாகிப் எல் சி குருசாமி அவர்கள். ஆம், அவரைப் பற்றிய சிறுதொகுப்புதான் இந்தப்பதிவு.

எல்.சி. குருசாமி:


1885 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிறந்த குருசாமி அவர்கள் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியில் 10 ஆண்டுகள் சட்டமேலவை உறுப்பினராகவும் (1920 - 1930), 22 ஆண்டுகள் கௌரவ நீதிபதியாகவும் பதவி வகித்தார். "மக்களின் தாழ்வு மனப்பான்மை நீங்க வேண்டுமாயின் ஆதிக்குடிமக்கள் வெளியரங்குக்கு வந்து, தாங்கள் தங்கள் பிறப்பினால் பெருமை அடைவதாகச் சொல்லவேண்டும்" என வலியுறுத்தினார் அத்துடன் ' கல்வி பயில மக்கள் தவறுவார்களானால் அது மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் தீங்கு விளைவிக்கும்" எனவும் எச்சரித்தார். அரசுப் பணிகளில், பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று நம்பிக்கை உடையவர்களைச் சேரிகளில் பணி செய்ய நியமனம் செய்வது, பயனற்ற ஒன்று. சேரிகளில் உண்மையாகவே சிறப்பான அளவுக்கு பணிகள் நடைபெற வேண்டும் என நீங்கள் விரும்பினால், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்யுங்கள் என வலியுறுத்தினார். 

இரவுப் பள்ளிகள்:

தலித்துகளிலும் தலித்துக்கள் என்று அழைக்கப்பட்ட அருந்ததியர்கள் நலனுக்காக, 1921-ல் அருந்ததிய மகாசபா என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, அதன் தலைவராக குருசாமியும், செயலாளராக எச்.எம். ஜெகநாதமும் செயல்பட்டனர். இவ்விருவரும், சென்னை மாகாண அவை உறுப்பினர்களாக பொறுப்பு வகித்ததால், அருந்ததிய மகாசபா பொறுப்பினை அருந்ததியர் மற்றும் இதர ஒதுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடும் களமாக பயன்படுத்திக் கொண்டனர். 

பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்த அக்காலங்களிலேயே பெண்கள் கல்வி கற்கவேண்டும் எனவும், ஆண்களுக்கு நிகரான கல்வியைப் பெறுவதற்கு, இருபாலர் பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஆரம்பம் முதலே மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்பட்ட இவர்கள், பகலில் வேலைக்குச் சென்று இரவு வீடு திரும்பும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக இரவுப் பள்ளிகளை திறக்க எண்ணினர். அதன் முயற்சியாக,  1921ஆம் ஆண்டு, சென்னையில் புளியந் தோப்பு, சூலைமேடு, பெரியமேடு ஆகிய பகுதிகளில் இரவுப்பள்ளிகளையும், பெரம்பூரில் இரவு மற்றும் பகல் பள்ளிகளையும் தொடங்கி 1929 ஆம் ஆண்டுவரை நடத்தி வந்தனர். இந்த ஐந்து பள்ளிகளின் தாளாளராக, குருசாமி அவர்களே செயல்பட்டார். ஆசியர்களுக்கான சம்பளம் உட்பட இதர செலவினங்களுக்கான நிதியை, தொழிலாளர்துறை சார்பில் பள்ளியின் தாளாளர் குருசாமி மூலம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவருக்கு எவ்விதமான சம்பளமும் வழங்கப்படவில்லை. சமுதாயப் பணியில் தலைமைப் பாங்குடன் பணியாற்றிய இந்தியர்களை கௌரவிக்கும் வகையில் 1927 ஆம் ஆண்டு அவருக்கு 'ராவ் சாகிப்' என்ற விருது அளிக்கப்பட்டது. 

மதிய உணவுத் திட்டம்:


”எங்களது குழந்தைகளின் உடனடியான தேவைகளில் ஒன்றாகக் கல்வி அமைகின்றது. அக்குழந்தைகளுக்கு அரசு வழங்குகிற வசதிகள் என்பவைகூட கல்வியில் நாட்டம் செலுத்த அவர்களைத் தூண்டப் போதுமானவையாய் இல்லை என்கிற அளவுக்கு எங்களது வறுமை கொடுமையானதாக உள்ளது. அரசின் செலவில் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு நேர உணவையாவது அவர்கள் பெறக்கூடிய அளவிற்கு, அவர்களது கல்விக்காகக் கூடுதல் தொகை செலவு செய்யப்பட வேண்டும்.”  என 1923 - ஆம் ஆண்டே அன்றைய நீதிக்கட்சியின் சட்டமேலவை உறுப்பினராக இருந்த எல் சி குருசாமி உரையாற்றினார். அதன்வாயிலாகவே, "பசியோடு வந்து, பசியோடு படித்து, பசியோடு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு, பள்ளிகளிலேயே ஒருவேளை உணவு வழங்கப்படும் " என, சென்னை மாகாணத்தின் அன்றைய மேயர் திரு. பி.டி. தியாகராஜன் அவர்களால் சென்னையிலுள்ள சேத்துப்பட்டு, கோரப்பாளையம் முதலிய பகுதிகளில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் (Midday Meal Scheme) ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இந்த மதிய உணவுத் திட்டமானது, மாணவர் ஒருவருக்கு வழங்கப்படும் உணவின் செலவானது ஒரு அணாவை மிஞ்சக்கூடாது என்ற நிபந்தனையுடன் நிறைவேற்றப்பட்டது. மதிய உணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. ஆரம்பத்தில், இந்த திட்டமானது சென்னை மாகாணத்தில் மட்டும் செயல்படுத்தப்பட்டது. நாடெங்கிலும் செயல்படுத்த திட்டமிட்ட அரசு எண்ணியபோது, மாணவர் சேர்க்கை அதிகரித்ததால், உணவிற்கு ஆகும் செலவானது அதிகரித்தது. எனவே அன்றைய ஆங்கிலேய அரசானது இந்தத் திட்டத்தை கைவிடுமாறு ஆணை பிறப்பித்ததுடன் அதற்கான நிதியையும் நிறுத்தியதால், 1925 ஏப்ரல் 1 முதல் மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது. அதன்விளைவாக, பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகை குறைந்தது.

இந்தத் திட்டத்தின் நீட்சியாகவே, 1955 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி, காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டுவந்தார். ஆனால் அரசுக்கு நிதிநெருக்கடி ஏற்பட்ட காரணத்தால், இதற்கு ஆகும் செலவில், 60 சதவீதம் அரசும், 40 சதவீதம் மக்களிடமும் பெறப்பட்டது. அதன்பின்னர், எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழகம் முழுவதும், பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், அங்கன்வாடி மையங்களை தோற்றுவித்து சிறு குழந்தைகளும் பசியாறும் வண்ணம் வழிவகை செய்தார். அதன் தொடர்ச்சியாக, எம்.ஜி.ஆர் காலத்தில் சத்துணவு திட்டத்தை எதிர்த்த கலைஞர், தான் ஆட்சிக்கு வந்தபிறகு, மதிய உணவில் முட்டை சேர்த்தார், ஜெயலலிதா மதிய உணவோடு முட்டை உண்ணாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் சேர்க்க, அவர்களுக்கு பின்னர் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்தாண்டு (2020), பள்ளிகளில் காலை உணவை கொடுக்க வழிவகை செய்துள்ளார். 

அரசு செயல்படுத்தும் சில இலவசத் திட்டங்கள், சிலருக்கு 'வீண் செலவு' என்று நினைக்கலாம், சிலருக்கு தேவையில்லாததாகவும், தவறாகவும் தோன்றலாம் ஆனால் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தால், கடைக்கோடியில் உள்ள ஏதோ ஒரு குடும்பம், அந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து கொண்டிருக்கின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. 

இன்றைய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள், தனியார் பள்ளிகளில் படிப்பதையே கௌரவமாக எண்ணுகிறார்கள். ஆதலால் அரசு பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர். தனியார் பள்ளிகள், தினம் ஒரு பழம், அந்த பழத்தின் வண்ணத்திற்கேற்ப உணவு மற்றும் உடையை உடுத்திவரச் சொல்கிறார்கள். கல்வியை அறிவாக பார்க்காமல் கௌரவமாக பார்த்ததன் விளைவு, தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு தங்களது தகுதியை மீறி கடன்வாங்கி படிக்க வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அன்றைய பள்ளிகள், மாணவர்களின் நலனை, பசியை, நிலையை கருத்தில்கொண்டு, மாணவர்களை பள்ளிக்குவர வரவைத்து உண்ண உணவளித்து, அறிவுப்பசியுடன் வயிற்றுப்பசியையும் தீர்த்தனர். அப்படி வரவைத்து அவர்களின் பசியை தீர்க்க போராடியதில் முக்கியமான பங்குவகித்தவர் எல்.சி. குருசாமி அவர்கள். அவரைப் போற்றுவோம்


நன்றி,
ஊமை இளைஞன்

1 comment:

  1. முதலில் மதிய உணவு திட்டம் ஆரம்பித்தது அன்று நீதிகட்சியின் ஆட்சியின் போது முதலமைச்சராக இருந்த திரு சுப்பராயலு என்று படித்தேன்.
    பிறகு அத்திட்டத்தை ஆரம்பிக்க காரணமாக இருந்தவர் அப்போதைய மேயராக இருந்த திரு பி டி தியாகராயர் என்று அறிந்தேன்.
    இப்போது தான் மதிய உணவு திட்டம் ஆரம்பிக்க மூல காரணமாக இருந்தது திரு எல் சி குருசாமி அவர்கள் என்று.
    வாழ்க அவரது புகழ்.🙏🙏🙏
    இது குறித்து என்னை போன்று தெரியாதவர்களுக்கு தெரியும் வகையில் வழி செய்த தங்களுக்கும்🙏🙏🙏

    ReplyDelete