Sunday 17 November 2019

உலகின் சிறந்த மற்றும் மோசமான சாலைகள் கொண்ட 10 நகரங்கள்


உச்சநீதிமன்றம் வாகன ஓட்டிகள்
அனைவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணியவேண்டும் என பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால், நாட்டிலுள்ள  சாலைகளின் தரத்தையும் அவற்றால் ஏற்படும் விபத்துக்களையும் நீதிமன்றம் கணக்கில் கொள்ளாதது அனைவருக்கும் ஏமாற்றமே. இந்தநிலையில், சமீபத்திய ஆய்வறிக்கையொன்று நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம், உலகின் மிக மோசமான சாலைகளைக் கொண்ட 100 நகரங்களின் வரிசையில் இந்தியாவின் மும்பை நகரம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கை வந்துள்ளது.

உலகின் சிறந்த மற்றும் மோசமான சாலைகள் கொண்ட 10 நகரங்கள் 

ஐரோப்பாவின் கார்கள் உதிரிபாகங்கள் தயாரிக்கும் மிஸ்டர் ஆட்டோ என்ற நிறுவனம், வாகன எரிவாயு, சாலையின் அமைப்பு, சாலை வரி போன்ற 15 அம்சங்களைக் கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், இந்தியாவின் மும்பை நகரம் நூற்றுக்கு ஒரு மதிப்பெண் மட்டுமே பெற்று கடைசி இடமான 100-வது இடத்தைப் பெற்றுள்ளது. 


உலகின் சிறந்த சாலை அமைப்பு  கொண்ட முதல் 10 நாடுகளில் கனடாவின் கல்கரி முதலிடத்திலும், ஐக்கிய நாட்டின் துபாய் இரண்டாவது இடத்திலும், கனடாவின் மற்றொரு நகரமான ஒட்டாவா மூன்றாவது இடத்திலும் உள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன், உலகின் மிக மோசமான சாலை அமைப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களில் இந்தியாவின் மும்பை முதலிடத்திலும், மங்கோலியாவின் உடான்பாட்டார் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் மற்றொரு நகரமான கொல்கத்தா மூன்றாவது இடத்திலும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

சாலைகளும் சட்டங்களும்:

சமீபத்தில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி, வாகன விதிகளை மீறுவோருக்கு பின்வரும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன: 

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம். 

இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்தால் ரூ.2,000 அபராதம். 

சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம். 

செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவோர்களுக்கு ரூ.1,000  முதல் ரூ.5,000 வரை அபராதம்.

ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் செல்வோருக்கு ரூ.10,000 அபராதம்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 5,000 அபராதம்.

மதுபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.10,000 அபராதம்.

வேகமாக வாகனம் ஓட்டினாலோ அல்லது ரேஸிங்கில் ஈடுபட்டாலோ ரூ.5,000 அபராதம்.

அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ஒரு டன்னிற்கு ரூ.2,000 அபராதம்.

அரசு இயற்றிடும் சட்டங்களை மக்கள் பின்பற்றவேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டிருக்கும் நீதிமன்றம், அவர்கள் பயணம் செய்யும் சாலைகளின் தரத்தையும் சோதித்து அதன்பின்னர் சட்டம் இயற்றினால் நன்றாக இருக்கும். மோட்டார் வாகன சட்டத்தை மீறுவோருக்கு அதிக அபராதம் வசூலிப்பது தவறில்லை ஆனால் அபராதம் வசூலிப்பதற்குமுன் அரசு மக்களுக்கு சரியான சாலைவசதியை அமைத்துள்ளதா என சரிபார்க்கவேண்டும். 

நன்றி,
ஊமை இளைஞன்  

No comments:

Post a Comment