Friday, 15 November 2019

பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து உருவாகும் செங்கற்கள்


பிளாஸ்டிக் கழிவுகளை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால் , அடுத்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் சுமார் 12 இலட்சம் கோடி கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் பூமியில் இருக்கும் என உலகப் பொருளாதார மையம் கூறுகின்றது. இந்தியாவில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உண்டாக்குப்படுவதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறாக, உலகில் பிளாஸ்டிக்குகளின் ஆதிக்கம் மேலொங்கிய நிலையில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்  கூடாது மீறினால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அரசு சட்டம் இயற்றினாலும் சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்களைத் தவிர்த்து பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தவர்கள் யாருமில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்குப் பிறகும் பெருவணிகர்கள் மற்றும் நிறுவனங்களில் பிளாஸ்டிக்குகளை பயன்படுத்திதான் வந்தனர் என்பதுதான் உண்மை. ஒருபுறத்தில் பிளாஸ்டிக்கினால் தீமைகள் இருந்தாலும், பிளாஸ்டிக்கினால் சில நன்மைகள் உள்ளன என்பதும் மறுக்கமுடியாத உண்மை. அந்தவகையில், சமீபத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் செங்கற்கள். 

பிளாஸ்டிக் செங்கற்கள் தயாரிக்கும் முறை: 


குப்பைகளில் வீணாகக் கிடக்கும் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் வேறுசில பிளாஸ்டிக் கழிவுகள் தண்ணீரைக் கொண்டு தூய்மைப்படுத்தப்படுகிறது.

தூய்மைப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் நன்கு உலர்த்தப்பட்டபின்பு அரவை இயந்திரத்தின்மூலம் மணல்​ ​போன்று நன்றாக தூள் செய்யப்படுகிறது.​​

தூளாக்கப்பட்ட ​​பிளாஸ்டிக் துகள்கள் நன்கு சூடேற்றப்பட்டு திரவநிலைக்கு மாற்றப்படுகிறது. பின்பு அதனுடன் ஆற்றுமணல் சேர்க்கப்பட்டு கலக்கப்படுகிறது.​​ பின் திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு மாற்ற குளிர்விக்கப்படுகிறது.​ திடநிலைக்கு மாற்றம் செய்த செங்கற்கள் அளவிற்கேற்றவாறு தனித்தனியாக வெட்டப்படுகிறது.​

இவ்வாறாக உற்பத்தி செய்யப்பட்ட செங்கற்கள், 180 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவைத் தாங்கும் திறன் மற்றும் 20 டன் எடையைத் தாங்கும் சக்திகொண்டதாக உள்ளது​.​ ​தரைதளத்திற்கு கற்களை தயாரிக்கும்போது மட்டும் அதனுடன் ரெட் ஆக்சைடுகள் சேர்க்கப்படுகின்றன. ​​​

​மேற்கண்ட முறையில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களுடன் (60 சதவீதம்), 20 சதவீத சிமெண்ட் மற்றும் கிரானைட் கற்கள் சேர்த்து அரைக்கப்பட்டு பிளாஸ்டிக் ஜல்லிகள் தயாரிக்கப்படுகிறது. ​

பிளாஸ்டிக் செங்கற்கள் பயனுள்ளதா?

பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பிளாஸ்டிக் கழிவுகளும் அதிகஅளவில் பெருகிவருகின்றன. அதனுடன், மணல், சிமெண்ட் மற்றும் செங்கற்களின் விலையும் கூடிவருகிறது. பிளாஸ்டிக் பொருட்களை முழுவதும் அழிக்கமுடியாது என்ற நிலையில், இதுபோன்று மறுசுழற்சி செய்து அவற்றை பயன்படும் வகையில் உற்பத்தி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிளாஸ்டிக் செங்கற்கள் அதிகபட்சம் 180 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை மட்டுமே தாங்கக்கூடியது. அதிக அளவிலான வெப்பம் ஏற்படும்போது உருகும் நிலைக்குத் தள்ளப்படும். 


சாதாரண இயற்கையான சூழலில் கிடைக்கும் கற்களினால் வீட்டின் உள் பகுதியில் சற்று குளிர்ந்து காணப்படும். ஆனால் இந்தவகையில் கட்டப்படும் கட்டிடங்களினால் இயற்கையாகவே சற்று வெப்பசலனத்துடன் காணப்படும். ஆற்றுமணல் கொள்ளை ஓரளவுக்கு குறைந்துவிடும். 

பெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டில் எத்தனையோ பேர் வீடில்லாமல் உள்ளனர். அரசு அளிக்கும் திட்டத்தின்மூலம் வீடு கட்டிக்கொள்ளும் எத்தனையோ குடும்பங்கள் இன்றளவும் உள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகளின் மூலம் தயாரிக்கப்படும் செங்கற்கள் மற்றும் தரைதள கற்களுக்கு செலவிடும் தொகை மிகக்குறைவு என்பதுடன் சுற்றுச்சூழலையும் மக்களையும் அதீத குப்பைகளிலிருந்து பரவும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. நிச்சயம் இவை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே நம் கருத்து. 

நன்றி,
ஊமை இளைஞன்  

No comments:

Post a Comment