தினமும் தண்ணீருக்கு அடுத்ததாக அதிகளவு குடிக்கும் பானம் தேநீராகத்தான் இருக்கும். அது எப்படி உருவானது என்பதை என்றாவது நாம் யோசித்திருப்போமா? வாருங்கள் பார்ப்போம்.
தேநீர் செடி பற்றிய சீனக்கதைகள்:
கிமு 2737 களில், சீனாவைச் சார்ந்த 'ஷென்னாங்' என்ற வேளாண் மருத்துவர், மூலிகைச்செடிகளின் மகத்துவத்தை கண்டுபிடிக்கும் நோக்கில் மலைப்பகுதிகளுக்கு சென்று அங்கு கிடைக்கும் பல்வேறு விதமானச் செடிகளை மென்று ஆராய்ந்து வந்தார். சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட செடிகளை உண்ட ஷென்னாங், மலைப்பகுதியில் அலைந்து திரிந்து களைப்புற்று அமர்ந்திருந்த நேரத்தில், அருகில் தளதளவென்று வளர்ந்து நின்ற ஒரு செடியின் இலையினை மென்று சுவைத்தார். களைப்புற்றிருந்த அவருக்கு, அந்த செடியினை உண்டபின்பு புத்துணர்ச்சி கிட்டியது. அந்த செடிதான், இன்று நாம் விரும்பி சுவைக்கும் தேநீர் தயாரிக்க பயன்படும் தேயிலை செடி என்று சீனக்கதையொன்று கூறுகிறது.இன்னொரு கதையில், வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் ஷென்னாங் என்னும் சீனப் பேரரசன், சுடுநீர் அருந்திக்கொண்டிருக்கும், அருகிலிருந்த செடியிலிருந்து பறந்து வந்த இலைகள் அருந்திக்கொண்டிருந்த சுடுநீரில் விழுந்தனவாம். அப்பொழுது, சுடுநீரின் நிறம் மாறியதுடன், சுடுநீரிலிருந்து வந்த வாசனையை முகர்ந்தபோது அவனுக்கு புதுவிதமான உற்சாகத்தைக் கொடுத்ததாம். அதிலிருந்து சீன மக்கள் அதனை உண்டு வந்ததாக மற்றொரு கதை கூறுகிறது.
மற்றொரு கதையில், ஒரு பௌத்த துறவி தியானம் செய்யும் பொழுது அடிக்கடி துாங்கிவிடுவாராம். தன் தூக்கத்தினால்தான் ஞானம் அடைய முடியவில்லை என எண்ணி தியானத்தின்போது துாங்காமல் இருப்பதற்காக, தனது இமைகளை வெட்டி வீசிவிட்டு தியானம் மேற்கொண்டு ஞானத்தை அடைந்தாரம், அவர் இமைகளை வீசிய இடத்தில் சில நாட்கள் கழித்து ஒரு செடி முளைத்ததாம். அந்த செடிதான் தேநீர் செடி. அதனால்தான், தேயிலையிலிருந்து இலையிலிருந்து கிடைக்கும் தேநீரை அருந்துவோர்க்கு துாக்கம் போய் உற்சாகம் வருகின்றது என்றொரு சீனக்கதையும் உள்ளது.
மேற்கண்ட கதைகளில் உண்மை எதுவாயினும், தேநீரின் பிறப்பிடம் சீனா என்பது உறுதியாகிறது.
தேயிலை உற்பத்தி வளர்ச்சி:
4000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, சீனாவில் பயிரிடப்பட்டு வந்த தேயிலையானது, முதலில் தற்போது நாம் உண்ணும் கீரையைப்போல் உணவாக பயன்படுத்தப்பட்டது. நாளடைவில், உணவிற்குப் பதிலாக பானமாக மாறியது. ஆரம்பகால சீன இலக்கியங்கள் ஒவ்வொன்றிலும் தேநீரானது முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஜப்பானைச் சார்ந்த துறவி ஒருவரின் சீன வருகைக்குப்பின்னர், தேயிலை ஜப்பானை அடைந்து அங்கும் பயிரிடப்பட்டது. அதன்பின்னர், டச்சுக்காரர்கள் தேயிலை வணிகத்தைக் சீனாவுடன் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் பரப்பினர். அது தனது அண்டைநாடான பிரான்சையும் அடைந்தது. முதலில், தேநீரின் மருத்துவ குணத்தைக் கொண்டே உலகம் முழுவதும் பிரபலப்படுத்தப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் தேநீர் பற்றிய செய்தி பரவியது.
TEA- என்பதன் விரிவாக்கம்:
இங்கிலாந்தின் அரசர் சார்ள்ஸ் மற்றும் போர்ச்சுக்கீசிய இளவரசியான கேத்தரின் ஆஃப் ப்ரகான்ஸா திருமணத்தின்போது தேயிலை திருமண சீர்வரிசைகள் அளிக்கப்பட்டது. தேயிலை அடங்கிய அந்தப்பெட்டியில் 'Transporte de Ervas Aromalsicus' என அச்சிடப்பட்டிருந்தது. அதன் முதல் மூன்று எழுத்துக்களே TEA என அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் மோட்சா (Motcha) என்று அழைக்கப்பட்ட தேயிலைக்கு TEA எனப் பெயர்வந்ததற்கு, சார்ள்ஸ் மற்றும் கேத்தரின் அவர்களின் திருமணம் முக்கிய காரணம்.
தேநீரின் பிறப்பிடம் சீனாவாக இருந்தாலும் முதன்முதலில் தேநீரில் பாலை கலந்து குடித்தது ஐரோப்பிய நாடுகள்தான். அதனைத் தொடர்ந்து பிரித்தானிய நாடுகள், மேற்கு இந்தியத் தீவுகளிலுருந்து கொண்டுவரப்பட்ட கரும்பு சர்க்கரையை தேநீருடன் சேர்த்து பருகினார். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமாக தேநீர் தயாரிக்கபடுகிறது. இந்தியாவில் தேநீருடன், பால் , இஞ்சி, ஏலக்காய் சேர்க்கப்பட்டு பரிமாறப்படுகிறது. நேபாளத்தில், உப்பு மற்றும் பால் சேர்க்கப்படுகிறது.
பிரித்தானிய நாடு - சீனா தேயிலை போர்:
சீனாவில் விளையும் தேயிலைகளைப் பெறுவதற்கு வெள்ளிக்காசுகளை கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். நாளடைவில் வெள்ளிக்காசுகளின் தட்டுப்பாடு ஏற்படவே, பிரித்தானிய அரசு மேற்குவங்காளத்தில் விளைந்த ஓபியம் என்ற போதைச்செடியினை கொடுத்து தேயிலையை வாங்கினர் . ஆனால், ஓபியத்திற்கு பெரும்பலான சீன மக்கள் அடிமையாகவே சீனா அரசு ஓபியத்தை தடைசெய்ய முடிவெடுத்து ஹாங்கோங் கடற்கைரைப் பகுதியில் நின்றிருந்த கப்பல்களில் உள்ள ஓபியத்தை அழித்தது. கோபம்கொண்ட பிரித்தானிய அரசு, சீனாவின்மீது மூன்றுமுறைப் போர்தொடுத்து வென்றது.
இருப்பினும், சீனாவின் தேயிலை உற்பத்தி மற்றும் விதையின் தன்மைபற்றி அறியமுடியவில்லை. எனவே, பிரித்தனியா அரசு, 1848-ல் தாவரவியல் அறிஞரான ராபர்ட் போர்சூன் (Robert Fortune) என்பவரை இரகசிய உளவாளியாக அனுப்பி தேயிலையின் உற்பத்தி பற்றி அறிந்துகொண்டபின்னர், தேயிலை சாகுபடியில் தேர்ச்சிபெற்ற 80 விவசாயிகளுடன் திரும்பி இந்தியாவில் உள்ள டார்ஜிலிங் பகுதியில் பயிரிட்டு வென்றனர். இதைத்தொடர்ந்து, இந்தியாவின் நீலகிரி, இலங்கையின் கண்டி மற்றும் கென்யாவிலும் பயிரிடப்பட்டு உலகம் முழுவதும் பெரும் வணிகப்பொருளாக மாறியது.
தேயிலை உற்பத்தியில் இந்தியா:
இந்தியாவில் தேயிலை உற்பத்தியானது அசாம் , நீலகிரி மற்றும் டார்ஜிலிங் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இங்குவிளையும் தேயிலைக்கு சிறப்பு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் தேயிலை உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. உலகில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையில் 25 சதவீதம் இந்தியாவிலிருந்து பெறப்படுகிறது.
உலக அளவில் நான்காவது ஏற்றுமதியாளராகவும், இந்தியா இருக்கிறது. இதில், 2015 -16-ல், 4,467 கோடி ரூபாய்க்கும், 2016-17ல், 4,602 கோடி ரூபாய்க்கும், 2017-18-ல் 5,059 கோடி ரூபாய்க்கும் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
வரலாறுகள் பல கொண்ட தேநீரானது, மன அழுத்தம் மற்றும் நுரையீரல் பாதிப்புகளை குணப்படுத்துவதாக கூறப்படுகின்றது. அத்துடன், டிசம்பர் 15 ஆம் நாளானது தேயிலை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
நன்றி,
ஊமை இளைஞன்